சனி, 15 அக்டோபர், 2016

வீச்சு பரோட்டா ( J .B ஹோட்டல் ),திண்டுக்கல்


                                           பரோட்டா என நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும் உணவு வகையாக பலருக்கும் தோன்றும். அந்த பரோட்டாவும் சாதா பரோட்டாவாக சாப்பிட போரடிக்கும் போது அதில்தான் எத்தனை வகை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா , முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, எண்ணெய் பரோட்டா என ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சுவைகளில் பரோட்டா நினைவில் வட்டமடிக்கும்.


வீச்சு பரோட்டா 

                                             நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது பரோட்டா என்பது வருடத்திற்கு இரு முறை  அப்பா வேலை விட்டு வரும் போது பார்சல் வாங்கிக் கொண்டு வருவார். அன்று காலையிலிருந்தே நானும் என் அண்ணனும் பரோட்டா அப்பா இரவுதான் வாங்கிக் கொண்டு வருவார் என தெரிந்திருந்தாலும் ஒரு இதமான எதிர்பார்ப்பில் காத்திருப்போம். 
                                                   இரவு எவ்வளவு நேரம் ஆனாலும்  அப்பா வந்தானதும் குதித்துக் கொண்டு சென்று பார்சலை வாங்கி வேகமாக பிரித்து எனக்கு இத்தனை, இல்லை எனக்குத்தான் என சண்டை போட்டுக் கொண்டே சாப்பிடுவோம். அம்மாவும், அப்பாவும் நாங்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசித்து சிரிப்பர்.  இப்போது பரோட்டா அடிக்கடி சாப்பிடும் உணவாக மாறியிருந்தாலும்  ஏனோ அந்த சிறு வயது சந்தோசம் கிடைப்பதில்லை.


வீச்சு பரோட்டா படம்-2

                                                      இந்த வாரம் வீட்டில் பரோட்டா செய்து பார்க்கலாம் என முயற்சி செய்து சரி வராமல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெ. பி ஹோட்டலில் வீச்சு பரோட்டாவும், சாதா பரோட்டாவும் பார்சல் வாங்கினோம். வாங்கி வரும் போதே மூக்கை வருடிய சால்னா வாசனையில் பக்கத்து வீட்டில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோர் என்ன பரோட்டா பார்சலா? என்றனர் .



                                                 சால்னாவில் ஊறிய  வீச்சு பரோட்டா 

                                               வீட்டுக்கு போய் பார்சலை பிரித்ததும் இலையில்  வீச்சு பரோட்டா பொன்னிறமாகவும், சதுர வடிவிலும் காட்சியளித்தது. பரோட்டா ஒரு விள்ளல் எடுத்து  வாயில் போட மொறு மொறுவென சுவையாக இருந்தது.
                                           சால்னா இல்லாமலே வீச்சு பரோட்டா சுவையாக இருக்க, சால்னாவில் ஊறிய  மொறு மொறுப்பான பரோட்டா சீக்கிரமே வாயில் கரைந்து காணாமல் போயிற்று.


சால்னா, வீச்சு பரோட்டா 

                                  வீச்சு பரோட்டாவை சால்னாவில் முக்கியும், சிறிதளவே தொட்டுக் கொண்டும் சாப்பிட இரண்டுமே தனித் தனி சுவையில்  நன்றாக இருந்தது.


வெங்காய ஆம்லெட் 

                                                     பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட வீட்டில் வெங்காயம் நன்றாக வதக்கி அதில் முட்டையை அடித்து ஊற்றி ஆம்லெட் செய்து பரோட்டா சால்னாவில் சேர்க்க சால்னா வாசமும், இலையில் இருந்த பரோட்டாவோடு சேர்ந்த  ஆம்லெட் மணமும்   உடனே சுவைத்து  பார்க்கத் தூண்டியது..


மணக்கும் சால்னா 

                                         இந்த  ஹோட்டலில் பரோட்டாவுக்கு கொடுக்கும் கோழி குழம்பு சால்னா நல்ல சுவையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும். சால்னாவில்  மிதக்கும் எண்ணெய்யும், காரமும் அதில் இருந்து வரும் கோழி கறியின் வாசமும் சேர்ந்து பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டே  இருக்கத்  தோன்றும். இந்த சால்னா வீட்டில் நாம் செய்யும் சப்பாத்திக்கும் சரியான காமினேஷனாக இருக்கும்.


ஆம்லெட்டோடு சால்னா 

                                    ஆம்லெட்டுக்கும் சால்னாவை ஊற்றி தொட்டுக் கொண்டு சாப்பிட  வித்தியாசமான சுவையில் ஆம்லெட் மணத்தது.


சாதா பரோட்டா 

                                                சாதா பரோட்டா தனியாக பார்சல் வாங்கினோம்.  பரோட்டா வாழை இலையின் வாசத்தோடு சாப்பிட  மிருதுவாக இருந்தது.


சால்னாவில் ஊறிய சாதா பரோட்டா 

                                                     சாதா பரோட்டாவை உதிர்த்து போட்டு அதில் காரத்துடன் எண்ணெய் மிதக்கும்  சால்னாவை ஊற்றி, முட்டை ஆம்லெட்டோடு  சேர்த்து பிசைந்து சாப்பிட சால்னாவின் காரம் பரோட்டாவுக்கும், முட்டைக்கும் இறங்கி நாவுக்கு  சுவை சேர்த்தது.


பரோட்டா பார்சல் 

தொடரும் ........

4 கருத்துகள்:

  1. ஆம் நண்பரே எனக்கும் சிறு வயதில் புரோட்டா வாங்கி வந்து தூக்குச்சட்டியில் சால்னாவோடு பிச்சுப்போட்டு ஊற வைத்து தின்ற ஞாபகம் வந்து விட்டு அப்பொழுது புரோட்டா விலை - 0.25 பைசா இன்று ?
    த.ம.1

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன