வியாழன், 22 செப்டம்பர், 2016

மலைக்கோட்டை ஆஞ்சனேயர் கோவில் (திண்டுக்கல் )

                                              இந்த வாரம் சனிக்கிழமை கோவிலுக்கு செல்லலாம் என யோசித்த போதே மலைக்கோட்டை ஆஞ்சனேயர் கோவில் விசேஷமாக இருக்கும் என அங்கு சென்றோம். இக்கோவில் பல வருடங்களாக வழிபாட்டுத் தலமாக  இருந்தாலும் சமீபத்தில்தான் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


சிவலிங்க தரிசனம் 
                                          
                                                     ஆஞ்சனேயர்  கோவில் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் கம்பீரமாக நீண்டு பறந்து  திண்டுக்கல் மாநகரத்திற்கே பெருமை சேர்க்கும் சரித்திர புகழ் பெற்ற  மலைக்கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு சற்று கீழே பாறையில் படிகள் அமைத்து கோட்டை குளத்திற்கு மேலே இக்கோவில் அமைந்துள்ளது.
              
                                                     கோவில்   நுழைவு வாயிலின் உள்ளே நுழைந்தவுடன் துளசி, மாலை, எலுமிச்சம்பழங்களை ஒரு பெண்மணி விற்றுக் கொண்டிருக்கிறார். அதை வாங்கி கொண்டு அங்கிருக்கும்  நடைபாதையில் நடந்து சென்றால் முதலில் தென்படுவது சிவலிங்கத் திருமேனியும், நந்தி பகவானும் வீற்றிருக்கும் காட்சியாகும்.


தேவாரம் பாடியோர் 

                                        அமைதியான சூழ்நிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் தலைப் பகுதியில் அப்பர், சுந்தரர் முதலானோர் படங்களின் வாயிலாக காட்சியளிக்கின்றனர் .


சித்தர் பெருமக்கள் 

                                 சிவபெருமானுக்கு இடது பக்கத்தில் அகத்தியர், போகர், கொங்கணர்,  இடைக்காடர் என  பதினெண் சித்தர் பெருமக்கள்  காட்சியருளுகின்றனர்.


சித்தர் பெருமக்கள் படம்-2

கயிலாயம் ,மானசரோவர் 

                              சிவபெருமானுக்கு வலது புறத்தில் கைலாயத்தோடு, மானசரோவர் நதியும்,  சிவபெருமானும் வரையப்பெற்று ஓம் நமச்சிவாய எழுத்துக்களோடு அருளுகின்றார் . 

பஞ்சபூத தலங்கள் 

                                                 லிங்கத்திருமேனியின் வலது புறத்தில் மானஸரோவருக்கு பக்கத்தில் பஞ்ச பூத தலங்களுக்கு உள்ளே சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர் .


யாக குண்டம் 

                                       சமீபத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்ற போது யாகம் வளர்த்த இடம்.  இங்குள்ள  மையை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக்  கொள்கின்றனர்.

கிருஷ்ணர் கோவில் 

                                            சிவ லிங்கத்திற்கு பின்புறம் உள்ள கோவிலில் கிருஷ்ணர் சந்நிதி உள்ளது.  இவரை வணங்கி விட்டு ஆஞ்சநேயரை தரிசிக்க மேலே ஏற ஆரம்பித்தோம்.

கம்பீரமாக தெரியும் மலைக்கோட்டை 

                              பாறையிலேயே பக்தர்கள் ஏறுவதற்கு தோதாக படிகள் செதுக்கப்பட்டுள்ளன. படிகளில் ஏறியபடியே சற்றே நிமிர்ந்து  பார்க்க மலைக்கோட்டை எழிலுடன் காட்சியளிக்கிறது.



கீழிருந்து பார்க்க ஆஞ்சனேயர் கோவில் 

                                    பாறை படிகள் வழியாக ஏறி வலதுபுறம் திரும்பினால் புதிதாக ஒரு வழி  கோட்டை குளத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருந்தது .


ஆஞ்சனேயர் கோவில் படம்-2


கோவில் முன்புறம் ஆஞ்சனேயர் சிற்பம் 

                            நுழைவாயில் முன்புறம் கோபுரத்தில் ஆஞ்சநேயரை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றோம் .


கோவில் உட்புறம் 

                                                          கோவிலின் உள்ளே கருங்கற்களால் எழுப்பப்பட்ட தூண்களின் நடுவே கருவறை சந்நிதியில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அய்யர் பக்தர்கள் கொண்டு வந்த துளசியை வாங்கி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி குங்குமம் கொடுத்தார். மற்றொருவர் சடாரி கொண்டு வந்து தலையில் வைத்து துளசி கொடுக்க வாங்கி கொண்டு நகர்ந்தோம்   


பஞ்சமுக ஆஞ்சனேயர் ஓவியம் 

                                                      கோவிலின் உள்ளே சுற்றிலும் பார்த்த போது மக்கள் ஒரு ஓரமாக விளக்கு போடுவதையும்,  கருவறை சுவர்களில் ஓவியங்கள் தீட்டியிருந்ததையும் அதில் தத்ரூபமாக உள்ள  பஞ்சமுக ஆஞ்சநேயரையும்  ரசிக்க முடிந்தது.


இராமபிரானோடு அனுமர் 

                                           பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பக்கத்தில் இயற்கை காட்சிகளுக்கு இடையில் இராம பிரானும், அனுமந்தரும் அன்போடு தழுவிக் கொள்ளும் காட்சி ராம காவியத்தை வரிசையாக நினைவடுக்குகளில் தோற்றுவித்தது.



கோட்டைக்குளம் காட்சிகள் 

                                             கோயிலின் மேலே நின்று பார்த்தால் கீழே கோட்டைக்குளமும் அதில் அமைந்துள்ள மண்டபமும், ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த போட்டும், கண்ணுக்கு தென்பட்டது.



ஆஞ்சனேயர் கோவில் வெளிப்புறம் 

                                  ஆஞ்சனேயரை தரிசித்து வெளியே வர பிரசாத பொட்டலங்களும், வடைகளும் விற்றுக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்களுக்கு தேவையானதை வாங்கி கொண்டு அருகிலிருந்த பாறை மேல் அமர்ந்தவாறு அங்கே  கவிந்திருந்த அமைதியையும், சுற்றிலும் உள்ள காட்சிகளையும்  ரசித்தபடி சிறிது நேரம் அமர்ந்திருதோம். நிறைய பேர் அங்கே குழந்தைகளை விளையாட விட்ட படி பேசிக்  கொண்டிருந்தனர். 


கிருஷ்ணர், சிவன் கோவில் காட்சிகள் தூரத்தே 


ஆஞ்சனேயர் சிற்பம் படம்-2

கோவில் கோபுரம் 


கோட்டைக்கும் காட்சிகள் -2

                                           கோவிலை விட்டு கீழே இறங்கும் போது கோட்டைக்குளம் செல்லும் பாதை திறந்திருக்க அங்கு சென்றோம். சில சிறுவர்கள் மீன் பிடிக்க  முயற்சித்துக்  கொண்டிருந்தனர். குளத்தில்  இருந்த நீரையும் ,  கோவிலையும் பார்த்தபடி நின்றிருக்க மனதிற்கு இதமாக இருந்தது.



கோட்டைக்குளம் காட்சி படம் -3


கோட்டைக்குளம் காட்சி படம் -4

கோட்டைக்குளம் காட்சி படம் -5


கோட்டைக்குளம் காட்சி படம் -5

நிலவு தரிசனம் 

                                                           நாங்கள் கோவிலுக்கு சென்ற சிறிது நேரத்தில் இருட்ட ஆரம்பித்தபடியால் கோவிலில் சுவாமி தரிசனத்தோடு, வானத்தில் நிலவு தரிசனமும் சேர்த்துக் கிடைத்தது. 



ஆஞ்சனேயர் கோவில் காட்சி கீழிருந்து 

                                        மனதிற்கு அமைதியையும், இதத்தையும் தரும் இக்கோவிலுக்கு அருகிலேயே பத்ர காளியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது. அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் பார்க்கலாம் .

5 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன