திங்கள், 25 ஜனவரி, 2016

சிறு வயது பொங்கல்

பொங்கல் சில நினைவுகள்


                   பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது எனது குழந்தை பருவம்தான். கவலைகளே அறியாத அந்த வயதில் எப்போதடா பொழுது விடியும், புத்தாடை அணிந்து பாட்டி வீட்டுக்கு செல்வோம் என மனது விடியலை எதிர்பார்த்து காத்துக கொண்டிருக்கும். பாட்டி வீடு எங்கள் வீட்டில் இருந்து 10 நிமிட நடை பயண தூரம்தான். பொங்கல் கொண்டாட்டம் என்றாலே அதற்க்கு சில நாட்கள் முன்னதாகவே வீட்டுக்கு வெள்ளையடிப்பது, சுத்தம் செய்வது என வேலை ஆரம்பமாகிவிடும். வெள்ளை அடிக்கும் போதுதான் நாம்  வெகு நாட்கள் தேடி கொண்டிருந்த பொருள் கண்ணில் படும்.அது கிடைப்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். பொங்கலுக்கு முதல் நாள் பூலாம்பூ வாங்கி வந்து அதை வாசலில் சொருகி வைத்து அதிகாலை மூன்று மணிக்கே என் அம்மா எழுந்து கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள், உடனே நானும் எழுந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே ஊடே கலர்ப் பொடிகளை தூவிக்  கொண்டிருப்பேன் .


           
                             காலை விடிந்ததும்  தயாராகி சாமி முன்னே பொங்கல் வைத்து கும்பிட்டு விட்டு புத்தாடை அணிந்து உடனே பாட்டி  வீட்டுக்கு கிளம்பி விடுவேன். ஏனென்றால் அங்கு சென்றால்தான் உறவுகளோடும் அங்கிருக்கு தோழிகளோடும் அளவளாவ முடியும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போட்டிருக்கும் கோலங்களை ரசித்துக் கொண்டே இது நல்லாயிருக்கு, இதுதான் நல்லாயிருக்கு என மார்க் கொடுத்துக் கொண்டே தோழிகளோடு அந்த ஏரியாவே சுற்றி வருவோம். பெரும்பாலான வீட்டு வாசல்களில் பொங்கல் பானை கோலமே வரையப்பட்டிருக்கும் பொங்கலன்று விளையாட்டு போட்டிகள் தெருவில் முக்கியமான இடத்தில நடைபெறும். சிறுபிள்ளைகளுக்கான மியூசிக்கல் சேர் விளையாட்டில் நாங்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசு வென்றிருக்கிறோம் .பெண்களுக்கான கோல போட்டிகளும்  நடைபெறும் . வீட்டுக்கு வீடு சென்று தோழிகளோடு பொங்கல்வாழைபழம்  கொடுத்து விட்டு வருவோம். அனைவரும் கலந்து மகிழும் கொண்டாட்டமாக பொங்கல் இருந்தது.


       
         பொங்கலுக்கு முதல் நாள் பூலாம்பூ வாங்க கடைவீதிக்கு அவசியம் செல்லுவேன். ஏனெனில் வீதியெங்கும் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கும். கலர்ப்பொடி விற்கும் கடைகளிலும்மஞ்சள்கொத்து வாங்கி வண்டிகளுக்கு வைக்கவும்வீடுகளுக்கு பொங்கல் பானையில் வைக்க வாங்கி செல்வோர் கூட்டமும்தற்காலிகமாக முளைத்த  பூலாம்பூ மற்றும் பூக்கடைகளிலும் ஜனத்திரளாகக்  காட்சியளிக்கும். அத்தோடு பொங்கலுக்கு கரும்பு கட்டு வீட்டுக்கு வாங்கி செல்வோரும், வண்டிகளுக்கு பூஜை செய்ய வாங்கி செல்வோர் கூட்டமுமாக பொங்கல் திருவிழா சிறப்பாக காட்சியளிக்கும். நான் சுற்றிலும் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டே செல்வேன். அத்தோடு பொங்கலுக்கு கரும்பு கட்டு வீட்டுக்கு வாங்கி செல்வோரும், வண்டிகளுக்கு பூஜை செய்ய வாங்கி செல்வோர் கூட்டமுமாக பொங்கல் திருவிழா சிறப்பாக காட்சியளிக்கும். பொங்கலன்று கரும்பை கடித்து சுவைத்தபடியே விளையாடி திரிவோம்.


     இது போன்றே கார்த்திகை தீபத்துக்கு முதல் நாளும் வீதியெங்கும் கலர் கோலப்பொடி கடைகைளும் வித விதமான மண் விளக்கு, மெழுகுவர்த்தியில் கலர் கலரான விளக்குகளும் வாங்குவோர் கூட்டமும், அதை வேடிக்கை பார்த்தபடியே பெற்றோர் கை பிடித்து செல்லும் குழந்தைகளும்ரசிக்கும் படியாகவே இருக்கும்.தீபத்தன்று மாலை வீதி தோறும் வெளிச்சமாகவும் அழகாகவும் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தால் அது ஒரு அழகாக தெரியும். பெரிய கார்த்திகை தீபாவளிக்கு அடுத்து வருவதால் அன்று பத்திரப்படுத்தப்பட்ட வெடிகள் குழந்தைகளால் வெடிக்கப்படுவதும் உண்டு.


        பொங்கலின் சிறப்புக்கள் என்றாலே ஜல்லிக்கட்டு, சில கிராமங்களில் நடைபெறும் ரேக்ளா ரேஸ் என்ற ஒற்றை மாட்டுவண்டிபந்தயம், சேவல்சண்டை, உரியடி, பாரம்பரியமான கரகாட்டம் , ஒயிலாட்டம் மற்றும் இந்த மண்ணிற்கே உரிய சில நிகழ்வுகள். இதையெல்லாம் இப்போது அதிகமாக காண முடிவதில்லை. பொங்கலன்று காலையில் சாமி கும்பிட்டு படையலிட்டு விட்டால் தொடரும் பொழுதுகள் பெரும்பாலும் தொலைக்காட்சியுடனே கழிகிறது . 

         

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன