சனி, 4 நவம்பர், 2023

சிக்கன் வித் பரோட்டா

                                 இந்த வாரம் நமது அபியின் பயணங்களில் சிக்கன் வித் பரோட்டாவுடன் சுவை மிகுந்த பயண அனுபவத்தை ரசிப்போமா? வானத்தில் மெல்ல மெல்ல வெளிச்சம் பரவ ஆரம்பித்த ஒரு விடியல் நேரத்தில்  மழைத் தூறலுடன் நமது  பயணத்தை துவக்கினோம். ஆம், சிறுமலை நோக்கித்தான் நமது பயண இலக்கு 


                                            தினமும் நகர வாழ்க்கையில் மூழ்கி காலை எழுந்து வேலைக்குச் சென்று மாலை கூட்டுக்குள் அடையும் பறவை போல பயணித்த நாட்களில் இருந்து வெளியேறி  மனதிற்கு ஒரு இனிதான மாற்றம் வேண்டி விடுமுறை நாளில் சிறுமலைப்  பயணத்தை மேற்க்கொண்டோம். வழியில் காலை உணவுக்காக நிறுத்தி தோசை, சாம்பாரில் மூழ்கி எழுந்து, மதியத்துக்கான சாப்பாடு பார்சலாக பரோட்டாவையும், சிக்கன் கிரேவி, சிக்கன் சால்னா, சிக்கன் 65 வாங்கிக் கொண்டோம். 


                                                  சிறுமலை பதினெட்டு கொண்டை ஊசி வளைவுகளுடன் சுற்றிலும் இயற்கை காட்சிகள் சூழ நம்மை வரவேற்றது. மலையில் ஏறியவுடன் தேநீர் அருந்தி விட்டு அகஸ்தியபுரம் நோக்கிச் சென்றோம். லிங்கத்துக்குள் அம்மனுடன் அமைதியான ஒரு இயற்கைச் சூழல். அங்கங்கே நிறுத்தி இயற்கையை ரசித்துக் கொண்டே சென்றோம். 


                                          சிறுமலை ஏறியவுடன்  உள்ள வாட்சிங் டவரில் ஏறி சுற்றிலும் தெரியும் மலையின் காட்சிகளை ரசித்தோம். பின் அங்குள்ள பல்லுயிர் பூங்காவுக்கும் சென்றோம். செயற்கை அருவியுடன், சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் பூங்கா அமைந்துள்ளது. அதனை ரசித்து விட்டு வானம் கருக்க ஆரம்பித்ததால் மலையை விட்டு இறங்க ஆரம்பித்தோம்.


                                               சிறுமலை கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது பசி வயிற்றைக் கிள்ள, வெகுநேரமாக பார்சலில் உள்ள பரோட்டாவுடனான, சிக்கன் சால்னா, சிக்கன் 65 மணமும் நம்மை சாப்பிட வா வா என அழைக்க மலையிறங்கும் வழியில் ஒரு ஓரமாக அமர்ந்தோம். 


                                           சிறுமலையைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை கண்களால் அள்ளிப் பருகியபடியே, சாப்பிட ஆரம்பித்தோம். உணவின் சுவையும், மலையின் அழகும் புதியதொரு இதமான  உணர்வை நமக்குள் ஏற்படுத்தின.


                                     பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பல வகையான  சால்னா, குருமா, மட்டன் சுக்கா, மீன் வறுவல், முட்டைக் கலக்கி, குடல் வறுவல், குடல் குழம்பு, மூளை பிரட்டல், ஈரல் வறுவல், சுவரொட்டி என எத்தனையோ இருந்தாலும் நமக்கு பிடித்ததென்னவோ சிக்கன் சால்னா, சிக்கன் லெக் பீஸ், சிக்கன் கிரேவி என சிக்கன் வகைகள்தான்.


                                                          மலைக்  காற்று இதமாக வீச சுற்றிலும் பச்சை பசேலென இயற்கையே ஆட்சி செய்ய, அதன் நடுவே நாம் அமர்ந்து நமக்குப் பிடித்த உணவை ருசித்தால், ஆஹா... அதன் சுவையை சொல்ல வார்த்தைகளே இல்லை.


                                            பசியில் பரோட்டாவும், சிக்கன்  லெக் பீசும், சிக்கன் சால்னா மணமும்  வெகுவாக ருசிக்க ஒரு பிடி பிடித்தோம். சிக்கன் சால்னாவில் ஊறிய பரோட்டாவை ஒரு பிரட்டு பிரட்டி, சிக்கன் 65 உடன் சேர்த்து வாயில் வைக்க, அபாரமான சுவை நம் நாவின் வழியே நுழைந்து , வயிற்றை திருப்தி செய்தது.


                                           சிக்கன் வித் பரோட்டாவுடன் திருப்தியாக சாப்பிட்டு முடித்து விட்டு, அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டு, மறுபடியின் சிறுமலையின் அழகை ரசித்தவாறே மலையிறங்கி வீட்டுக்குச் சென்றோம். இந்த விடுமுறை நாள் மனதுக்கு வெகுவான இதத்தையும், உற்சாகத்தையும் நல்கியது. நீங்களும் பயணத்தோடு கூடிய உங்களுக்கு பிடித்த உணவுகளின் சுவையையும் ருசியுங்கள் உறவுகளே...

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்....
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன