திண்டுக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திண்டுக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கோன் கேக் (சிலோன் பேக்கரி, திண்டுக்கல்)

                                                        கோன் கேக் வெளியே கோன் மொறு மொறுவென்று இருக்க  உள்ளே உதிரியாக கேக் துகள்களை அடைத்து வாய்ப்புறத்தை இனிப்பான கிரீமினால் பூசியிருப்பர். இந்த கோன் கேக் திண்டுக்கல்லில் உள்ள சிலோன் பேக்கரி என்ற பெயரில் பல வருடங்களாக செயல்படும்  இக்கடையில் மிகவும் சுவை பட தயாரிக்கப்பட்டிருக்கும்.



கோன் கேக் 

                                         கோனுடன் உள்ளே இருக்கும் கேக்கை கிரீமுடன் சேர்த்து ஒரு கடி கடித்து சுவைக்க  அடுத்த கடிக்கு கையில் கோன் கேக் இருக்கிறதா என தெரியாத அளவில் வேகமாக காலியாகியிருக்கும். கோனின் உள்ளே இருக்கும் கேக்கை மட்டும் தனியே எடுத்து சாப்பிட சுவை சூப்பர்.


கோன் உள்ளே 

                                   கோனில் உள்ளே வைப்பதற்கென்றே காப்பி கலரில் மிதமான இனிப்பில் செய்த கேக்குடன் டூட்டி புரூட்டி எனப்படும் பப்பாளியால் கலர் கலராக தயாரிக்கப்படும்  ஒரு வித  இனிப்பு சுவையையும் இதனுடன் சேர்த்து கோனில் உள்ளே அடைத்திருப்பர் .

Image result for tooti footi
                                                                 டூட்டி புரூட்டி


                                                  இந்த டூட்டி புரூட்டி பல வித கேக்குகளிலும், பண்ணிலும் சுவைக்காக சேர்க்கப்படும் ஒன்றாகும்.


கோன் உள்ளே (படம் -2)

                                                    கோன் கேக்கை வாங்க வேண்டுமென்றால் சிலோன் பேக்கரிக்கு மாலை 4 மணிக்கு செல்ல வேண்டும். இங்கு இந்த கேக்  மிகவும் சுவைபட தயாரித்திருப்பதால்  (ஒரு  மணி நேரத்திலேயே) மாலை 5 மணிக்கே விற்றுத்  தீர்ந்து விடுகிறது.


ஸ்வீட் பப்ஸ் 

                                                    இங்கு கோன் கேக் மட்டுமல்லாது பல சுவைகளிலும், வண்ணங்களிலும் கேக்குகள் விற்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ், புது வருட நாட்களில் இங்கு கேக் வாங்க கூட்டம் அதிகளவில் இருக்கும்.

வெஜ் பப்ஸ் 

                                               இங்கு கேக்குகள் மட்டுமல்லாது பப்ஸ்களும் வித விதமாக காளான் ,வெஜிடபிள், சிக்கன், முட்டை  பப்ஸ் என தயாரிக்கப்பட்டு உடனே விற்று தீர்ந்து விடுகிறது. லட்டு, மைசூர் பாகு, சில்லி பிரட், ரோல் கேக், சூஸ்பரி என அனைத்து இனிப்புகளும் சுவையாக இருக்கும்.


சூஸ்பரி 

                                                       சிலோன் பேக்கரி எனும் இக்கடை திண்டுக்கல் கடை வீதியில், வெள்ளை விநாயகர் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.

சனி, 22 அக்டோபர், 2016

அபிராமி அம்மன் கோவில் கொலு மண்டபம் (திண்டுக்கல்)

நவராத்திரி சிறப்புகள் 

                                                 திண்டுக்கல் மாநகருக்கே  சிறப்பு சேர்க்கும்  அபிராமி அம்மன் கோவிலுக்கு நவராத்திரியின் போது சென்றிருந்தோம். நவராத்திரி ஒன்பது நாளும்  பாட்டு கச்சேரி, வீணை கச்சேரி, நாட்டியம் என பலவித நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழா பக்தர்களை கவர்ந்திழுத்தது. பல வருடங்களாக திண்டுக்கல்லின் மையப்பகுதியான கடை வீதியில் அபிராமி அம்மன் காளஹத்திஸ்வரருடன் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சமீபத்தில்தான் அதே இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


                                                   கொலு மண்டபத்தில் நடராஜர் 

                                                   கோவிலில் நாயன்மார்கள் வரிசைக்கு பக்கமாக உள்ள இடத்தில் இந்த வருடம் கொலு மண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அழகிய நடராஜருக்கு தனியாக மேடை அமைக்கப்பட்டு அருள் பாலிக்கிறார் .


                                             கலைமகள் அலங்காரத்தில் அம்மன் 

                                                            இருபுறமும் கொலு படிக்கட்டுகளுக்கு நடுவே அம்மன் வீணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஞான நெறியை நம்மில் ஊட்டுகிறார்.


                                                                கொலு அலங்காரம் 

                                                              கொலு படிக்கட்டுகளில் திருப்பதி ஏழுமலையான் ஆரம்பித்து வரிசையாக பகவான் விஷ்னுவின் அவதார சொரூபங்களும்,  சிவ லிங்கமும், அம்பிகைகளும் அருள் காட்சியருளிகின்றனர்.


                                                   கொலு அலங்காரம் காட்சி -2



                                                            கொலு படிக்கட்டுகளுக்கு கீழே நாட்டிய பொம்மைகள், பூரண கும்பம், காய்கறிகள் என அழகு செய்யப்பட்டுள்ளன.


                                                   கொலு அலங்காரம் காட்சி -3

                                                                       கொலு படிக்கட்டுகளுக்கு இடப்புறத்தே அம்மன், நந்தி தேவர் முதலான விக்ரகங்கள் ஒரு சிறு மேடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் 4.30 மணிக்கே கோவிலுக்கு சென்றதால், விளக்கு வெளிச்சத்துக்கு முன்னதான கொலு படிக்கட்டுகளையும் சேர்த்து காட்சிக்கு பதிவு செய்தோம்.


                                                    கொலு அலங்காரம் காட்சி -4

                                                             கொலு படிக்கட்டுகளுக்கு இடப்புறம் நந்தி தேவர் முதலான விக்கிரகங்களுக்கு சற்றுத் தள்ளி மற்றைய ஏனைய உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


                                                    கொலு அலங்காரம் காட்சி -5

                                                           கொலுவில் வீற்றிருக்கும் அம்மனையும், நடராஜரையும் , கொலுவுக்கு அலங்கரிக்கும் ஐயர்கள்.

                                                     கொலு அலங்காரம் காட்சி -6

                                            சீரியல் பல்புகள் அலங்கார வெளிச்சத்தில் மின்னும் கொலு விக்கிரகங்கள்.

                                                      கொலு அலங்காரம் காட்சி -7

                                                       கொலு அலங்காரம் காட்சி -8

                                                                    வீணை கோலம் 

                                                      கொலு படிக்கட்டுகளுக்கு முன் புறத்தே போடப்பட்டுள்ள வீணை கோலம். இது போல் தினமும் ஒரு கோலம் வரையப்பட்டு கொலுவிற்கு அழகு சேர்த்தது.

                                                                           மாலைகள் 

                                                              அம்மனுக்கு அலங்காரம் செய்ய பல நிற மலர்களால் தொடுக்கப்பட்டு காத்திருக்கும் மாலைகள். 



                                                       கொலு அலங்காரம் காட்சி -9

                                                               இரண்டு கொலு படிக்கட்டுகளுக்கும் நடுவே ராதா கிருஷ்ணரும், சுற்றிலும் சிறிய அளவில் கிருஷ்ணர் மற்ற பொம்மைகளும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டு பார்த்துக் கொண்டேயிருக்க தூண்டுகிறது. பலரும் கொலுவை பார்த்து ரசித்ததோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருந்தனர். 
                                                                     நவராத்திரி முடிந்து பத்தாவது நாள் கோவிலில் நிறைவாக சண்டி ஹோமம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு யாகத்தில் எழும் புகை நம் மீது படுவது சகல நன்மைகளையும் கொண்டு தரும் என்பர்.

                                                                     

                                                          மூன்று தேவியர்கள் 

                                                                அபிராமி அம்மன் கோவிலுக்கு சற்றுத் தள்ளி உள்ள வாசவி மஹாலிலும் கொலு பார்க்க சென்றோம். அங்கு சரஸ்வதி முதலான மூன்று தேவியர்களும் சர்வாலங்காரத்துடன் அருள் காட்சியளித்தனர். அவர்களை வணங்கி விட்டு அருகே பொங்கல், புளியோதரை பிரசாதத்தை வாங்கி சுவைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினோம்.




வியாழன், 22 செப்டம்பர், 2016

மலைக்கோட்டை ஆஞ்சனேயர் கோவில் (திண்டுக்கல் )

                                              இந்த வாரம் சனிக்கிழமை கோவிலுக்கு செல்லலாம் என யோசித்த போதே மலைக்கோட்டை ஆஞ்சனேயர் கோவில் விசேஷமாக இருக்கும் என அங்கு சென்றோம். இக்கோவில் பல வருடங்களாக வழிபாட்டுத் தலமாக  இருந்தாலும் சமீபத்தில்தான் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


சிவலிங்க தரிசனம் 
                                          
                                                     ஆஞ்சனேயர்  கோவில் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் கம்பீரமாக நீண்டு பறந்து  திண்டுக்கல் மாநகரத்திற்கே பெருமை சேர்க்கும் சரித்திர புகழ் பெற்ற  மலைக்கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு சற்று கீழே பாறையில் படிகள் அமைத்து கோட்டை குளத்திற்கு மேலே இக்கோவில் அமைந்துள்ளது.
              
                                                     கோவில்   நுழைவு வாயிலின் உள்ளே நுழைந்தவுடன் துளசி, மாலை, எலுமிச்சம்பழங்களை ஒரு பெண்மணி விற்றுக் கொண்டிருக்கிறார். அதை வாங்கி கொண்டு அங்கிருக்கும்  நடைபாதையில் நடந்து சென்றால் முதலில் தென்படுவது சிவலிங்கத் திருமேனியும், நந்தி பகவானும் வீற்றிருக்கும் காட்சியாகும்.


தேவாரம் பாடியோர் 

                                        அமைதியான சூழ்நிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் தலைப் பகுதியில் அப்பர், சுந்தரர் முதலானோர் படங்களின் வாயிலாக காட்சியளிக்கின்றனர் .


சித்தர் பெருமக்கள் 

                                 சிவபெருமானுக்கு இடது பக்கத்தில் அகத்தியர், போகர், கொங்கணர்,  இடைக்காடர் என  பதினெண் சித்தர் பெருமக்கள்  காட்சியருளுகின்றனர்.


சித்தர் பெருமக்கள் படம்-2

கயிலாயம் ,மானசரோவர் 

                              சிவபெருமானுக்கு வலது புறத்தில் கைலாயத்தோடு, மானசரோவர் நதியும்,  சிவபெருமானும் வரையப்பெற்று ஓம் நமச்சிவாய எழுத்துக்களோடு அருளுகின்றார் . 

பஞ்சபூத தலங்கள் 

                                                 லிங்கத்திருமேனியின் வலது புறத்தில் மானஸரோவருக்கு பக்கத்தில் பஞ்ச பூத தலங்களுக்கு உள்ளே சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை அழகாக காட்சிப்படுத்தியிருந்தனர் .


யாக குண்டம் 

                                       சமீபத்தில் கும்பாபிஷேகம் நடை பெற்ற போது யாகம் வளர்த்த இடம்.  இங்குள்ள  மையை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக்  கொள்கின்றனர்.

கிருஷ்ணர் கோவில் 

                                            சிவ லிங்கத்திற்கு பின்புறம் உள்ள கோவிலில் கிருஷ்ணர் சந்நிதி உள்ளது.  இவரை வணங்கி விட்டு ஆஞ்சநேயரை தரிசிக்க மேலே ஏற ஆரம்பித்தோம்.

கம்பீரமாக தெரியும் மலைக்கோட்டை 

                              பாறையிலேயே பக்தர்கள் ஏறுவதற்கு தோதாக படிகள் செதுக்கப்பட்டுள்ளன. படிகளில் ஏறியபடியே சற்றே நிமிர்ந்து  பார்க்க மலைக்கோட்டை எழிலுடன் காட்சியளிக்கிறது.



கீழிருந்து பார்க்க ஆஞ்சனேயர் கோவில் 

                                    பாறை படிகள் வழியாக ஏறி வலதுபுறம் திரும்பினால் புதிதாக ஒரு வழி  கோட்டை குளத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருந்தது .


ஆஞ்சனேயர் கோவில் படம்-2


கோவில் முன்புறம் ஆஞ்சனேயர் சிற்பம் 

                            நுழைவாயில் முன்புறம் கோபுரத்தில் ஆஞ்சநேயரை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றோம் .


கோவில் உட்புறம் 

                                                          கோவிலின் உள்ளே கருங்கற்களால் எழுப்பப்பட்ட தூண்களின் நடுவே கருவறை சந்நிதியில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அய்யர் பக்தர்கள் கொண்டு வந்த துளசியை வாங்கி அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி குங்குமம் கொடுத்தார். மற்றொருவர் சடாரி கொண்டு வந்து தலையில் வைத்து துளசி கொடுக்க வாங்கி கொண்டு நகர்ந்தோம்   


பஞ்சமுக ஆஞ்சனேயர் ஓவியம் 

                                                      கோவிலின் உள்ளே சுற்றிலும் பார்த்த போது மக்கள் ஒரு ஓரமாக விளக்கு போடுவதையும்,  கருவறை சுவர்களில் ஓவியங்கள் தீட்டியிருந்ததையும் அதில் தத்ரூபமாக உள்ள  பஞ்சமுக ஆஞ்சநேயரையும்  ரசிக்க முடிந்தது.


இராமபிரானோடு அனுமர் 

                                           பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பக்கத்தில் இயற்கை காட்சிகளுக்கு இடையில் இராம பிரானும், அனுமந்தரும் அன்போடு தழுவிக் கொள்ளும் காட்சி ராம காவியத்தை வரிசையாக நினைவடுக்குகளில் தோற்றுவித்தது.



கோட்டைக்குளம் காட்சிகள் 

                                             கோயிலின் மேலே நின்று பார்த்தால் கீழே கோட்டைக்குளமும் அதில் அமைந்துள்ள மண்டபமும், ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த போட்டும், கண்ணுக்கு தென்பட்டது.



ஆஞ்சனேயர் கோவில் வெளிப்புறம் 

                                  ஆஞ்சனேயரை தரிசித்து வெளியே வர பிரசாத பொட்டலங்களும், வடைகளும் விற்றுக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்களுக்கு தேவையானதை வாங்கி கொண்டு அருகிலிருந்த பாறை மேல் அமர்ந்தவாறு அங்கே  கவிந்திருந்த அமைதியையும், சுற்றிலும் உள்ள காட்சிகளையும்  ரசித்தபடி சிறிது நேரம் அமர்ந்திருதோம். நிறைய பேர் அங்கே குழந்தைகளை விளையாட விட்ட படி பேசிக்  கொண்டிருந்தனர். 


கிருஷ்ணர், சிவன் கோவில் காட்சிகள் தூரத்தே 


ஆஞ்சனேயர் சிற்பம் படம்-2

கோவில் கோபுரம் 


கோட்டைக்கும் காட்சிகள் -2

                                           கோவிலை விட்டு கீழே இறங்கும் போது கோட்டைக்குளம் செல்லும் பாதை திறந்திருக்க அங்கு சென்றோம். சில சிறுவர்கள் மீன் பிடிக்க  முயற்சித்துக்  கொண்டிருந்தனர். குளத்தில்  இருந்த நீரையும் ,  கோவிலையும் பார்த்தபடி நின்றிருக்க மனதிற்கு இதமாக இருந்தது.



கோட்டைக்குளம் காட்சி படம் -3


கோட்டைக்குளம் காட்சி படம் -4

கோட்டைக்குளம் காட்சி படம் -5


கோட்டைக்குளம் காட்சி படம் -5

நிலவு தரிசனம் 

                                                           நாங்கள் கோவிலுக்கு சென்ற சிறிது நேரத்தில் இருட்ட ஆரம்பித்தபடியால் கோவிலில் சுவாமி தரிசனத்தோடு, வானத்தில் நிலவு தரிசனமும் சேர்த்துக் கிடைத்தது. 



ஆஞ்சனேயர் கோவில் காட்சி கீழிருந்து 

                                        மனதிற்கு அமைதியையும், இதத்தையும் தரும் இக்கோவிலுக்கு அருகிலேயே பத்ர காளியம்மன் கோவில் மற்றும் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது. அதனைப் பற்றி பிறிதொரு பதிவில் பார்க்கலாம் .

சனி, 21 மே, 2016

ஆட்டுக்கறி விருந்து (பகுதி -2)

ஞாயிறு ஸ்பெஷல் (கறிக்குழம்பு சமையல் )

                       இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பகுதியில் ஆட்டுக்கறி விருந்து சமையல் மற்றும் சாப்பாடு பற்றிய பதிவு -2  .... 

ஆட்டுக்கறி விருந்து இலையில்  

                                   வெயில் காலம் தொடங்கி விட்டதால்  சிக்கன் வேண்டாம் என வீட்டில் அனைவரும் முடிவு செய்ததால் இந்த வாரம்  ஞாயிறு ஸ்பெஷலாக கறிக்குழம்பு வைக்கலாம் என முடிவு செய்தோம்.    


ஆட்டுக்கறி பார்சல் இலையில் 

                               எங்கள் வீட்டில் எப்போது ஆட்டுக்கறி வாங்குவதென்று நினைத்தாலும் சின்னக்காளை கறிக்கடையில்தான் கறி வாங்குவோம். இந்த கடையில் ஞாயிறு என்றாலே கறி வாங்க ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நிரம்பி வழியும். எனக்கு ஈரல், எனக்கு கறி, சூப்பெலும்போடு கொழுப்பு சேர்த்து வையுங்கள் என பலவித குரல்கள் கேட்டபடி இருக்கும். நாங்களும் இதை வேடிக்கை பார்த்து ரசித்தபடியே நின்று கறி வாங்குவோம். 


ஆட்டுக்கறி எலும்பு சூப் 

                                      அன்றும் அரைமணிநேரம் காத்திருந்து கறி வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றோம். கறியை அலசி விட்டு மஞ்சள், சீரகம் போட்டு வேக வைத்து அம்மா சூப் தயாரித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொடுத்தார்கள். சூப்பில் நல்லெண்ணெயும், கொழுப்பும் மிதக்க அதனோடு இருந்த கறி எலும்பின் வாசனையும் சேர்ந்து சற்று ஆறும் வரை கூட காத்திராது குடிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. குழம்பிற்கு பதிலாக சூப்பையே  சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிடும் அளவிற்கு  சூப் சுவையாக தயாரித்திருந்தார்கள்.


உருளையோடு வறுத்த கறி 

                                               கறி வறுவல் செய்ய எங்கள் வீட்டில் அம்மாவே கறி மசால் பொடி  ரெடி பண்ணி வைத்திருப்பார்கள். அதனோடு சிறிது தேங்காயும் துருவி  ஊற்றி மசாலாவை கறியிடன் கொதிக்க விட்டு சிறிது சிறிதாக சுண்ட விட சுண்ட விட  வீடெங்கும் வறுத்த கறி வாசனை தூக்கியடித்தது. இந்த கிரேவியை  சாப்பாட்டோடு பிசைந்து அம்மா உருண்டை பிடித்து தரும் போது அதன் சுவையை சொல்ல வார்த்தையே இல்லை.


வறுத்த கறி படம் - 2

                                                 கறியுடன்  சேர்த்த உருளைகிழங்குடன் கூடிய கிரேவி ரசம் சாப்பாட்டுக்கு அருமையான காமினேசன். அத்தோடு  பரோட்டா, சப்பாத்திக்கும் தொட்டு கொண்டு சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

கறி உருளைக் குழம்பு 

                                          கறிக்குழம்பில் வழக்கம் போலவே கறியுடன் உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், கத்தரிக்காய் என் அனைத்தும் சேர்த்து குழம்பு கூட்டி இறக்கியதும் சுவையான ஆட்டுக்கறி விருந்து தயார். வாழை இலையில் சாதம், கறிக்குழம்பு, கறி கிரேவியிடன் உருளை, முருங்கைக்காய் என சேர்த்து சாப்பிட ஒவ்வொரு காயும் தனி ருசியில் மிகவும் சுவையுடன்  இருக்க அறுசுவை விருந்தாக அமைந்தது இந்த வார ஞாயிற்றுக்கிழமை.