வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

மலபார் பரோட்டா

                            பரோட்டா என நினைத்தாலே அனைவருக்கும் அவரவர்கள் சாப்பிட்ட பரோட்டாக்களின்  சுவை கண் முன்னே தோன்றி மறைந்து  நாவூறச் செய்யும் ஒரு சுவையான  உணவுப்  பண்டமாகும்.    


           நாம் விரும்பி சாப்பிடும் பரோட்டாக்களில்தான் எத்தனை வகை. கொத்து பரோட்டா, பொரிச்ச பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா,வாழை இலை பரோட்டா, மலபார் பரோட்டா என வித விதமான வகைகள். இன்று நம் பதிவில் சாப்பிட விரும்புவது மலபார் பரோட்டா .



                                           மலபார் பரோட்டா என்றவுடனே நம் நினைவுக்கு வருவது எங்கும் இயற்கை அன்னையின்  எழில் கொட்டிக் கிடக்கும் கேரள மண்தான். நமது ஊரில் இருக்கும் பரோட்டாக்களின் சுவை போலவே கேரள மண்ணின் சிறப்பான பரோட்டா உணவுதான் மலபார் பரோட்டா. பரோட்டாக்கள் லேயர் லேயராக பார்க்கும் போதே சுவைக்கத்  தூண்டும் வண்ணம்  மிருதுவாக இருக்கிறது.




                        மைதாமாவு, முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சிறிதளவு சர்க்கரை, எண்ணெய், தண்ணீர் என அனைத்தும் சேர்த்து பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை உருண்டைகளாக உருட்டி எவ்வளவுக்கு வீசி மடித்து வைக்கிறோமோ அந்த அளவுக்கு பரோட்டா மிருதுத் தன்மையுடனும் , சுவையாகவும் இருக்கும்.



                                   இந்த முறை    கேரளா  சென்றிருந்த போது மலபார் பரோட்டா பற்றி கேள்விப்பட்டோம். வழக்கமான பரோட்டாக்களை விட அதில் என்ன தனி சுவை என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஒரு உணவகத்தில் மலபார் பரோட்டா ஆர்டர் செய்தோம். பரோட்டா ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க ஆஹா என்ன சுவை. பரோட்டா  மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் இருந்தது. சால்னா கலக்காத பரோட்டா ஒரு வித சுவையாகவும், சால்னா ஊற்றி அதன் வாசத்துடன் பரோட்டாவை சேர்த்து சாப்பிட அது வேறு வகை சுவையுடன் நன்றாக இருந்தது.


                                     பரோட்டாவுடன் பொரித்த  சிக்கன் கறியும்  சேர்த்து சாப்பிட தனி சுவையாகவும், மணமாகவும் இருந்தது. நன்றாக மசாலாவில் கலந்து ஊறிய சிக்கனை எண்ணெய்யில் பொரித்து எடுத்து சால்னா பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட பரோட்டா வினாடியில் தட்டிலிருந்து மறைந்தது.



                                    பரோட்டாவின் சுவை சால்னாவுடன்  சேர்த்து சாப்பிடும் போதுதான் அதிகளவு தெரிகிறது. சில கடைகளில் பரோட்டா மிருதுவாக இருக்கும் ஆனால் சால்னாவில் சுவை இருக்காது. வேறு சில கடைகளில் பரோட்டா சற்று காய்ந்து போன மாதிரி இருந்தாலும் சால்னா சுவையாக இருந்தால்  பரோட்டாவை அதில் ஊற வைத்து சாப்பிட சுவை தூக்கி அடிக்கும். 
                        இந்த முறை மலபார் பரோட்டா சாப்பிட்ட அனுபவம் பயணத்தோடு சேர்ந்து இனிமையானதாக அமைந்தது.  



பரோட்டா பார்சல் தொடரும்...





2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன