சனி, 16 செப்டம்பர், 2023

முக்குளி

                                        வணக்கம் உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் முக்குளி சுவைப்போமா?  முக்குளி பணியாரம் என்பது மறைந்து போன நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுதான்.... இப்போது நாம் பதிவுக்குள் செல்வோமா?


                                                       நமது பாரம்பரிய பலகாரங்கள் சத்து மிகுந்ததாக எத்தனையோ உள்ளன. இப்போதைய மக்களில் சிலர்தான் இதை பற்றி அறிந்திருக்கிறார்கள். பாரம்பரிய உணவு வகைகளை பற்றி நமது பதிவின் மூலம் சொல்லும் முயற்சியே இந்த முக்குளி பணியாரம்.


                                                  முந்திரிக்  கொத்து, தேன் குழல், நீராளம், புட்டு என வகை வகையான நமது பாரம்பரிய பலகார வகைகளை நம்மில் பலர் சுவைத்திருக்க மாட்டோம். இப்பொது முக்குளி எப்படி செய்வது என்பதையும், அதன் சுவையையும் ருசிப்போமா?


முக்குளி செய்யத்  தேவையானவை 

பச்சரிசி -200 கிராம் 
கம்பு - 400 கிராம் 
தேங்காய் - 1/2 மூடி 
சுக்கு - 15 கிராம் 
ஏலக்காய் - 20கிராம் 
வெல்லம் - 1/2 கிலோ 
வெண்ணை - 20 கிராம்                                                பச்சரிசி, கம்பை 2 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை  நன்றாக கழுவி காய வைக்க வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் உரலில் இட்டு இடித்துக் கொள்ளவும். பின் அதனுடன் துருவிய தேங்காய், சுக்கு இடித்து போட்டு, ஏலக்காய் பொடி, வெண்ணை சேர்த்து மாவு உதிரி, உதிரியாக வருமாறு பிசைந்து கொள்ளவும்.


                                                       ஒரு சட்டியில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் அதை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி, நாம் தயார் செய்த பச்சரிசி, கம்பு என அனைத்தும் சேர்ந்த உதிரிக்  கலவையில் மாவு பதமாக வருமாறு கலக்கவும். அதனுடன் முந்திரி பருப்பும் சேர்க்கவும். பின் அந்த மாவை ஒரு நாள் நன்றாக புளிக்க விடவும். மறு நாள் எடுத்து பணியாரச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால் சுவையான முக்குளி பணியாரம் தயார். இதையே வேறொரு வகையாகவும் செய்யலாம்.


முக்குளி மற்றொரு வகை செய்யத்  தேவையானவை :

சத்து மாவு - 1/2 கிலோ 
துருவிய தேங்காய் - 1/2 மூடி 
ஏலக்காய் - சிறிது 
நெய் - சிறிது 
வெண்ணெய் - சிறிது 
வெல்லம் இடித்தது - உங்கள் இனிப்பு சுவைக்கேற்ப தேவையான அளவு 
முந்திரி - 10


                                                சத்து மாவுடன், துருவிய தேங்காய், நெய், வெண்ணெய், ஏலக்காய் தூள், வெல்லம், முந்திரி பருப்பு பொடித்து அனைத்தையும் மாவு பதத்திற்கு கரைத்து பின் பணியாரச் சட்டியில் வார்த்து எடுக்க முக்குளி பணியாரம் தயார்.


                                          முக்குளி பணியாரம் நாம் பாரம்பரிய முறைப்படி தயார் செய்து உண்ணும் போது சுவையும், மணமுமாக அருமையாக இருக்கிறது. காலை, மாலை பலகார வேளைகளில் இதை தயார் செய்து சாப்பிட சத்துடன், சாப்பிட ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும் இதை செய்து கொடுப்பதுடன், பாரம்பரிய உணவு வகைகள் சிலவற்றையாவது சொல்லிக் கொடுத்தால், அவை அடுத்த தலைமுறைக்கும் போய்ச்  சேரும்.                                                          முக்குளி பணியாரம் காலை வேளையில் செய்து சாப்பிட, வெகு ருசியாக இருந்தது. சாப்பாடாகவும், தின்பண்டமாகவும் உள்ள முக்குளி பணியாரம் நல்லதொரு உணவு அனுபவம். நீங்களும் செய்து ருசித்து பாருங்களேன்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....2 கருத்துகள்:

  1. படங்கள் ஆசையை தூண்டுகிறது அவ்வளவு அழகு.

    அழிந்து போனதாக நினைத்த இந்த பண்டம் இப்பொழுது நட்சத்திர உணவகங்களில் பிரபலமாகி வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் கருத்துரையிட்டதற்க்கு நன்றி சார்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன