சின்னக்காளை கறிக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சின்னக்காளை கறிக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மே, 2016

ஆட்டுக்கறி விருந்து (பகுதி -2)

ஞாயிறு ஸ்பெஷல் (கறிக்குழம்பு சமையல் )

                       இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பகுதியில் ஆட்டுக்கறி விருந்து சமையல் மற்றும் சாப்பாடு பற்றிய பதிவு -2  .... 

ஆட்டுக்கறி விருந்து இலையில்  

                                   வெயில் காலம் தொடங்கி விட்டதால்  சிக்கன் வேண்டாம் என வீட்டில் அனைவரும் முடிவு செய்ததால் இந்த வாரம்  ஞாயிறு ஸ்பெஷலாக கறிக்குழம்பு வைக்கலாம் என முடிவு செய்தோம்.    


ஆட்டுக்கறி பார்சல் இலையில் 

                               எங்கள் வீட்டில் எப்போது ஆட்டுக்கறி வாங்குவதென்று நினைத்தாலும் சின்னக்காளை கறிக்கடையில்தான் கறி வாங்குவோம். இந்த கடையில் ஞாயிறு என்றாலே கறி வாங்க ஆண்களும், பெண்களுமாக கூட்டம் நிரம்பி வழியும். எனக்கு ஈரல், எனக்கு கறி, சூப்பெலும்போடு கொழுப்பு சேர்த்து வையுங்கள் என பலவித குரல்கள் கேட்டபடி இருக்கும். நாங்களும் இதை வேடிக்கை பார்த்து ரசித்தபடியே நின்று கறி வாங்குவோம். 


ஆட்டுக்கறி எலும்பு சூப் 

                                      அன்றும் அரைமணிநேரம் காத்திருந்து கறி வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றோம். கறியை அலசி விட்டு மஞ்சள், சீரகம் போட்டு வேக வைத்து அம்மா சூப் தயாரித்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கொடுத்தார்கள். சூப்பில் நல்லெண்ணெயும், கொழுப்பும் மிதக்க அதனோடு இருந்த கறி எலும்பின் வாசனையும் சேர்ந்து சற்று ஆறும் வரை கூட காத்திராது குடிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. குழம்பிற்கு பதிலாக சூப்பையே  சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிடும் அளவிற்கு  சூப் சுவையாக தயாரித்திருந்தார்கள்.


உருளையோடு வறுத்த கறி 

                                               கறி வறுவல் செய்ய எங்கள் வீட்டில் அம்மாவே கறி மசால் பொடி  ரெடி பண்ணி வைத்திருப்பார்கள். அதனோடு சிறிது தேங்காயும் துருவி  ஊற்றி மசாலாவை கறியிடன் கொதிக்க விட்டு சிறிது சிறிதாக சுண்ட விட சுண்ட விட  வீடெங்கும் வறுத்த கறி வாசனை தூக்கியடித்தது. இந்த கிரேவியை  சாப்பாட்டோடு பிசைந்து அம்மா உருண்டை பிடித்து தரும் போது அதன் சுவையை சொல்ல வார்த்தையே இல்லை.


வறுத்த கறி படம் - 2

                                                 கறியுடன்  சேர்த்த உருளைகிழங்குடன் கூடிய கிரேவி ரசம் சாப்பாட்டுக்கு அருமையான காமினேசன். அத்தோடு  பரோட்டா, சப்பாத்திக்கும் தொட்டு கொண்டு சாப்பிட சுவை சூப்பராக இருக்கும்.

கறி உருளைக் குழம்பு 

                                          கறிக்குழம்பில் வழக்கம் போலவே கறியுடன் உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், கத்தரிக்காய் என் அனைத்தும் சேர்த்து குழம்பு கூட்டி இறக்கியதும் சுவையான ஆட்டுக்கறி விருந்து தயார். வாழை இலையில் சாதம், கறிக்குழம்பு, கறி கிரேவியிடன் உருளை, முருங்கைக்காய் என சேர்த்து சாப்பிட ஒவ்வொரு காயும் தனி ருசியில் மிகவும் சுவையுடன்  இருக்க அறுசுவை விருந்தாக அமைந்தது இந்த வார ஞாயிற்றுக்கிழமை.    








புதன், 11 மே, 2016

ஆட்டுக் கறி விருந்து(ஞாயிற்று கிழமைகளில்)

சின்னக்காளை கறிக்கடை, திண்டுக்கல் 

                  ஞாயிற்றுக்கிழமை என்றாலே பலருக்கும் அது விடுமுறை தினமாதலால் எல்லோர் வீட்டிலும் பெரும்பாலும் அசைவமே சமைக்கப்படும். கறிக் கடைகள், கோழிக் கடைகள், மீன் மார்க்கட் என அனைத்து வகை அசைவ கடைகளிலும்  மக்கள் கூட்டம் நிறையும்.


                                             சின்னக் காளை கறிக்கடை 

                                    திண்டுக்கல்லை பொறுத்த வரையில் வேணு பிரியாணி ரோட்டில் உள்ள இந்தக் கடையில் காலை 6 மணிக்கே சென்றாலும் கூட்டமாகவே காணப்படும். இந்தக் கடைக்கு என பெயர் பலகை எதுவும் இருந்தது இல்லை. ஆனால் மக்கள் அழைப்பது சின்னக் காளை கடை என்றுதான். இங்கு காலையில் இருந்தே ஆண்கள், பெண்கள் என கறி வாங்குவதற்கு கூட்டம் நின்று கொண்டே இருக்கும். மதியம 2 மணிக்கு  பிறகே இங்கே கூட்டம் சற்று குறைய ஆரம்பிக்கும் .

                                            கறிக் கடை படம் - 2
                                         
                                           இங்கு  கடையின் உள்ளே பனியனுடன் நிற்பவர்தான் இந்த கடைக்கு முதலாளி, இவர் நிற்கும் பக்கம் ஆண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். கடையின் கல்லா பக்கம்  இவரது மனைவி அமர்ந்திருப்பார். இங்கே பெண்கள் கூட்டமாக நின்று கறி  வாங்க பணத்தை நீட்டிக்  கொண்டேயிருப்பர். கறி எனக்கு அரை கிலோ, எனக்கு 1 கிலோ,100 ஈரல் தனியாக வையுங்கள் என குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் . கறியை வாழை இலையில் வைத்து பார்சல் பண்ணித்  தருகின்றனர்.

                                                      ஆட்டுக் கறி பார்சல் 

                                                இந்தக் கறிக் கடையில் கறி மட்டுமல்லாது கறியோடு சேர்த்து குடல், தலைக் கறி, ஆட்டுக் கால், மூளை, நுரையீரல்,சுவரொட்டி என அனைத்தும் கிடைக்கும். குடலை இவர்களே சுத்தம் பண்ணி அறுத்து கொடுத்து விடுவர். ஆட்டுக் காலும் வாட்டி  துண்டு போடப்பட்டே கொடுக்கப்படுவதால் சுத்தம் பண்ணும் சிரமம் அவ்வளவாக நமக்கு இல்லை. வீட்டிற்கு போய் ஒரு அலசு அலசி சமைத்து விடலாம்.

                                               ஆட்டுக் கறி தண்ணீரில் 

                                   இந்தக் கடையில் இருந்து அதிக தூரத்தில் வெவ்வேறு ஏரியாக்களில் குடியிருப்போர் கூட இங்கு வந்தே  கறி  வாங்குவர் . சில சமயம் வெளியூர்களில் இருந்து வருவோர் கூட இங்கு கறி வாங்கி செல்வர். காரணம் ஆட்டு கறியானது சக்கை சக்கையாக இல்லாமல் கொழுப்புடன் சேர்ந்த கறியாக சமையலில் அதிக ருசியைக்  கொடுக்கும்.  


                                               கறிக் கடைக்கு எதிர் பக்கம் 

                                                    சின்னக்காளை   கறிக்கடை    மாரியம்மன் கோவில் சமீபத்தில் வேணு பிரியாணி ரோட்டில் உள்ளது. இந்த கடைக்கு அருகிலேயே காய்கறி மார்க்ட்டும், சுற்றிலும் நிறைய கறிக் கடைகள், கோழி,  மீன் விற்கும் கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்  கிழமைகளில் இந்த ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கோ, ஏன் நடப்பதற்கே இடம் இல்லாத அளவு கூட்டம் நிரம்பி வழியும் .













                                                                                          தொடரும்............