பரோட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரோட்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஜூன், 2021

அரைத்த பரோட்டா


                                இந்தப்  பதிவை வாசிக்கும் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். பெரும்பாலோர் இன்றும் இரவில் பரோட்டா மட்டுமே சாப்பிடும் வழக்கமுடையவராக இருக்கின்றனர். அந்த பரோட்டாவில்தான் எத்தனை வகையான சுவைகள். சாதா பரோட்டா, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, கல்டா பரோட்டா, கிளி பரோட்டா  மற்றும் பல விதங்கள். அதில் ஒன்றான அரைத்த பரோட்டா பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.


                                                   தினமும் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி வகைகள் சமைக்க சலிப்பை ஏற்படுத்த இன்று கடைக்குச் செல்லும் வழியில் பாய் கடையில் பரோட்டாக்களை கல்லில் போட்டு  பொன்னிறமாக எடுத்து அதை மேலும் மிருதுவாக்க இரண்டு கைகளாலும் நன்கு அடித்துக் கொண்டிருந்தார். கடைக்குள் நிறைய பேர் குழந்தைகளோடு அமர்ந்து வாழை இலையில் அந்த மிருதுவான பரோட்டாவை சால்னாவுடன் சேர்த்து பிசைந்து ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வாசம் நம்மையும்  சுண்டியிழுக்க  பரோட்டாக்கள் பார்சல் வாங்கிக்  கொண்டு சென்றேன்.


                                            வீட்டுக்கு சென்று பரோட்டா பார்சலை பிரித்த போது அதை அப்படியே சாப்பிடுவதை விட வேறு சுவைக்கு மாற்றினால் என்ன என்று யோசித்த போது ஒரு முறை நெட்டில் படித்த அரைத்த பரோட்டா நியாபகத்துக்கு வந்தது. அதையே செய்யலாம் என முடிவு செய்து மடமடவென்று வேலையை ஆரம்பித்தேன்.


அரைத்த பரோட்டா செய்யத்  தேவையானவை: 

பரோட்டா - 4
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
கரம் மசாலா பொடி - 1 சிறிய தேக்கரண்டி  
மிளகாய்த்  தூள் - 1 சிறிய தேக்கரண்டி 
சால்னா - தேவையான அளவு 
உப்பு - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 


                                                    முதலில் பரோட்டாக்களை எடுத்து சிறிய துண்டுகளாக பிய்த்து வைத்து கொண்டு அதை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் .கொள்ளவும். பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொண்டு அதில் கரம் மசால் பொடி, மிளகாய் பொடி, சிறிது உப்பு  சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதனுடன் அரைத்த பரோட்டாவை சேர்த்து  விட்டு  அதில் நமது சுவைக்கு தகுந்தாற் போல் சால்னா ஊற்றி அனைத்தையும் சற்று நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லித்தழை  தூவி இறக்கி விட்டால் அரைத்த பரோட்டா ரெடி.


                                               அரைத்த பரோட்டாவின் மணம் மூக்கைத்  துளைத்து  பசியைத்  தூண்ட அடுத்த நொடி  வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு தட்டுடன் வரிசையாக சாப்பிட அமர்ந்தோம். 

\
                                அரைத்த பரோட்டா மணமாகவும்  வெகு சுவையாகவும் இருந்தது. வழக்கமாக சாப்பிடும் பரோட்டா போலின்றி இது கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் சாப்பிட நன்றாக இருந்தது. 


                                    பரோட்டாவை பிய்த்து போடும் போதே சாப்பிட கையும், வாயும் பரபரத்தாலும் பொறுமையாகவே அரைத்த பரோட்டா செய்து முடித்தேன்.


                                            பரோட்டாவை வாழை இலையில் வைத்து பார்க்கும் போதே சற்று பொன்னிறத்துடன், எண்ணெய் மினுமினுப்புடன் வாழை இலையின் வாசனையோடு, பரோட்டாவின் வாசனையும் சேர்ந்து சாப்பிடும் ஆசையை வெகுவாக அனைவருக்குள்ளும் ஏற்படுத்துகிறதல்லவா?


                                    சால்னா சேர்க்காமலே பரோட்டா செம டேஸ்ட்டாக இருக்க, அதனை சால்னாவுடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை. நீங்களும் அரைத்த பரோட்டாவும், சால்னா பரோட்டாவும் சுவைத்துப்  பாருங்களேன்.

பரோட்டா பதிவு தொடரும்.....

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

மலபார் பரோட்டா

                            பரோட்டா என நினைத்தாலே அனைவருக்கும் அவரவர்கள் சாப்பிட்ட பரோட்டாக்களின்  சுவை கண் முன்னே தோன்றி மறைந்து  நாவூறச் செய்யும் ஒரு சுவையான  உணவுப்  பண்டமாகும்.    


           நாம் விரும்பி சாப்பிடும் பரோட்டாக்களில்தான் எத்தனை வகை. கொத்து பரோட்டா, பொரிச்ச பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா,வாழை இலை பரோட்டா, மலபார் பரோட்டா என வித விதமான வகைகள். இன்று நம் பதிவில் சாப்பிட விரும்புவது மலபார் பரோட்டா .



                                           மலபார் பரோட்டா என்றவுடனே நம் நினைவுக்கு வருவது எங்கும் இயற்கை அன்னையின்  எழில் கொட்டிக் கிடக்கும் கேரள மண்தான். நமது ஊரில் இருக்கும் பரோட்டாக்களின் சுவை போலவே கேரள மண்ணின் சிறப்பான பரோட்டா உணவுதான் மலபார் பரோட்டா. பரோட்டாக்கள் லேயர் லேயராக பார்க்கும் போதே சுவைக்கத்  தூண்டும் வண்ணம்  மிருதுவாக இருக்கிறது.




                        மைதாமாவு, முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சிறிதளவு சர்க்கரை, எண்ணெய், தண்ணீர் என அனைத்தும் சேர்த்து பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை உருண்டைகளாக உருட்டி எவ்வளவுக்கு வீசி மடித்து வைக்கிறோமோ அந்த அளவுக்கு பரோட்டா மிருதுத் தன்மையுடனும் , சுவையாகவும் இருக்கும்.



                                   இந்த முறை    கேரளா  சென்றிருந்த போது மலபார் பரோட்டா பற்றி கேள்விப்பட்டோம். வழக்கமான பரோட்டாக்களை விட அதில் என்ன தனி சுவை என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு உணவகத்தில் மலபார் பரோட்டா ஆர்டர் செய்தோம். பரோட்டா ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க ஆஹா என்ன சுவை. பரோட்டா  மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் இருந்தது. சால்னா கலக்காத பரோட்டா ஒரு வித சுவையாகவும், சால்னா ஊற்றி அதன் வாசத்துடன் பரோட்டாவை சேர்த்து சாப்பிட அது வேறு வகை சுவையுடன் நன்றாக இருந்தது.


                                     பரோட்டாவுடன் பொரித்த  சிக்கன் கறியும்  சேர்த்து சாப்பிட தனி சுவையாகவும், மணமாகவும் இருந்தது. நன்றாக மசாலாவில் கலந்து ஊறிய சிக்கனை எண்ணெய்யில் பொரித்து எடுத்து சால்னா பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட பரோட்டா வினாடியில் தட்டிலிருந்து மறைந்தது.



                                    பரோட்டாவின் சுவை சால்னாவுடன்  சேர்த்து சாப்பிடும் போதுதான் அதிகளவு தெரிகிறது. சில கடைகளில் பரோட்டா மிருதுவாக இருக்கும் ஆனால் சால்னாவில் சுவை இருக்காது. வேறு சில கடைகளில் பரோட்டா சற்று காய்ந்து போன மாதிரி இருந்தாலும் சால்னா சுவையாக இருந்தால்  பரோட்டாவை அதில் ஊற வைத்து சாப்பிட சுவை தூக்கி அடிக்கும். 
                        இந்த முறை மலபார் பரோட்டா சாப்பிட்ட அனுபவம் பயணத்தோடு சேர்ந்து இனிமையானதாக அமைந்தது.  



பரோட்டா பார்சல் தொடரும்...





சனி, 15 அக்டோபர், 2016

வீச்சு பரோட்டா ( J .B ஹோட்டல் ),திண்டுக்கல்


                                           பரோட்டா என நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும் உணவு வகையாக பலருக்கும் தோன்றும். அந்த பரோட்டாவும் சாதா பரோட்டாவாக சாப்பிட போரடிக்கும் போது அதில்தான் எத்தனை வகை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா , முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, எண்ணெய் பரோட்டா என ஒவ்வொருவருக்கும் பிடித்தமான சுவைகளில் பரோட்டா நினைவில் வட்டமடிக்கும்.


வீச்சு பரோட்டா 

                                             நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது பரோட்டா என்பது வருடத்திற்கு இரு முறை  அப்பா வேலை விட்டு வரும் போது பார்சல் வாங்கிக் கொண்டு வருவார். அன்று காலையிலிருந்தே நானும் என் அண்ணனும் பரோட்டா அப்பா இரவுதான் வாங்கிக் கொண்டு வருவார் என தெரிந்திருந்தாலும் ஒரு இதமான எதிர்பார்ப்பில் காத்திருப்போம். 
                                                   இரவு எவ்வளவு நேரம் ஆனாலும்  அப்பா வந்தானதும் குதித்துக் கொண்டு சென்று பார்சலை வாங்கி வேகமாக பிரித்து எனக்கு இத்தனை, இல்லை எனக்குத்தான் என சண்டை போட்டுக் கொண்டே சாப்பிடுவோம். அம்மாவும், அப்பாவும் நாங்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசித்து சிரிப்பர்.  இப்போது பரோட்டா அடிக்கடி சாப்பிடும் உணவாக மாறியிருந்தாலும்  ஏனோ அந்த சிறு வயது சந்தோசம் கிடைப்பதில்லை.


வீச்சு பரோட்டா படம்-2

                                                      இந்த வாரம் வீட்டில் பரோட்டா செய்து பார்க்கலாம் என முயற்சி செய்து சரி வராமல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜெ. பி ஹோட்டலில் வீச்சு பரோட்டாவும், சாதா பரோட்டாவும் பார்சல் வாங்கினோம். வாங்கி வரும் போதே மூக்கை வருடிய சால்னா வாசனையில் பக்கத்து வீட்டில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோர் என்ன பரோட்டா பார்சலா? என்றனர் .



                                                 சால்னாவில் ஊறிய  வீச்சு பரோட்டா 

                                               வீட்டுக்கு போய் பார்சலை பிரித்ததும் இலையில்  வீச்சு பரோட்டா பொன்னிறமாகவும், சதுர வடிவிலும் காட்சியளித்தது. பரோட்டா ஒரு விள்ளல் எடுத்து  வாயில் போட மொறு மொறுவென சுவையாக இருந்தது.
                                           சால்னா இல்லாமலே வீச்சு பரோட்டா சுவையாக இருக்க, சால்னாவில் ஊறிய  மொறு மொறுப்பான பரோட்டா சீக்கிரமே வாயில் கரைந்து காணாமல் போயிற்று.


சால்னா, வீச்சு பரோட்டா 

                                  வீச்சு பரோட்டாவை சால்னாவில் முக்கியும், சிறிதளவே தொட்டுக் கொண்டும் சாப்பிட இரண்டுமே தனித் தனி சுவையில்  நன்றாக இருந்தது.


வெங்காய ஆம்லெட் 

                                                     பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட வீட்டில் வெங்காயம் நன்றாக வதக்கி அதில் முட்டையை அடித்து ஊற்றி ஆம்லெட் செய்து பரோட்டா சால்னாவில் சேர்க்க சால்னா வாசமும், இலையில் இருந்த பரோட்டாவோடு சேர்ந்த  ஆம்லெட் மணமும்   உடனே சுவைத்து  பார்க்கத் தூண்டியது..


மணக்கும் சால்னா 

                                         இந்த  ஹோட்டலில் பரோட்டாவுக்கு கொடுக்கும் கோழி குழம்பு சால்னா நல்ல சுவையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும். சால்னாவில்  மிதக்கும் எண்ணெய்யும், காரமும் அதில் இருந்து வரும் கோழி கறியின் வாசமும் சேர்ந்து பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டே  இருக்கத்  தோன்றும். இந்த சால்னா வீட்டில் நாம் செய்யும் சப்பாத்திக்கும் சரியான காமினேஷனாக இருக்கும்.


ஆம்லெட்டோடு சால்னா 

                                    ஆம்லெட்டுக்கும் சால்னாவை ஊற்றி தொட்டுக் கொண்டு சாப்பிட  வித்தியாசமான சுவையில் ஆம்லெட் மணத்தது.


சாதா பரோட்டா 

                                                சாதா பரோட்டா தனியாக பார்சல் வாங்கினோம்.  பரோட்டா வாழை இலையின் வாசத்தோடு சாப்பிட  மிருதுவாக இருந்தது.


சால்னாவில் ஊறிய சாதா பரோட்டா 

                                                     சாதா பரோட்டாவை உதிர்த்து போட்டு அதில் காரத்துடன் எண்ணெய் மிதக்கும்  சால்னாவை ஊற்றி, முட்டை ஆம்லெட்டோடு  சேர்த்து பிசைந்து சாப்பிட சால்னாவின் காரம் பரோட்டாவுக்கும், முட்டைக்கும் இறங்கி நாவுக்கு  சுவை சேர்த்தது.


பரோட்டா பார்சல் 

தொடரும் ........

வியாழன், 23 ஜூன், 2016

முட்டை பரோட்டா( பரோட்டா பார்சல்)


                                 இந்த வாரம் பரோட்டா பார்சல் பகுதியில் அதிகமானோர் விரும்பும் முட்டை  பரோட்டா பற்றிய பதிவு .....


                                                       முட்டை பரோட்டா

                                    பரோட்டா மாவை தேய்த்து அதை ஒரு வீசு வீசி சட்டியில் போட்டு அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அப்படியே அதன் ஓரங்களை மூடி வேகவிட்டு சற்று பொன்னிறமானதும் எடுத்து தட்டில் போட முட்டை பரோட்டா ரெடியாகிறது. பரோட்டாவை வீசி முட்டையை உடைத்து ஊற்றும் போதே நமக்கு இங்கே பசியோடு சாப்பிட தோன்றுகிறது. பசுமையான வாழை இலையில் முட்டை பரோட்டாவை வைத்து தொட்டுக் கொள்ள 2 வகை சால்னாக்களுடன்  பார்சல் கட்டித் தருகின்றனர் .

இரண்டு வகை சால்னா

                                   வீட்டுக்கு வந்தவுடனே ஆவலாக பரோட்டாவை பிரித்து சால்னா இல்லாமலே ஒரு வாய் சாப்பிட சுவை சூப்பர் . பின் முட்டை பரோட்டாவை குடும்பத்துடன் ஆளுக்கு ஒன்றாக பங்கு போட்டு சால்னாவுடன் சுவைத்தோம். இரண்டு முட்டைகளை சேர்த்து கலக்கி ஊற்றியது போல பரோட்டாவில் முட்டை அதிகமாக பரந்திருந்தது.


சால்னாவுடன் முட்டை பரோட்டா 

                                            முட்டையில் உள்ள மஞ்சள் கருவை பரோட்டாவுடன் சேர்த்து பிசைந்து சால்னாவுடன் சாப்பிடும் போது சுவை கூடித் தெரிகிறது என அனைவரும் கோரஸாக சொல்ல சிரிப்பும் விளையாட்டுமாக அன்றைய பொழுது சென்றது. பரோட்டாவுக்கு இங்கே வெள்ளைக் குருமாவுடன் இன்னொரு வகை கார குழம்பும் தருகின்றனர்.


சாதா பரோட்டா 

                                    முட்டை பரோட்டாவோடு சேர்த்து சாதா பரோட்டாவும் பார்சல் வாங்கியிருந்தோம். பரோட்டா வட்டமாக பொன்னிறத்துடன், சற்று எண்ணெய் பசையுடன் கூடிய தோற்றத்துடன் பார்ப்பதற்க்கும், சாப்பிடுவதற்க்கும் நிறைவாக இருந்தது..


                                          சால்னாவில் ஊறிய பரோட்டா

                                  சாதா பரோட்டாவை இரண்டு வகை சால்னாவுடன் ஊற வைத்து சாப்பிடும் போது சால்னாவின் மணமும், பரோட்டாவின் சுவையும் இணைந்து சாப்பிட  நன்றாக இருந்தது .


                                                                                                        பரோட்டா பார்சல் 
                                                                                           







                           
                                        
                                                                                                               
தொடரும் .......      

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பரோட்டா (ஹோட்டல் ஆர்யாஸ்,சைவம் )

சைவ பரோட்டா

                    பரோட்டா சைவத்தில் சாப்பிடுவதை விட நிறைய பேருக்கு அசைவத்தில் சாப்பிடவே அதிகம் பிடிக்கும் என்றாலும் இந்த வாரம் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்காக இந்தப்  பதிவு .......



                                                சைவ பரோட்டா குருமாவுடன்

                              அன்று செவ்வாய்க் கிழமை கோவிலுக்கு போய் விட்டு திரும்பும் போது  சைவக் கடையில் பரோட்டா பார்சல் வாங்கலாம் என முடிவு செய்தோம். சைவ ஹோட்டல் திண்டுக்கல்லில் நிறைய இருந்தாலும் இந்த வாரம் அபிராமி அம்மன் கோவில் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகத்தை தேர்ந்தெடுத்தோம் . இங்கு பரோட்டா, இட்லி பார்சலுக்கு டோக்கன்  பெற்றுக் கொண்டு சுற்றிலும் பார்த்தபடி அமர்ந்தோம். ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்திருப்போர் தோசை, பரோட்டா என சாப்பிட்டுக் கொண்டும், பார்சல் வாங்கி கொண்டும் இருந்தனர். எங்களுக்கும் சிறிது நேரத்தில் பார்சல் பண்ணி கொண்டு வந்து  தந்தனர்.


                                                   ஹோட்டல் வெளிப்புறம் 

                                           இந்த ஹோட்டல் ஆர்யாஸ் சைவ உணவக கிளைகள் நிறைய இடங்களில் உள்ளது. திண்டுக்கல்லிலேயே பஸ் ஸ்டான்ட் அருகிலும் மற்றைய சில இடங்களிலும் இதன் கிளை உணவகங்கள் இருக்கின்றன .நாங்கள் பார்சல் வாங்கிய  ஹோட்டல் கிளையில்  முன்புறம் காபி, டீ, சைனீஸ் உணவுகள், சில்லி பரோட்டா உள்ளிட்டவை  சமைத்து தரப்படுகிறது.



                                                          ஹோட்டல் உள்ளே 

                                         ஹோட்டல் உள்ளே நல்ல விசாலமான அமைப்புடன் சுத்தமாக உள்ளது. ஹோட்டல் பணியாளர்கள் சீருடை அணிந்து வேலை செய்கின்றனர்.



                                                                 சைவ பரோட்டா 

                                       பரோட்டாவுக்கு இங்கே இரண்டு வகை குருமா தருகின்றனர். குருமாவில் சேர்ந்த காய்கறிகளும், அதனோடு மிதக்கும்  வெங்காயமும் ஊறி பரோட்டவுடன் சேர்த்து சாப்பிட  சுவையாக உள்ளது. இதனோடு தயிர் வெங்காயமும் ஒரு கவரில் கட்டித் தருகின்றனர்.  



                                                             இட்லி சாம்பார் 

                                                வாழை இலையில் இரண்டு இட்லிகளுடன் சாம்பாரும், சட்னியும் வைத்து  பார்சல் செய்திருந்தனர் .


                                                           மொறு  மொறு  பூரி 


                                    சைவமாக மட்டுமே சாப்பிடுவோருக்கு இங்கு பரோட்டா, சப்பாத்தி, பூரி அதனோடு ஊற்றிக் கொள்ள  குருமா, வெங்காயம் நன்றாக உள்ளது. அசைவத்தில்  பரோட்டா, சால்னா விரும்புவோரும் இந்த சைவ பரோட்டா, குருமா ஒரு முறை சுவைத்துப்  பாருங்களேன்.



                                                                                                        பரோட்டா பார்சல்

                                                                                                            தொடரும்....

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கொத்து பரோட்டா ( KM பிரியாணி, திண்டுக்கல்)


சுவையான கொத்து பரோட்டா

                       
                                பரோட்டா இந்த உணவு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாதா பரோட்டவே ருசியான உணவாக  இருக்கும் போது அந்த பரோட்டவை சிறு சிறு துண்டுகளாய்  உதிர்த்து விட்டு  அதனுடன் முட்டை, வெங்காயம், சால்னா என சேர்த்து கொத்தும் போது அதன் ருசியை சொல்லவும் வேண்டுமா? வீட்டில் நாங்கள்   பரோட்டாவுக்கு பதிலாக பூரியை உதிர்த்து விட்டு   இப்படி கிளறுவோம். அது ஒரு தனி சுவையாக நன்றாக இருக்கும். அன்று வெளியே சென்று விட்டு வரும் போது கடையில் கொத்து பரோட்டா வாங்குவோம் எனத் தோன்ற பக்கத்தில் இருந்த  KM ஸ்டாலில் கொத்து பரோட்டாவும், சாதா பரோட்டாவும் பார்சல் செய்தோம்.

                                                   கொத்து பரோட்டா

                                       கொத்து பரோட்டாவையும் , மற்றதையும்   பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம் . வீட்டுக்கு சென்றானதும் பார்சலை பிரிக்க கொத்து பரோட்டா பச்சை நிற  இலைக்கு நடுவே  அழகாக காட்சியளித்தது. இலையின் வாசனையும், கொத்து பரோட்டாவின் வாசனையும் சேர்ந்து எங்களுக்கு பசியைத்  தூண்டியது. அனைவரும் ஆளுக்கு கொஞ்சமாக எடுத்து ருசி பார்த்தோம். வெள்ளை குருமாவோடு சேர்த்து கொத்து  பரோட்டாவை பிசைந்து சாப்பிட எல்லாரும்  சுவை அருமை, இன்னொரு பார்சல் வாங்கியிருக்கலாமே  என்றனர் .

                                                             
                                                        சாதா பரோட்டா

                                        சாதா பரோட்டா வட்ட வட்டமாக பொன்னிறத்துடன் பார்க்கவே பசியை தூண்டும் ருசியுடன் இலையில் வீற்றிருந்தது. நமக்கு தேவைப்பட்டால் பரோட்டாவின் மீது எண்ணையை லேசாக தடவி தோசை சட்டியில் போட்டு 2 முறை திருப்பி விட்டால் பரோட்டா இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பியாக இருக்கும். எங்கள் வீட்டில் சில  சமயம் இப்படி செய்வதுண்டு .


                                      சால்னாவுடன் மணக்கும் பரோட்டா

                         பரோட்டாவை சிறு துண்டுகளாக்கி மணக்கும் வெள்ளை குருமாவோடு பரிமாறிய போது எடுத்த படம் . 


                                           பரோட்டா 2 வகை சால்னாவுடன் 

                             பரோட்டாவை இரண்டு வகை சால்னவுடன் கலந்து பரிமாறியது. இரண்டு சால்னாவும் சேர்த்து பிசைந்து சாப்பிட அது ஒரு புதுவித  சுவையாக இருந்தது.


                                                                               ஆம்லட்

                                வெங்காயம் , பச்சைமிளகாயை வதக்கி அதனோடு முட்டையை உடைத்து விட்டு நன்றாக  கலக்கி எண்ணையுடன் சேர்த்து பெரிய தோசைக்கலில் கேட்பவர்களுக்கு வரிசையாக வேக விட்டு எடுத்து தருகின்றனர். இந்த ஆம்லட் சப்பாத்தி மற்றும் பரோட்டாவுக்கு நல்ல காமினேசனாக இருக்கும் என்பர் . 


                                                               KM ஹோட்டல்

                                          KM பிரியாணி என்பது இந்த ஹோட்டலின் பெயராக இருந்தாலும் இங்கு கிடைக்கும் பரோட்டா சால்னா மற்றும் கொத்து பரோட்டா நல்ல சுவையாக இருக்கும். இந்த ஹோட்டல் திண்டுக்கல் கடை வீதியில் பேசன் சில்க்ஸ் கடைக்கு பக்கத்தில் உள்ளது. இதன் அருகே இரட்டை விநாயகர் கோவில் உள்ளதால் பெரும்பாலோனோர் அடையாளத்திற்கு இதை இரட்டை விநாயகர் கடை என்பர். இந்த ரோட்டிலேயே இன்னும் சிறிது தூரம் தள்ளி சென்றால் கார்னரில் இதன் கிளையாக இன்னொரு KM பரோட்டா கடை உள்ளது. நிறைய பேர் இங்கு சாப்பிட்டும், பார்சல் வாங்கியும் செல்கின்றனர்.





                                                                                                  பரோட்டா பார்சல் .....

                                                                                                          தொடரும்....











                                 
                                                                                                                                                                                          


செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )

பரோட்டா பார்சல்
       
                    அன்று ஒரு சனிக்கிழமை நாள், மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். என்ன சமைப்பது என யோசிக்க அனைவருக்கும் வீட்டு  சமையல் போரடித்ததால் பரோட்டா வாங்கி சாப்பிடலாம் என முடிவு செய்தோம். எங்கே வாங்குவது என யோசித்தபோது தெரிந்தவர் ஒருவர் அம்மா மெஸ்ஸில் நன்றாக இருக்கும் என சொன்னது நினைவு வர அங்கேயே வாங்கலாம் என முடிவு செய்து பரோட்டாவும் கரண்டி எனப்படும் முட்டை பதார்த்தமும் பார்சல் வாங்கினோம் .


   பரோட்டா சால்னா

                           பரோட்டா வாங்கியதும் வீட்டுக்கு சென்று அனைவரும் வட்டம் கூடி  அமர்ந்து ருசித்தோம். சேர்ந்து அமர்ந்து உண்ணும் போது எந்த உணவுமே சுவையாகவே இருக்கும். அதிலும் பரோட்டாவை  சாப்பிடும் போது மிகவும் சுவையாகவே இருந்தது. பொதுவாகவே  ரயில் பயணத்தின் போது பரோட்டா வாங்கி சென்று ரயிலில் அமர்ந்து சாப்பிடுவதை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு இரயிலில் செல்லும் போது நான் மட்டுமல்லாது பலரும் பரோட்டா வாங்கி வந்து உண்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். பரோட்டா என்பது அனைவரையும் கவரக்கூடிய உணவாக இருந்தாலும் திண்டுக்கல்லில் பிரியாணி மிகவும் பிரபலமானஉணவு வகையாகும்.

                                                                        கரண்டி

                       இந்த மெஸ்ஸில் பரோட்டாவோடு கூட  கரண்டி மிகவும் சுவையாக இருந்தது. பொதுவாக கரண்டி என்பது ஒவ்வொரு ஊரிலும் கலக்கி, போட்டி,ஆம்லட் என ஒவ்வொரு பெயரில் சொல்லப்படுகிறது. இதில் முட்டையுடன் வெங்காயம் மற்றும் சிலது  சேர்த்து குழி கரண்டி மாதிரி ஒன்றில் ஊற்றபடுகிறது. நான் சிறு வயதாய் இருந்த போது வீட்டில் என் அம்மா சாம்பிராணி போடும் குழி கரண்டி வைத்து  முட்டையை இப்படி உடைத்து ஊற்றுவார்கள். அது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


                                               பரோட்டவுடன் 2 வகை  சால்னா

                       இங்கு பரோட்டவுடன் இரண்டு வகை சால்னா தரப்படுகிறது .ஒன்று கறி  மசாலா குழம்பு சுவையிலும், மற்றொன்று தக்காளி சேர்த்து சற்று புளிப்புடன் கூடிய ருசியாகவும் உள்ளது .இரண்டு குழம்பையும் பரோட்டவுடன் சேர்த்து பிசைந்து கரண்டியுடன் சாப்பிட சுவையாக இருந்தது .

                                                             நாட்டுகோழி கிரேவி
                                         
                              அம்மா மெஸ் திண்டுக்கல் காட்டாஸ்ப்பத்திரி ரோட்டில் உள்ளது .இங்கு பணியாளர்கள் சீருடையணிந்து வேலை செய்கின்றனர் .பரோட்டா ஒன்று 13 ரூபாய் என விற்கப்படுகிறது .இங்கு பரோட்டாவை விட நாட்டுக்கோழி கிரேவி நன்கு விற்பனையாகிறது.அனைவரும் இதை பார்சல் வாங்கி செல்கின்றனர்.

                                 பரோட்டா என்பது சிலருக்கு அன்றாட உணவாகவும், பலருக்கு வீட்டு சாப்பாடு போரடிக்கும் போது  வாங்கி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. பொதுவாகவே பரோட்டா என்பது அனைவருக்கும் பிடித்த உணவாகும். திண்டுக்கல்லில் பரோட்டா 5 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை பல உணவகங்களில் பல வித சுவையில் விற்கப்படுகிறது .அதைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

                                                                                             

                                                                              பரோட்டா பார்சல் தொடரும்....