செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

கங்கை கொண்ட சோழன் (மாமன்னர் இராஜேந்திரரின் சரித்திரம் ) பதிவு - 2


 கங்கை கொண்ட சோழன் நாவல் 

           பொன்னியின் செல்வனையும், கங்கைகொண்ட சோழனையும், உடையாரையும் இன்னும் பல சரித்திர நாவல்களையும் விரும்பி வாசித்துக்கொண்டிருக்கும் வாசக நெஞ்சங்களுக்கும் மற்றும் எனது இப்பதிவை வாசித்து கொண்டிருப்போர்க்கும் என்னுடைய வணக்கங்கள் பல பல.                                    ஒரு மன்னன் தெற்கிலிருந்து கங்கை வரை படையெடுத்து செல்ல வேண்டுமெனில் தலைநகரிலிருந்து தன் தேசத்தை நிர்வகிக்கவும், படையெடுத்து போக பல லட்சம் வீரர்களை தன் வீட்டிலிருந்து அனுப்பும் தாய்மாரும், மங்கையரும் அடுத்ததாக தன் படைகளை துணையாக அனுப்பி தானும் போரில் கலந்து கொள்ள வரும் அண்டை நாட்டு மன்னர்களும், படைகளை வழி நடத்தும் தளபதிகளும் என பலரது ஒத்துழைப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் அஞ்சாத தீர நெஞ்சுடன் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மகனை இழந்தும் அந்த வருத்தத்தை மன உறுதியுடன் எதிர்கொண்டு அனைத்து தொல்லைகளையும் வெற்றிகளாக மாற்றி புலி கொடியை நிலைநாட்டி சோழர்களின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னர் இராஜேந்திரரின் மனத்திண்மையும் துணிச்சலுமே இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.                                             கங்கை வரை படையெடுத்து வெற்றி கொண்டதன் நினைவாகவே இராஜேந்திரர் எடுப்பித்த ஜெயங்கொண்டம் எனும் தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரம் என இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு அவர் அமைத்த கோவிலும், ஏரியும் இன்று வரை சோழர்களின் வெற்றியையும், மாமன்னர் இராஜேந்திரரின்  நினைவையும் நம்  மனதுக்கும், உலகத்துக்கும்  உரைத்துக்   கொண்டிருக்கிறது.                  மாமன்னர் இராஜேந்திரர் என்றதும்  முதலில் நம் நினைவுக்கு வருவது அவரது கங்கை கொண்ட வெற்றியும், கடல் கடந்த(ஸ்ரீ விஜயம்) படையெடுப்பின்  வெற்றியும், மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் அவர் எடுப்பித்த கோவிலும்(ஜெயங்கொண்டம்) மற்றும் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை எடுப்பித்த சக்கரவர்த்தி இராஜராஜரின் புதல்வர் என்பதுமாகும்.                                            சோழப்படையில் பல பிரிவுகள் இருந்தன. தெரிந்த கைக்கோளர் படை, வேளக்காரப்படை, வலங்கை, இடங்கை படைவீரர்கள், நானா தேசிக படை மற்றும் பல வித படைகளும் அவற்றை நிர்வகிக்க திறமையான படைத்தளபதிகளும் இருந்தனர். 

 

                        
                                                   இராஜராஜர் காலத்திலும், இராஜேந்திரர் காலத்திலும் தொடர்ந்து பல போர்கள் நடந்ததும், வெற்றி கொண்ட நாடுகளில் இருந்து பல பொருட்களும், யானைகளும், குதிரைகளும், தெய்வச்சிலை வடிவங்களும் சோழ தேசத்திற்கு கொண்டு வரப்பட்டதும்  வரலாற்று உண்மையாகும். மேலே படத்தில் உள்ள சிலைகள் சாளுக்கிய தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
                                      பல முறை போர்கள் நடைபெற்று சோழ தேசம் செழிப்புற்று விளங்கிய வரலாற்று பொற்காலம் மாமன்னர் இராஜராஜர் மற்றும் இராஜேந்திர சோழ மன்னர் ஆண்ட காலமாகும். 

 

         இராஜேந்திரசோழர் தன் தாய்(சிற்றன்னை) பஞ்சவன் மாதேவிக்காக பஞ்சவன் மாதேவீச்சுரம்(பட்டீஸ்வரம்) என்ற இடத்தில்  ஒரு பள்ளிப்படை கோவில் எடுப்பித்தார்.

         


                                            நாவலின் நான்கு பாகங்களிலும் மகாராணி வீரமாதேவியின் தீரமும் துணிச்சலான மனப்பாங்கும் மன்னரின் அனைத்து செயல்களிலும் அவரது பங்களிப்பும் மற்றும் பெண்களுக்கான முக்கியத்துவமும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாகத்தில் கப்பல் கட்டுவதைப் பற்றிய பல நுட்பங்களும் அதற்கு தேவையான மூங்கில் மரம், சவுக்கு மரம்,தேக்கு மரத்தின் தேவைகளும், உறுதியான கயிறும், பிசின் போன்ற பொருட்களும் பயன்படும் விதத்தை பற்றியும் ஒரு கப்பல் உருவாக தேவையான நாட்கள் என பல தகவல்களை வீரமாதேவி வாயிலாக ஆசிரியர் நமக்கு விளக்கியுள்ளார்.

                                                                   மூன்றாம் பாகத்தில் கங்கே யாதவின் தந்திரங்களை சமாளித்து கங்கை வரை உள்ள அனைத்து நாடுகளையும் வென்று அந்தந்த நாட்டு மன்னர்களின் தலைகளிலேயே கங்கை நீரை சுமந்து வரச்செய்து மன்னர் ஈட்டிய வெற்றிகளின் நிகழ்வுகளை நம் மனக்கண் முன் கொண்டு வரச்செய்துள்ளார். மேலும் போரின் போது பாதிக்கப்படும் மக்களின் மன நிலையையும், வெற்றி பெறும் நாட்டு மக்களின் களிப்பான உணர்வுகளையும், போரின் வெற்றியால் ஒரு நாட்டில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களையும், புதிதாக ஊர்களும்,குடியிருப்புகளும் உருவாகும் விதத்தையும் உணர முடிகிறது.                                            நான்காம் பாகம் கங்கை கொண்ட சோழபுரத்தின் ஸ்தாபித்தத்திற்கு பிறகு நிகழும் கடல் போரில் ஸ்ரீவிஜயத்தின் மீதான தாக்குதலின் வெற்றியையும், தலைத்தக்கோலம், கடாரம் போன்ற இடங்களின் பாங்கையும் மாமன்னர் இராஜேந்திரரின் இறுதிக்காலத்தையும் விளக்குகிறது. கடல் போருக்கு தேவையான மருந்துகள், பயணத்தின் போது தூங்குவதற்கு தேவையான தூளி, கடற்பயண பாதிப்பு, உணவு, குதிரைகளையும், யானைகளையும் கப்பலில் ஏற்றும் விதம், நீண்ட தூர போருக்கு தயாராகும் வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் மன நிலை என அனைத்தையும் தாண்டிச்சென்று இறுதியாக வெற்றி எனும் இலக்கை அடைவதை எழுத்துச்சித்தர் பாலகுமாரரின் எழுத்துக்களோடு நாமும் பயணித்து உணர முடிகிறது.                                    கங்கை கொண்டான் மற்றும் கடாரம் கொண்டான் என்ற பெயர் வர காரணமான போர் வெற்றிகளுக்கு பிறகான மாமன்னர் இராஜேந்திரரின் இறுதி காலம் காஞ்சிபுரம் மாவட்டம் பிரம்மதேசத்தில் அவரது சிதையோடு மகாராணி வீரமாதேவியும்  உயிர்துறக்கும் தருணத்தோடு நிறைவு பெறுகிறது. பல வெற்றிகளை ஈட்டி சோழ நாட்டின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற மாமன்னர் இராஜேந்திரரின் மறைவு எப்பேர்ப்பட்ட மனிதருக்கும் இறுதி என்ற ஒன்று உண்டு என்பதை நம் மனதை சுமையோடு அழுத்தி வாழ்க்கையின் நிதரிசனத்தை புரியச்செய்கிறது. 
 


                    பார்த்திபன் என்ற சோழ மன்னர் கண்ட கனவை அவர் மறைந்து 300 ஆண்டுகளுக்கு பின் நிறைவேற்றி காட்டிய இராஜேந்திர சோழ சக்கரவர்த்திகள் நம் மனதிலும், வரலாற்றிலும் என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.                                                                                                                                                                                                                        முந்தைய பதிவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

           https://abiyinpayanangalil.blogspot.com/2021/02/blog-post.html


 

3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன