வியாழன், 22 டிசம்பர், 2022

தலப்பாக்கட்டி பிரியாணி(திண்டுக்கல்)

                                      இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கெடச்சது என்ற பாட்டிற்க்கிணங்க சாப்பாட்டை ரசித்து சாப்பிடும் உறவுகளுக்காகவே இந்த தலப்பாக்கட்டி பிரியாணி பதிவு... 


                        திண்டுக்கல்லுக்கே பிரியாணி ரசிகர்களிடம் வரவேற்பை தேடித் தந்த தலப்பாக்கட்டி பிரியாணியை இந்த வாரம் நாமும் ருசிப்போமா?


                                         ஒரு பசியான மதிய உணவு இடைவேளையின் போது நம் கண் முன்னே மட்டன் பிரியாணியை வாழை இலையில் பரப்பி வைத்தால் எப்படி இருக்கும்.நொடியில் சாப்பிட்டு முடித்து விடுவோம் இல்லையா? அது போன்ற நேரத்தில்தான் நாம் தேனி ஆனந்தம் பின்புறம் உள்ள தலப்பாக்கட்டி ரெஸ்டாரண்டிற்க்கு சென்றது. 


                           தலப்பாக்கட்டிக்குள் நுழையும் போதே பிரியாணி வாசனை தூக்கியடித்தது. ஆங்காங்கே அமைத்திருந்த  டேபிள்களில் ஒரு டேபிளை  தேர்ந்தெடுத்து அமர்ந்தோம். உடனடியாக மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு சுற்றிலும் பார்வையை  ஓட்டினோம்.


                                பிரியாணி வாழை இலையில் சுடச்சுட வந்து அமர சொல்லவும் வேண்டுமா? மட்டன் பிரியாணியை சிக்கனுடன் சேர்த்து, தயிர் வெங்காயத்தின் சுவையுடன் ஒரு கை பார்த்தோம்.


                                சுடச்சுட மசாலா கலவையில் ஊறிய சிக்கன் மணத்துடனும், சுவையுடனும் நம் அருகே உள்ள டேபிளில் பரிமாறப்பட நாமும் அதை கொண்டு வரச் சொல்லி ருசித்தோம்.


                                          மீனிலும் பலவகையான வெரைட்டிகள் இங்கு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. படத்தில் பார்க்கும் போதே ஒரு வாய் ருசி பார்க்க வேண்டும் என நம் எண்ணத்தை தூண்டுகிறதல்லவா?


                             மட்டன் எலும்பு கிரேவி, மட்டன் பிரியாணியுடன் அடுத்த சுற்று வர அதையும் ருசித்தோம். மசாலாக்கலவையில் ஊறி மணமணத்த மட்டன் துண்டை ஒரு வாய் வைக்க அடுத்த ஒரு நிமிடத்தில் பிரியாணியிடன் சேர்ந்து மின்னல் வேகத்தில் காலியானது.


                    இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி என்னவெனில் 1952-ல்  நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்த விலாஸ் பிரியாணி,சப்பாத்தி ஹோட்டல் என்ற பெயரில் ஒரு உணவகம் தொடங்கி அது நஷ்டப்படவே அதற்கான காரணங்களை ஆராய்ந்து 1957-ல் அதே பெயரில் உணவகத்தை தொடங்கினார். 
                                    அவரது கைப்பக்குவத்தில் உருவான பிரியாணியின் ருசி வாடிக்கையாளரைக்  கவர்ந்தது. அவர் சமையல் பணியில் இருக்கும்போது அவரது வழுக்கை தலையை மறைக்க தலைப்பாகை கட்ட அதுவே வாடிக்கையாளர்கள் அவரை தலப்பாக்கட்டி நாயுடு என அழைக்க காரணமானது. பின்னாளில் உணவகத்தின் பெயரே தலப்பாக்கட்டி என மாறி  திண்டுக்கல்லில் தலப்பாக்கட்டி பிரியாணி என பிரபலமானது.


                                        என்னதான் விதவிதமான உணவுகள் நம்மை ஈர்த்தாலும் பரோட்டா மீதிருக்கும் ஆவல் மட்டும் நமக்கு குறைவதே இல்லை. எனவே மட்டன் பிரியாணி, எலும்பு கிரேவி, சிக்கன் லாலிபாப், மீனுடன் சேர்த்து சால்னாவில் ஊறிய பரோட்டாவையும் சாப்பிட்டு முடித்த பிறகே நமது வயிறு திருப்தியானது.


                                 இந்த தலப்பாக்கட்டி தேனி ஆனந்தத்துக்கு எதிர்புறம் அமைந்துள்ள ஒரு கிளை உணவகம். தலப்பாக்கட்டி உணவகம் இன்று திருச்சி,மதுரை,கோவை,சென்னை என பல இடங்களிலும் தன் கிளைகளை பரப்பி வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.


                                             இந்த படத்தில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டல் திண்டுக்கல் கடை வீதியில் சர்ச்சுக்கு அருகே இயங்கி வருகிறது. கடை வீதிக்கு வருபவர்கள் பெரும்பாலும் இங்கு சாப்பிட்டும், பார்சல் வாங்கியும் செல்கின்றனர்.


                                      தலப்பாக்கட்டி பிரியாணி ஹோட்டலில் மட்டன் பிரியாணி, கீமா பால் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பன்னீர் பிரியாணி, முட்டை பிரியாணி, காளான் பிரியாணி, வெஜ் பிரியாணி, குஸ்க்கா என பக்கெட்டுகளிலும் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் நாட்டுக் கோழி மிளகு வறுவல், நாட்டுக்கோழி இடிச்ச வறுவல், சிக்கன் போன்லஸ், பள்ளிபாளையம் சிக்கன், போன்லஸ் ரோஸ்ட், தீப்பொறி லாலி பாப், நாட்டுக்கோழி சாப்ஸ் பிரட்டல், சிக்கன் வறுத்த கறி, மட்டன் சுக்கா , குச்சி மட்டன், இறால், மீன் 65 என இன்னும் சைவத்திலும் பன்னீர் 65, வெஜ் ஸ்ப்ரிங் ரோல், கோபி 65, மஸ்ரூம் 65 என பல வகைகள் நம்மை ருசி பார்க்கத் தூண்டுகின்றன.
 

                                      அனைத்து வகைகளிலும் நமக்கு பிடித்த பிரியாணி,வறுவல் என ருசி பார்த்த பிறகு ஐஸ்கிரீம், ஸ்வீட் என அதனையும் சுவைத்து விட்டு பார்சலுடன் அங்கிருந்து விடை பெற்றோம். நீங்களும் இங்கு சென்று சுவைத்து விட்டு உங்கள் உணவு அனுபவங்களை பகிருங்கள் உறவுகளே...

பதிவு தொடரும்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன