வணக்கம் உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் தலைக்கறி குழம்பு சுவைப்போமா? ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலரது வீடுகளில் அசைவம்தான் முதலிடம் பிடிக்கும். நமது வீட்டிலும்தான். வழக்கமான ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுவது சலிப்புத் தட்ட வீட்டினரின் ஏகோபித்த கருத்தால் இம்முறை தலைக்கறி வாங்கி சமைத்துச் சுவைக்கலாம் என கறிக்கடைக்கு கிளம்பினோம்.
சண்டே ஸ்பெசலாக அனைவரது வீட்டிலும் அசைவ வாசனை காற்றில் மிதக்கும் என்பதால் 6 மணிக்கே கறிக்கடையில் வழக்கம் போல கூட்டம்.
எனக்கு ஒரு கிலோ கறி, இங்க ஈரல் மட்டும் கொடுங்க, எனக்கு குடல் சுத்தம் செய்து கொடுங்கள். எனக்கு ஆட்டுக்கால் சீக்கிரம் வாட்டுங்கள் என பல வித சப்தங்களுக்கிடையே தலைக்கறியை சுத்தம் செய்து வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தோம். வீடு வந்து தலைக்கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வைத்தேன். இப்போது சமைக்க ஆரம்பிப்போமா?
தலைக்கறி செய்யத் தேவையானவை :
தலைக்கறி - 1 கிலோ (அ ) தலை ஒன்று
வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பிரியாணி இலை - 1 மற்றும் கிராம்பு - 5
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு - தேவையான அளவு
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
ஜாதிபத்ரி - சிறிது
சோம்பு - சிறிது
இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
தலைக்கறி செய்முறை :
1. தலைக்கறியை சுத்தமாகக் கழுவி 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5 விசில் விடவும்.
2. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொத்தமல்லி, இலவங்கப்பட்டை, கிராம்பு, சோம்பு மற்றும் ஜாதிபத்ரியை சேர்த்து நன்கு வதக்கவும்.
3. பின் இதனை மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி தனியாக வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின் குழம்பு வைக்க தேவையான அளவுக்கு தேங்காய் எடுத்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலையை வதக்கவும். பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின் அரைத்து வைத்த வெங்காயம், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. பின்பு வேக வைத்த தலைக்கறியை அந்தக் கலவையில் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். பின் மூடியை அகற்றி மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும். பின் மற்றொரு 5 நிமிடத்திற்கு பின் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
6. தண்ணீர் சேர்த்த பின் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு தலைக்கறிக்குழம்பு கெட்டியாகும் வரை சமைக்கவும்.
7. குழம்பின் மேலே எண்ணெய் மிதக்கும். பின் அதன் மேல் கொத்தமல்லித் தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
8. இப்போது ருசியான தலைக்கறி குழம்பு தயார்.
வீடு முழுவதும் மிதந்த தலைக்கறிக் குழம்பின் வாசனை பசியைத் தூண்டியது. அனைவருக்கும் வாழை இலையை விரித்து அதில் வெள்ளை சாதத்தை பரிமாறி அதன் மேல் தலைக்கறி குழம்பை ஊற்றி பிசைந்து ஒரு வாய் சாப்பிட ஆகா வெகு சுவையாக இருந்தது. தலைக்கறி நன்கு வெந்து மெதுவாக இருக்க சாதத்துடன் சேர்த்து வாழை இலை வாசனையுடனும், தலைக்கறி குழம்பின் வாசனையுடனும் சாப்பிட நிமிடத்தில் இலை காலியாகி தலைக்கறி குழம்பு விருந்து நம் வயிறை நிரப்பியது.
தலைக்கறியுடன் ஒரு மூளை வாங்கி பெப்பர் பிரை செய்து சாப்பிட சுவை இன்னமும் தூக்கியடிக்கும். ஒரு வாய் தலைக்கறி, சாதம், குழம்புடன் சுவைத்து, பின் மறு வாய் சாதம், குழம்புடன் மூளை பிரை சேர்த்துச் சாப்பிட வெகு திருப்தியாக ஞாயிறு விருந்து மனதையும், வயிறையும் நிறைத்தது.
தலைக்கறி சாதத்திற்க்கு மட்டுமல்லாமல், இட்லி, ராகி களிக்கும் சேர்த்துச் சாப்பிட சுவை நன்றாக இருக்கும். நீங்களும் ஒரு முறை தலைக்கறி சுவையுங்கள் உறவுகளே.
மற்றொரு ஞாயிறு விருந்தில் சந்திப்போம்...