காலை, மதியம், இரவு என எந்த நேரமானாலும் பரோட்டாவைச் சால்னாவுடன் குழப்பி அடிக்க விரும்பும் நமது பரோட்டா ரசிகர்களுக்காகவே இந்த பன் பரோட்டா பதிவு...
வணக்கம் உறவுகளே, வெகு நாட்களுக்குப் பின் நமது அபியின் பயணங்களில் பதிவில் பன் பரோட்டாவைச் சுவைப்போமா?
பரோட்டா என நினைக்கும் போதே ஆஹா... நாவில் உமிழ் நீர் சுரக்கிறது. மொறு மொறுவென பொன்னிறத்தில் பரோட்டாவை பார்க்கும் போதே அதை சாப்பிட்டே ஆக வேண்டும் போல் இருக்கும். சாதா பரோட்டாவுக்கே இத்தகைய உணர்வு என்றால் பன் பரோட்டாவை ரசித்து ருசித்துச் சாப்பிடும் அந்த சுவையான அனுபவம் எப்படி இருக்கும்?
நாம் விரும்பிச் சாப்பிடும் பரோட்டாக்களில் இப்பொது பல வகைகள். கிழி பரோட்டா, வாழை இலை பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா, எண்ணெய் பரோட்டா என விதம் விதமான சுவைகளில் பரோட்டாக்கள் தயாரிக்கப்பட்டு நமது நாவின் சுவை நரம்புகளைத் தூண்டுகிறது. இதில் ஒரு தூக்கலான சுவை அனுபவம்தான் பன் பரோட்டா.
கடை வீதி வழியாக தூரத்தில் வரும்போதே பரோட்டாவின் வாசனையும், சால்னாவின் தூக்கலான மணமும் நம்மை வெகுவாக இழுத்துச் சென்று அந்த பரோட்டாக் கடை முன் நிறுத்தியது. கடை முன் நின்று பார்த்த போது அந்த பாத்திரம் முழுவதும் பொன்னிறமான பன் பரோட்டாக்கள். அதனை பார்த்தவுடனே நம் கால்கள் அங்கேயே நகர மறுத்து நின்று விட்டன.
பரோட்டாக்களின் சுவைக்காக நாவு ஏங்க ஓட்டலுக்குள் நுழைந்தோம். பன் பரோட்டா, சிக்கன் சால்னா, சிக்கன் 65 என பரோட்டாவுடன் சேர்த்து ருசிக்கும் வகையிலான உணவுகளை ஆர்டர் கொடுத்து விட்டு டேபிளின் முன் அமர்ந்தோம். மற்ற டேபிள்களை நோக்கி பார்வை பாய ஆங்காங்கே இருவர், நால்வர் என குடும்பத்துடன் அமர்ந்து பரோட்டாவை ருசித்துக் கொண்டிருந்தனர். பன் பரோட்டா, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, கலக்கி, மட்டன் சுக்கா என அவரவர் ரசனைக்கேற்ப சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
நமது முன்னேயும் பச்சை வாழை இலை விரிக்கப்பட்டு பன் பரோட்டா, சிக்கன் 65, கலக்கி, முக்கியமாக பரோட்டாவின் சுவையை வெகுவாக ருசிக்கத் தூண்டும் சிக்கன் சால்னா என அனைத்தும் வந்தமர்ந்தது. கண்கள் அனைத்து வகைகளையும் ரசித்துக் கொண்டிருக்க, கைகள் வெகு வேகமாக பரோட்டாவை பிய்த்து சால்னாவுடன் ஊறவைத்து வாய்க்குள் அனுப்பிக் கொண்டிருந்தன.
ஒரு பன் பரோட்டாத் துண்டு சால்னாவில் துவைத்து வாயில் வைக்க ஆஹாஹா... அற்புதமான சுவை என மனமும், நாவும் கும்மாளமிட்டன. மேலே சற்று மொறு மொறுப்பாக உள்ளுக்குள் மெத்து மெத்தென்று பூப்போல பன் பரோட்டாவின் சுவையே சுவை. ஒரு நொடியில் பரோட்டாக்கள் இலையில் இருந்து வயிற்றுக்குள் காணாமல் போயின.
பெரிய தோசைக்கல்லில் சற்றே எண்ணெய்யில் பொன்னிறமாகக் காட்சி தந்த பன் பரோட்டாக்கள் வெந்த வேகத்திலேயே அனைவரது இலைக்கும் சென்று சேர்ந்து மறைந்தன.
நாமும் நமது இலைக்கு வந்த பரோட்டாவைச் சால்னாவுடனும், சிக்கன் 65 , கலக்கி, மற்றொரு வகை குருமா என ஒவ்வொன்றுடனும் சேர்த்துச் சுவைக்க அந்த மாலை மயங்கிய இரவு வேளை பன் பரோட்டாவுடன் வெகுவாக மனதில் நிறைந்தது.
பன் பரோட்டாவை ஆசை தீரச் சாப்பிட்டு விட்டு மறக்காமல் வீட்டுக்கும் பத்து பன் பரோட்டாக்கள், கொத்து பரோட்டா, கலக்கி என பார்சல் வாங்கி விட்டுக் கிளம்பினோம். பன் பரோட்டா அனுபவம் சுவை மிகுந்ததாக இருந்ததா உறவுகளே? மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....
பரோட்டா பதிவு தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன