தஞ்சைத் தரணியை செழிக்கச் செய்யும் காவிரியும் அந்த காவேரிக் கரையை சுற்றி வாழும் கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரியமாய் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த ஆயங்களைச்சோறு விருந்தாக உங்கள் பார்வைக்கு ...
வாருங்கள் உறவுகளே நாமும் ஆயங்களைச்சோறு விருந்துக்குள் செல்வோம்.
பொங்கல் பண்டிகை என்பது நமது தமிழகத்தில் பாரம்பரிமாய் கொண்டாடப்பட்டு வரும் சிறப்புமிக்க ஒன்றாகும். வீட்டுக்கு வெளியே அடுப்பு மூட்டி புது பொங்கல் பானையில் உலைகொதிக்க அரிசியிட்டு மண்டவெல்லத்துடனும், பாலுடனும் பொங்கல் இனிதாக பொங்கி வழிந்தவுடன் வாழைப்பழம் தேங்காய், பொங்கலுடன் சூரியனுக்கு படையலிட்டு வணங்குவர். அத்தகைய பொங்கல் பண்டிகை இப்போதெல்லாம் வீட்டுக்குள் குக்கருடனும், காஸ் அடுப்புடனும் முடிந்து விடுகிறது. ஆனாலும் சில கிராமங்களில் மரபு மாறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவே இந்த ஆயங்களைச்சோறு விருந்தாகும்.
தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் நிகழ்வுதான் ஆயங்களைச்சோறு விருந்து. ரெட்டவயல், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கீரமங்கலம் ஊர் பகுதிகளில் நாம் மாட்டுப் பொங்கலன்று சென்றோமானால் இந்த ஆயங்களைச்சோற்றை ருசிக்க முடியும்.
மாட்டுப் பொங்கலன்று இரவு மாட்டுக் கிடையில் பொங்கப்படுகிறது இந்த ஆயங்களைச்சோறு . எல்லா ஊர்களிலும் மாட்டுக் கிடைக்குனு ஒரு மைதானம் இருக்கும் என பேச்சை ஆரம்பித்தார் அந்த ஊர்க்காரர் ஒருவர். மார்கழி இறுதி நாளில் மாட்டுக்கிடை மந்தையை உழுது அதன் நடுவில் சதுரமாக மண் மேடை கட்டி, அச்சுக்கம்பு அடித்து வைப்பார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு விதம் விதமான வர்ணங்கள் பூசி, வேப்பிலை, கன்னிப்பூ மாலை கட்டி, நன்றாக தீனி போட்டு விட்டு மாடுகளை கூட்டி வந்து கிடையில் கட்டி விடுவார்கள்.
மாட்டுக்கிடையில் மைக் செட், தோரணம் என கட்டி, மேடைக்கு நடுவில் ஒரு மண்ணாலான பிள்ளையாரை பிடித்து வைத்து, தென்னம் பாளையால் அலங்காரம் செய்கிறார்கள். அந்த சாமிக்கினு ஒரு பூசாரி இருக்கிறார். வாயை கட்டிக்கிட்டுதான் பூசை செய்யனும். சாமிக்கு எதிரே நீளமாக பள்ளம் வெட்டி ஆடு, மாடு வச்சுருக்கவங்க வெண்பொங்கல் இடுவார்கள்.
பொங்கல் பானைகள் அனைத்தையும் பிள்ளையார் முன் இறக்கி வைத்து, பெரிய இலைகளைப் போட்டு ஒவ்வொரு பானையில் இருந்தும் வெண் பொங்கலை அள்ளி வைப்பார் பூசாரி. அதன் மேல் வாழைப்பழங்களை உரித்து அடுக்குகிறார்கள். அதன் மேல் மீண்டும் சாதம் வைப்பாங்க.
அதன்மேல் பலாப்பழம். இப்படி பேரிச்சை, முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல்னு எல்லாவற்றையும் அடுக்கி சர்க்கரை கொட்டுகிறார்கள். அதை அப்படியே ஊற விட்டு, சாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுவாங்க. இளவட்டப் பசங்க பெரிய ஓலைகளால் பந்தங்களைக் கட்டி, மந்தையை சுற்றி ஓடி வந்து ஆடு, மாடுகளுக்கு திருஷ்டி கழிப்பார்கள். இதெல்லாம் முடிந்தவுடன் சோறு இருக்கிற இலையை சுற்றி நான்கு பேர் அமர்கிறார்கள். இந்த நாலு பேரும் ஊருக்கு பொதுவான ஆட்களா இருக்கனும். அவங்கதான் ஆயங்களைச் சோத்தைப் பிசைஞ்சு தரணும் என்கிறார் அவ்ஊரைச் சேர்ந்தவர்.
பழங்களும், சர்க்கரையும் ஊறிய அந்த சாதத்தை பார்க்கும் போதே நாவு சுரக்கிறது. முதல் மரியாதை மாடுகளுக்குத்தான். அனைவரும் சேர்ந்து மாடுகளுக்கு ஊட்டுகிறார்கள். அப்போது பொங்கலோ பொங்கல் என எழும் சத்தம் ஏழு கடல்களையும் தாண்டி ஒலிக்கிறது.
பின்னர் குழந்தைகளுக்கு இந்தச் சோற்றை ஊட்டி பால்குடி மறக்கடிப்பார்கள். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் வேறு திட உணவுக்கு மாறுவதற்கு முன் இதைச் சாப்பிட்டால் பேச்சு நன்றாக வரும், நோய் நொடிகள் அண்டாது என்ற நம்பிக்கை. பின்னர் மற்றவர்களுக்கும் இந்த சோறு பிசைந்து தரப்படுகிறது.
இன்றைக்கு கிராமங்களில் ஆடு, மாடுகள் குறைந்தாலும், கொண்டாட்டம் குறையவில்லை. மாடு இல்லாதவங்க கூட மந்தைக்கு வந்து பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் சோறை மறுநாள் வைத்திருந்து உண்ணலாம். ஆனா ஆயங்களைச்சோறு சீக்கிரமே கெட்டுப்போகும். அதனால் அன்றே ஆசை தீரச் சாப்பிட்டுடனும். இரவு 12 மணிக்குத்தான் பூசைகள் முடிந்து சோறு தயாராகும். அதுக்காகவே விழித்திருந்து சாப்பிடுவோம் என நம்மிடம் அவர்களது ஆயங்களைச்சோறு அனுபவங்களை பகிர்ந்தார் ஒருவர். அதை நான் உங்களிடம் பகிரவே இந்த ஆயங்களைச்சோறு விருந்து பதிவு.
ஆயங்களைச்சோறு தித்திப்பாக இருந்ததா உறவுகளே, வேறொரு பதிவில் சந்திப்போம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன