சிவகாமியின் சபதம் திரு.கல்கி அவர்கள் எழுதிய புகழ்பெற்ற நாவல். இதன் முதல் மூன்று பாகங்களை ஏற்கனவே நமது பார்வையில் என்ற தலைப்பில் நாம் பார்த்த நிலையில் நான்காம் பாகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவங்களை உங்களோடு பகிர்கிறேன்.
சிவகாமியின் சபதம் நான்காம் பாகம் சிவகாமி சாளுக்கியரிடம் சிறைப்பட்டு ஒன்பது வருடங்களுக்கு பிறகான சம்பவங்களை வாதாபி போருடன் சேர்த்து விளக்குகிறது. இதற்குள் மகேந்திர பல்லவரின் இறப்பு, மாமல்லரின் திருமணம் பாண்டிய இராஜகுமாரியுடன் நடைபெற்று இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிலை, இது எதுவும் தெரியாமல் மாமல்லரையே நினைத்து அவர் போர் தொடுத்து, வாதபியை எரித்து தன்னை மீட்டுச் செல்வார் என்ற சிவகாமியின் மனோநிலை என பலவற்றையும் தொட்டுக் கதை நகர்கிறது.
பல சவால்களை கடந்து பெரும்படை திரட்டி மாமல்லரின் தலைமையில், பரஞ்சோதியை சேனாபதியாக கொண்டு படையெடுத்துச் செல்லும் பல்லவர் படை பெரும் வெற்றியடைந்து வாதாபிக் கோட்டையை முற்றுக்கையிடுகிறது. வாதாபி சக்கரவர்த்தி புலிகேசி கோட்டைக்குள் இல்லாமல் அஜந்தா கலை விழாவுக்கு சென்ற நிலையில் கோட்டை சரணடைவதாக சமாதானத் தூது மாமல்லரிடம் வந்து சேர்கிறது.
அஜந்தாவில் இருக்கும் சக்கரவர்த்திக்கு இச்செய்தி தாமதமாகவே தெரிய வர தன்னிடம் ஏன் சொல்லவில்லை என தனது சகோதரர் நாகநந்தியுடம் வினவ வேண்டுமென்றேதான் மறைத்தேன், உனக்காக அரச பதவியை துறந்து புத்த பிட்சு ஆன என்னிடம் நீ சரியாக நடக்கவில்லை என சிவகாமியை காரணம் காட்டி சண்டை முற்ற உடன் பிறந்ததால் உன்னை உயிருடன் விடுகிறேன், இங்கிருந்து சென்று விடு என சக்கரவர்த்தி கர்ஜிக்க நாகநந்தி அங்கிருந்து செல்கிறார்.
புலிகேசி வேறொரு படையுடன் வாதாபியை நோக்கிச் செல்ல பல்லவ படைக்கும், வாதாபி படைக்கும் நடக்கும் போரில் புலிகேசி மாண்டு போகிறார். இதை அறிந்த நாகநந்தி புலிகேசியின் உடலை எரித்து விட்டு, புலிகேசி போலிருக்கும் தானே கோட்டைக்குள் சக்கரவர்த்தியாக செல்கிறார். தான் செய்த சபதம் நிறைவேறி வாதாபி பற்றி எரிவதை சிறிது நேரம் ரசித்த சிவகாமி, பிறகு சம்பவங்களின் கோரம் தாங்காமல் உள்ளே செல்கிறார். வாதாபி மக்களின் கூக்குரல் சிவகாமியை மிரட்ட அங்கு சக்கரவர்த்தியாக வரும் நாக நந்தி தான் அந்த பெண்ணை கவனித்துக் கொள்வதாக சொல்லி மக்களை அப்புறப்படுத்தி உள்ளே நுழைகிறார்.
அவர் சிவகாமியுடன் சம்பாஷித்து கொண்டிருக்கையில் சிவகாமியின் சிநேகிதி கமலியின் கணவன் கண்ணனின் உயிர் சிவகாமி கண் முன்னே பிரிய, சிவகாமி மயக்கமுறுகிறாள். மயக்கமுற்ற சிவகாமியை எடுத்துக் கொண்டு வீட்டின் கொல்லைப்புறம் உள்ள சுரங்க வழியாக பிட்சு தப்பிச் செல்ல பின்னேயே துரத்தி வரும் சேனாபதி பரஞ்சோதியுடம் மாட்டிக் கொள்கிறார். இனி தான் தப்பிக்க முடியாது என தெரிந்த நாக நந்தி சிவகாமியை கொல்ல நினைத்து கத்தியை எரிய அப்போது அங்கு வரும் பரஞ்சோதி பிசுவின் கையை வெட்டுகிறார். கூடவே உன்னை உயிருடன் விட வேண்டுமானால் என்றும் மங்காத அஜந்தா வர்ண ரகசியத்தை கூறும்படி சொல்கிறார். ஆகா எனது உயிருக்கு விலையாக என்றும் அழியாத அந்த வர்ண ரகசியத்தை ஈடாக வைத்தாயே என பரஞ்சோதியை பாராட்டி விட்டு, அந்த வர்ண ரகசியத்தை பரஞ்சோதியுடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து செல்கிறார்.
மயக்கம் தெளிந்த சிவகாமி கண்ணனின் உடலைக் காண வேண்டுமென சொல்ல எல்லோரும் அங்கு செல்கின்றனர். அப்போது அங்கு வந்த மாமல்லர் தனது ரத சாரதியான கண்ணனின் உயிரற்ற உடலைக் கண்ட ஆத்திரத்தில் சிவகாமியிடம் இப்போது உனக்கு திருப்தியா என வினவ அந்த வார்த்தைகளின் கணம் தாங்காமல் சிவகாமி மயக்கமடைந்த நிலையில் தனது தந்தை ஆயனருடன்(சிற்பி) காஞ்சி சென்றடைகிறாள்.
இதற்கிடையில் போரில் நடந்த உயிர் பலிகளை காணச் சகியாது பரஞ்சோதி சிவனடியார் சிறுத்தொண்டர் ஆகிறார். ஆம் இவரே பிள்ளைக்கறி கேட்ட இறைவனுக்கு தன் மகனையே அரிந்து உணவாக படைத்து, பின் இறைவன் அருளால் மகன் மறுபடி மீண்டு வர இறைவனுடனே சேர்கிறார். ஆம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் சிறுத்தொண்டர் ஒரு காலத்தில் பல்லவ சேனாபதியாக விளங்கிய பரஞ்சோதி ஆவார். இது சரித்திரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியாகும்.
நான்காம் பாகம் இறுதிக் கட்டமானது போரில் புலிகேசியை வென்று வாதாபி கொண்டோன் எனும் பட்டப்பெயருடன் மாமல்லர் காஞ்சிக்கு திரும்பி வர சக்கரவர்த்தியின்(மாமல்லரின்) பட்டணப்பிரவேச ஊர்வலம் நடக்கிறது. மாமல்லரும் அவரது மனைவியும், குழந்தைகளும் இரதத்தில் ஊர்வலம் வரும் சமயத்திலேயே சிவகாமிக்கு மாமலருக்கு திருமணமான விவரம் தெரிய வர, சிவகாமியின் இதய நரம்பு படாரென அறுந்தது என்ற ஆசிரியரின் வர்ணனையை படிக்க நேரும் போது, நமது இதய நரம்பும் படாரென அறுந்ததை போன்றதொரு உணர்வு. அந்த அளவுக்கு நாவலின் பெருன்பான்மையான நேரம் நாம் சிவகாமியின் உணர்வுகளின் ஊடே பயணிக்கிறோம்.
இறுதியாக சிவகாமி காஞ்சியில் குடிகொண்டுள்ள இறைவனான ஏகாம்பர நாதரையே தன் பதியாக ஏற்றுக் கொண்டு, மாங்கல்யம் சூடி, கோவிலில் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் என பாடியபடியே நடனமாட, அந்த அற்புதமான நடன வினிகையை மாமல்லர் பார்த்து விட்டு கோவிலை விட்டு நீங்கிச் செல்ல, தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என சிவகாமியின் பாடல் வரிகள் அவரது செவியில் விழுவதோடு இந்த அற்புதமான காவியம் முடிவுக்கு வருகிறது. கையில் உள்ள புத்தகத்தை கீழே வைத்து விட்டாலும் இதன் கணம் நம் நெஞ்சை விட்டு வெகு காலம் ஆனாலும் நீங்க மாட்டேன் என்கிறது.
காலத்தால் வெல்ல முடியாத அற்புதமான ஒரு படைப்பு சிவகாமியின் சபதம் என்பதை இதைப் படித்த அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.
இந்த பதிவை பொறுமையாக வாசித்த அனைவருக்கும் எனது நன்றிகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன