வியாழன், 11 ஆகஸ்ட், 2016

மீன் விருந்து (ஞாயிற்றுக் கிழமைகளில்)

மீன் விருந்து (ஞாயிறு ஸ்பெஷல்)

                                            ஞாயிற்றுக் கிழமை என்றாலே பலருக்கும் நாள் உற்சாகமாக ஆரம்பிக்கும்.  பிடித்தமான சமையல், கேளிக்கை, குடும்பத்தோடு அளவளாவுவது என அன்றைய நாள் சீக்கிரமாகவே சென்று மறைந்து விடும். இந்த வாரம் மீன் வாங்கி சமைக்கலாம் என  முடிவு செய்தோம். மீனைப்  பற்றிய சுவையான பதிவு உங்களுக்காக ஞாயிறு ஸ்பெஷல் பகுதியில் .....


                                                     மீன் விருந்து இலையில் 

                                                         மீன் சமையல் என்றாலே பலருக்கும் முதல் மரியாதை உள்ளிட்ட சில சினிமாக்கள் நினைவு வரும். அதில் சிவாஜி மீன் சாப்பிடும் சீனை பார்த்தால் நாவில் எச்சில் ஊரும் என எங்கள் தாத்தா சொல்லிக் கொண்டே இருப்பார் .உங்களுக்கும் இந்த வரிகளை படிக்கும் போது அந்த திரைப்படக் காட்சி மனதில் ஓடுகிறதுதானே. இப்போது மீன் விருந்து பதிவுக்குள் செல்லலாமா...


                                                      மீன் சுத்தம் செய்தல்

                                                       காலையில் பையை எடுத்துக்கொண்டு என்ன  மீன் வாங்குவது என யோசித்தபடியே  மீன் மார்க்கட்டிற்கு சென்றோம். வழக்கம் போலவே வகை வகையான மீன்கள் வைத்திருக்கும் கடைகள் முன் ஆறேழு பேராக நின்று மீனை வாங்குவதும், சுத்தம் செய்ய சொல்வதுமாக நின்றிருந்தனர் .அந்த மார்க்கட்டிலேயே கறிக் கடை, கோழிக் கடையும்  இருப்பதால் அங்கும் வாங்குவோர் கூட்டம் நிரம்பியிருந்தது .வழியெங்கும் மக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்க பேரம் பேசுவதையும், மீன் விற்போர் மீனை எவ்வளவு வேகமாகவும், லாவகமாகவும் சுத்தம் செய்கின்றனர் என பார்த்து ரசித்தபடி சென்றோம்.

                                               பல வகை மீன்கள் சேர்ந்த கடை

                                                      சுற்றிலும்  வேடிக்கை பார்த்தபடியே சென்று நாங்கள் வாங்கும் கடை முன் நின்றோம். அந்த அக்கா வாங்க வாங்க... கட்லா, நகரா, கெளுத்தி, வாவல் மீன் இருக்கு எது வேண்டும்? எனக் கேட்டார். அனைத்து மீன்களையும் நோட்டமிட்டபடியே நாங்கள் எப்போதும் வாங்கும் வாவல் மீனையே கிலோ 140 என வாங்கி சுத்தம் செய்ய சொன்னோம். மீன் செதில்களை தேய்ப்பதற்கென்றே வைத்திருக்கும் கத்தி  மாதிரி ஒன்றை எடுத்து மீனை  சாம்பலில் புரட்டி செதிலை பரபரவென தேய்த்தனர் . பிறகு மீனின் தலையை பிளந்து உள்ளிருக்கும் கழிவுகளை நீக்கி வேகமாக சுத்தம் செய்து கொடுக்க வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினோம் .

                                         உப்பில் ஊறிய மீன் தலை துண்டுகள் 

                                                             மீனை வீட்டுக்கு எடுத்து சென்றவுடன் சிறிதளவு மஞ்சள், உப்பு சேர்த்துக் சிறிது நேரம் வைத்திருந்து கழுவி எடுத்து என் அம்மா சமைக்க ஆரம்பித்தார்கள். மீனை அவர்கள்   சுத்தம்   செய்து   கொடுத்தாலும் நன்றாக இரு முறை தண்ணீரில் அலசி விட்டு  கழிவுகள் ஏதும் உள்ளே மீந்திருக்கிறதா என பார்த்து விட்டு சமைப்பது நல்லது.


                                                        புளிப்பான மீன் குழம்பு

                                                            மீன் குழம்பிற்கு புளியுடன் 2 துண்டு குண்டு மாங்காய் சேர்த்து சமைத்தால் புளிப்பும், சுவை அதிகமாகவும்  இருக்கும். குழம்புடன் மசாலா அரைத்து ஊற்றி கொதிக்க  ஆரம்பித்தவுடன் மீன் துண்டை போட்டு  விட மீன் குழம்பு வாசம் நாசியெங்கும் நிரம்பியது . மசாலாவும், மாங்காயும், மீனும் சேர்ந்து கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்ததும் இறக்க சுவையான மீன் குழம்பு ரெடி .



                                            மசாலாவில் ஊறிய மீன் துண்டுகள்

                                                                       மீன் துண்டுகளை வறுவல் செய்வதற்கு நாங்களே மசால் பேஸ்ட் தயார் செய்து கொள்வோம். இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகாய் தூள் மற்றும் சில சேர்த்து பேஸ்ட் ரெடி செய்து மீனில் நன்றாக புரட்டி எடுத்து வெயிலில் காய வைத்தோம். வறுவல் செய்வதற்கு முன்னே நாக்கு ஊற மசால் தடவிய துண்டுகளை பார்த்தபடியே காக்கா, குருவி கொத்தமால் அரைமணி நேரம் பாதுகாத்தோம் .


                                                           மீன் துண்டு வறுவல்கள்

                                                       மீன் துண்டுகள் நன்கு வெயிலில் காய்ந்து மசாலாவில் சேர்ந்ததும் எடுத்து வந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை பொரித்து எடுக்க எடுக்க மறு பக்கம் அனைவரும் சாப்பிட  காலியாகி கொண்டே இருந்தது. மீன் துண்டுகள் அதிக மொறு மொறுப்பாக இருக்க இரவில்  இரண்டாவது முறை எண்ணெய்யில் பொறிக்க சூடும், சுவையுமாக  இருக்கும் .


                                                      மீன் வறுவல் இலையில்

                                                                வாழை இலையில் மீன் வறுவலை வைத்து சாப்பிட ஆரோக்கியத்துடன் அதிக சுவையாகவும் இருக்கும் .



                                                          மீன் வறுவல் சாதம்


                                                                  மீன் குழம்பு, வறுவல் அனைத்துமே முதல் நாளை விட மறு நாள் சூடு செய்து சாப்பிட மீன் குழம்பில் சுவை அதிகரித்திருக்கும் . மீன் வறுவலை சூடு செய்து எடுத்து  விட்டு, வாணலியில் சாதத்தை இட்டு அதில்  சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கும் மீனும், அதனுடன் இருக்கும் எண்ணெயும் இறங்க இறங்க கிண்டி எடுத்தால் மீன் வறுவல் சாதம் ரெடி . 


                                                                       ஆம்லெட்

                                                                 வெங்காயத்தை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அதில் முட்டை ஊற்றி மிளகு தூள் தூவி எடுக்க, மீன் வறுவல் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சரியான இணையாக இருக்கும். 


                                                   மீன் வறுவல், சாதம் , ஆம்லெட்

                                                                       மீன் வறுவல் துண்டுகள், ஆம்லெட்டை வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை தூக்கலாக இருந்தது. இதை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.


                                           இலையில் மீன் வால், மாங்காயுடன் 

                                                                       மீன் குழம்பு, வறுவல் துண்டுகள் ரெடியானவுடன் இலையில் சாதத்தை போட்டு குழம்பு மீன், வறுவல் மீன் இரண்டும் சேர்த்து ஒரு வாய் எடுத்து வைக்க ஆகா ... சுவையை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஞாயிறு விருந்து பதிவு எழுதும் போதே இடையில் எழுந்து போய்  மீண்டும் சுவைக்கத்   தோன்றியது.  

                                                                           மீன் என்பது அனைவருக்குமே பெரும்பாலும் ஏற்ற உணவு, வைட்டமின் சத்து நிறைந்தது எனச் சொல்வர். குழந்தைகளுக்கும்  சத்து என்று மீனிலிருக்கும் முள்ளை நீக்கி விட்டு நன்றாக பிசைந்து எங்கள் பாட்டி ஊட்டி விடுவார் .
                                                                                             
                          
                                                                                                         ஞாயிறு விருந்து 
                                                                                                                   தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன