திங்கள், 28 டிசம்பர், 2020

பொன்னியின் செல்வன் எனது பார்வையில்


            மக்களிடம் மிகப்பெரிய வரலாற்றார்வத்தை உண்டாக்கிய பொன்னியின் செல்வன் நாவலை விரும்பி வாங்கி பல முறை வாசித்து கொண்டிருக்கும் வாசக நெஞ்சங்களுக்கு என்னுடைய முதல் வணக்கம். பொன்னியின் செல்வன் என்ற இந்த வரலாற்று புதினம் என்னுள் ஏற்ப்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்வதற்காகவே இப்பதிவை இங்கே பதிகின்றேன் .                        பொன்னியின் செல்வன் என்ற இந்தப் பெயரை யாராவது உச்சரிக்கும் போதே ஒரு கணம் நாவலின் ஐந்து பாகங்களும் நம் மனத்திரையில் ஓடி ஒரு புத்துணர்வை தோற்றுவிக்கும் அற்ப்பு தமானதொரு காவியம். இந்நாவல் தமிழ் மொழி வழியாக எழுதப்பட்டு வாசகர்கள் கையில் தவழும் பொழுது தமிழர் என்ற பெருமித உணர்வை இன்னும் அதிகப்படுத்துகிறது.


                                மாமன்னர்  ராஜராஜ சோழரின் இளமை பருவத்தையும் அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர் ஏற்படும் காரணத்தையும் அழகாக விவரிக்கும் இந்நாவலை என்  பதினாறாவது வயதில் படிக்க நேர்ந்தது. அதன் பின் பல முறை இந்நாவலை படித்துளேன்.  ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் சற்றும் சுவை குன்றாமல் விறுவிறுப்பாகவே படிக்கத் தூண்டும்.  


                                        ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்ப்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம் என்ற வரிகளில் கண்கள் நிலைக்கும் போதே மனமானது 982 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்குள் சென்று விடும். பொன்னியின் செல்வனில் மறக்கவே முடியாத கதாபாத்திரமாக படைக்கப்பட்டிருக்கும் பழுவூர் இளைய ராணி நந்தினியின் நேரடி அறிமுகம் திரை சலசலத்தது என ஆரம்பித்து இறுதியில் நந்தினியின் மறைவு எனும் அத்தியாயம் வரை நந்தினியை நேரில் பார்க்க முடியுமா என நம்மை ஆர்வத்தோடு எண்ண செய்து விடும் வண்ணம் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும்.


                                        பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் சுழற்காற்று எனும் பெயரோடு பூங்குழலியின் அழகான அறிமுகத்தோடு தொடங்கும்.  நாவலின் இரண்டாம் பாகத்தை படிக்கும் போதே ஈழத்தின் காடுகளும், ஆழ்வார்க்கடியான் தடி கொண்டு யானையை தாக்குவதும், அந்த நேரத்தில் வந்தியத்தேவனுக்கு ஏற்படும் சிரிப்புணர்ச்சியும், தம்பல்லை குகைக்கோவிலும், பொன்னியின் செல்வனை ஈழத்தின் தலைமை பிஷு சந்திக்க என பூமிக்கடியில் அமைக்கப்பட்ட புத்த விஹாரையும் அங்குள்ள விதவிதமான புத்தர் சிலைகளும், மந்தாகினி தேவி தன் வாழ்வை கதையாக சித்தரித்து வரைந்த ஓவியங்களும் நம் கண் முன்னே தோன்றி மறைந்து இனிமையானதொரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்.


                                        தியாக சிகரம் என ஆரம்பிக்கும் இந்நாவலின் ஐந்தாம் பாகம் பழுவேட்டரையரின் மனமாற்றத்தோடு சேர்ந்து விறுவிறுப்பாக செல்லும். நாவலின் அனைத்து அத்தியாயங்களும் மேலும் மேலும் விறுவிறுப்பைத் தூண்டி பொன்னியின் செல்வர் மதுராந்தகருக்கு பட்டாபிஷேகம் நடத்தும் நிகழ்வுக்கு இட்டுச்  சென்று மணிமேகலையின் மறைவோடு நிறைவடையும் இந்த இனிமையான சோழர் கால வரலாற்று புதினத்தை ஒரு புத்தக கண்காட்சியில் வாங்கி படித்தேன்.  நான்கு நாட்களுக்குள்  ஐந்து பாகங்களையும் வாசித்து தீர்த்தேன். அதன் பின்னரும் பல நாட்கள் அந்த நாவலுக்குள்ளேயே மனது  மூழ்கி கிடந்தது.

                                    பிற்கால சோழ சரித்திரத்தை சுவை குன்றாமல் விவரித்த இந்த சரித்திரப்  புதினத்தை படித்து முடித்த பொழுது கதை மாந்தர்களுடனேயே முழுவதும் பயணித்து சோழ தேசத்திற்க்கும், காஞ்சிக்கும், மாமல்லைக்கும், ஈழ நாட்டிற்க்கும் சென்று திரும்பி வந்த இனிமையானதொரு உணர்வு தோன்றியது. என் எண்ணங்களை எழுத்துக்களாக வடிக்கும் இந்த நேரத்திலும் அந்த சோழ சரித்திர காலத்துக்குள் மறுபடி சென்று விட்டு வந்த உணர்வலைகள் மனதுக்குள் எழுந்து நின்றன.

                            இந்நாவலின் ஐந்து பாகங்களையும் படித்து முடித்தவுடன் இவ்வளவு சிறப்புமிக்க சோழ சாம்ராஜ்யம் எப்படி சரிந்தது? இந்நாவலில் தோன்றி மறைந்த பலரின் நிலை என்ன?  என ஆராயத் தோன்றியது. அதன் விளைவாக நந்திபுரத்து நாயகி, உடையார், கங்கை கொண்ட சோழன், சங்கதாரா போன்ற பல சரித்திர புத்தகங்களை வாசித்தேன். முக்கியமாக திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் பல பாகங்களாக எழுதிய சோழ வரலாற்று குறிப்புகளில் இருந்து ராஜராஜர் காலத்தில் அக்கம், திரமம் என்ற நாணயங்கள் சோழ ராஜ்யத்திலும், ஈழத்திலும் அதிகமாக புழக்கத்தில் இருந்ததையும், திருப்புறம்பியம் பற்றிய பல அரிய செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
 
                        இவ்வளவு வரலாற்று ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிய பொன்னியின் செல்வன் நாவலுக்கும் அதை எழுத்துக்களாக வடித்த அமரர். திரு. கல்கி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல. என்னுள் சோழர்களை பற்றிய தேடுதல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நன்றி.
 

3 கருத்துகள்:

  1. படிக்கப் படிக்க சுவைகுன்றாத நாவல் பொன்னியின் செல்வன். அதன் நீட்சியாக காவேரி மைந்தன் நாவல் வாசியுங்கோ காலச்சுவடு நரசிம்மர் எழுதியது அருமையான உணர்வினைப்பெறுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சார்.. கண்டிப்பாக வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன