திங்கள், 28 நவம்பர், 2022

சாந்தி குளிர்பானம், திண்டுக்கல்

                                  ஒரு மதியநேரம் கடைவீதியில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது வெயிலுக்கு எங்காவது அமர்ந்து பழச்சாறு அருந்தலாம் எனத் தோன்ற உடனே அருகிலிருக்கும் சாந்தி குளிர்பானம் நம் நினைவில் மின்னலடித்தது. நாங்கள் அடிக்கடி செல்லும் கடை அது.

 
                                  திண்டுக்கல் கடைவீதியில் இயங்கி வரும் இந்த சாந்தி குளிர்பானம் பெரும்பாலோரால் சாந்தி கூல்ட்ரிங்க்ஸ் என அழைக்கப்படும். நமது சாந்தி குளிர்பானத்தில் புரூட் மிக்ஸ்சர்(பழக்கூழ்) மிகவும் சிறப்பான தயாரிப்பு என எனக்குத் தோன்றும். 


                           பழமுதிர்ச்சோலை போன்ற பல கடைகளில் இந்த புரூட் மிக்ஸர் கிடைத்தாலும் நான் அடிக்கடி இங்குதான் வருவேன். பப்பாளி, வாழைப்பழம், திராட்சை, டூட்டிபுரூட்டி, பேரிச்சம்பழம் மற்றும் பலவற்றை சேர்த்து அதனுடன் மேலாக ஐஸ்கிரீமையும் சேர்த்து கெட்டியாக ஸ்பூனுடன் நமது டேபிளில் கொண்டு வந்து வைப்பார்கள்.                                         இங்கு வரும் நிறைய மக்கள் இந்த புரூட் மிக்ஸர் ஆர்டர் செய்து சாப்பிடுவர். அனைத்து பழங்களும் கலந்து ஐஸ்கிரீமுடன் இருக்கும் அந்த  பழக்கலவையை ஒரு வாய் எடுத்து வாயில் இட்டு ருசிக்க வெயிலுக்கு நாவில் ஜில்லென்று இறங்கிய பழச்சுவையில் அடுத்தடுத்த ஸ்பூன் வெகு வேகமாக காலியாகியது.


                                           இங்கு புரூட் மிக்ஸர் மட்டுமல்லாது வெஜிடபிள் பப்ஸ்,முட்டை பப்ஸ் என  அனைத்தும் கிடைக்கும். அங்கேயே அமர்ந்து சாப்பிடலாம். பார்சலாகவும் கொண்டு செல்லலாம்.


                                முட்டை பப்ஸ் பொன்னிறத்தில் நன்றாக பொரிந்து  உள்ளே முட்டை மற்றும் மசாலாக் கலவையுடன் வெகு ருசியாக இருந்தது. புரூட் மிச்சருடன், இதனையும் சேர்த்து சாப்பிட்டோம். வயிறு நிரம்பிய உணர்வு.


                                 புரூட் மிக்ஸர் வந்தவுடன், உங்கள் பார்வைக்காக நமது கேமராவில் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து விட்டு,  பிறகே அதனைச் சுவைத்தேன்.
புரூட் மிக்ஸரை சுவைக்கும் ஆசை உங்களுக்குள்ளும் உதயமாகிறதல்லவா?


                                           புரூட் மிஸ்சருடன் சேர்த்துச்  சுவைக்க இந்த வகை சிப்ஸும் ஒரு தட்டில் நம் அருகே வைத்து விடுவார்கள். அது ஒரு வாய், இது ஒரு வாய் என ருசிக்க சுவை சொல்லில் அடங்காது.


                                     திண்டுக்கல் கடை வீதியில் இயங்கும் இக்கடையில் பல நேரம் கூட்டமாகவே இருக்கும். கடைக்கு உள்ளே மூன்று டேபிள்கள் போடப்பட்டு பன்னிரண்டு பேர் அமரக்கூடிய வகையில் இருக்கும். டேபிள்களுக்கு சிறிது தள்ளி நாலைந்து ஸ்டூல்களும் அமரக்கூடிய வகையில் போடப்பட்டு இருக்கும்.


                                 இந்த சாந்தி குளிர்பானத்தில் எல்லா வகையான ஸ்னாக்ஸ்களும் கிடைக்கும். அதுமட்டுமல்லாது பாதாம் பால், ரோஸ் மில்க், கூல் ட்ரிங்க்ஸ், ஐஸ்கிரீம், காபி, டீ என அனைத்துமே அவரவர் சுவைக்கேற்ப கிடைக்கும்.


                                       இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் திண்டுக்கல் வந்தால், சாந்தி குளிர்பானம் சென்று சுவை மிகுந்த புரூட் மிக்ஸரை ருசித்துப் பாருங்களேன்...

தொடரும்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன