வணக்கம் தோழமைகளே சென்ற பதிவில் உழைப்பாளிகளின் உலகத்தைப் பற்றி (பூ மார்க்கட் ) பற்றி ஆரம்ப நிகழ்வுகளைப் பார்த்தோம். இந்த பதிவில் பூ மார்க்கட் உள்ளே ....
பூக்கட்டி கொடுப்போர்
இம்மலர்ச் சந்தையின் படியேறி முடித்தவுடனே இடது புறத்தில் நிறைய பேர் ஆங்காங்கே அமர்ந்து பூக்களை தொடுப்பதையும், மாலைக் கட்டிக் கொண்டிருப்பதையும் காணலாம். இவர்கள் பூ விற்போர் இல்லை, அவர்களுக்கு உதவியாக பூக்களையும், மாலைகளையும் கட்டி மட்டும் கொடுத்து விட்டு அதற்கான கூலியை பெற்றுக் கொள்பவர்கள். இவ்வேலைக்காக அதிகம் பேர் இங்கு காலையிலேயே குழுமி விடுகின்றனர் .
பூ வாங்குவோர்
மல்லி 1 கிலோ 60 ரூபாய்க்கும் ,கனகாம்பரம் மற்றைய பூக்கள் 100 ரூபாய்க்கும் கட்டிக் கொடுக்கின்றனர். எத்தனை கிலோ கட்டிக் கொடுகின்றனரோ அதற்கேற்றார் போல் அவர்களின் அன்றாட வருமானம் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி (பேகம்பூர் ) பகுதியை சேர்ந்தவர்களாவர் .
தேங்காய், எலுமிச்சை விற்பனைக்காக
இங்கு பூக்களை தவிர அவரவர் தோட்டத்தில் விளைந்த தேங்காய் ,எலுமிச்சை ,பழங்கள்,கீரைகள் போன்ற மற்றவைகளும் விற்கப்படுகின்றன.
கமிஷன் கடைகள்
கமிஷன் கடைகள்
திண்டுக்கல் பூ மார்க்கட் காலை 4.30 மணியிலிருந்தே இயங்க ஆரம்பித்து மாலை வரை நடந்தாலும் மொத்த விற்பனை நண்பகல் 3.30 மணியோடு நிறைவடைந்து விடுகிறது. அதன் பின் சில்லரை விற்பனை மட்டுமே நடைபெறுகிறது. இப்பூ விற்பனைக்காக 127 கமிஷன் மண்டி கடைகள் உள்ளன .ஏஜன்ட்டுகள் ஆங்காங்கே சேர் மற்றும் டேபிள் போட்டு அமர்ந்து பூக்களை விற்போருக்கு எடை போட்டு கொடுத்து எழுதியபடி உள்ளனர். பூக்களை உற்பத்தி செய்வோர் இவர்களிடம் மொத்தமாக கொண்டு வந்து கொடுத்து விட்டு விற்பனை முடிந்தவுடன் பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இங்கிருந்து சில ஏஜென்ட்டுகள் பூக்களை மொத்தமாக சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
பூ விற்போர்
பூ விற்போர் ( படம் 2)
பூ விற்போர் (படம் 3)
நூற்க்கண்டுகள் கடை
இம்மார்க்கட்டிலேயே பூக்களை கட்டி விற்பதற்கு தேவையான நூற்கண்டுகள், ஊசிகள், மாலை அலங்காரத்திற்கான பொருட்கள், பூக்களின் இடையுடையே வைத்து கட்டும் துணியாலான சிறு ரோஜா பூக்கள் போன்றவற்றை விற்கின்றனர். இதற்காக இவ்வளாகத்திலேயே 3 சிறிய கடைகள் உள்ளன. இங்கு மக்கள் பூக்களோடு சேர்த்து கட்டுவதற்கு தேவையான மற்ற பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்..
பூ மார்க்கட் உட்புறத் தோற்றம்
திண்டுக்கல் பூ மார்க்கட்டிர்க்கு (அண்ணா வணிக வளாகம் ) கீழே மாலைகள் விற்கும் 13 கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மாலைகள் 120 முதல் 150 வரை விற்பனையாகிறது. கோவில்களுக்கும், விசேசத்திற்கும் மாலை தேவைப்படுவோர் இங்கு முன்னரே சொல்லி வைத்தோ அல்லது உடனடித் தேவைக்காகவும் வாங்கி செல்கின்றனர். இவையே பூ மார்க்கட்டின் அன்றாட நடவடிக்கைகளாக இருக்கின்றன .
உங்களுக்கு நேரமிருந்தால் நீங்களும் உங்கள் ஊர் அருகில் இருக்கும் மலர்ச் சந்தைக்கு சென்று பூ வாங்கியபடியே அங்கு நடக்கும் தினசரி நிகழ்வுகளை ஒரு முறை ரசித்து விட்டு வாருங்களேன் ....
பார்க்கும் போதே சூடிக்கொள்ள ஆசையை தூண்டும் மலர்கள்.. நல்லச்செய்தி...
பதிலளிநீக்குஉற்சாகமூட்டும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.....
நீக்கு