ஞாயிறு, 14 மார்ச், 2021

பூத்திருவிழா



பூத்திருவிழா (திண்டுக்கல்  கோட்டை மாரியம்மன்)
 
                             வரலாற்றுப்  புகழ் மிக்க ஹைதர் அலியோடும், திப்பு சுல்தானோடும் தொடர்புடைய மலைக்கோட்டையை தன்னுள்ளே கொண்டுள்ள திண்டுக்கல் மாநகரத்தில் கோட்டை மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழாவை பற்றிய நிகழ்வுகளே இந்தப் பதிவில் பூத்திருவிழாவாக  உங்களது பார்வைக்கு.... 

கோட்டை மாரியம்மன் 

                                         மலைக்கோட்டைக்குக்  கீழே பரந்து விரிந்திருக்கிறது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டதையெல்லாம் வாரிக்  கொடுக்கும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவில். வருடா வருடம் மாசி மாதம் கோட்டை மாரிக்கு நடைபெறும் இத்திருவிழா மாசித்திருவிழா என திண்டுக்கல் மக்களால் கொண்டாடப்படும். திண்டுக்கல் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் கோட்டை மாரிக்கு மாசி மாத திருவிழாவின் போது அவரவர்  நேர்த்திக்கடனை பக்தி சிரத்தையோடு செலுத்துவர்.

                                                                    பூக்கோலங்கள் 

                                                வருடத்திற்க்கு ஒரு முறை மாசி மாதம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றுவதற்க்கு  முதல் வாரம்  வியாழக்கிழமையன்று கோவில் வளாகத்தின் உள்ளே பூக்களாலேயே கோலமிடப்பட்டு எழிலுற விளங்கும். பக்தர்கள் வரிசையாக நின்று பூக்களால் வரையப்பட்ட கோலங்களை பார்த்து ரசித்தவாறு உள்ளே சென்று அம்மனை தரிசித்து மகிழ்வர். 


பூக்கோலங்கள் 

                                         பல வகை வண்ணங்களாலான மலர்களைக் கொண்டு கோலங்கள் எழிலுற வரையப்பட்டு நடுவில் தெய்வச்சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். நேர்த்தியாக போடப்பட்டிருக்கும் கோலங்களை பார்க்கும் போது கோலத்தை உருவாக்கியவர்களை நிச்சயம் பாராட்டத் தோன்றும்.

பூத்தேர் 

                                        வெள்ளிக்கிழமையன்று பூக்களாலேயே அலங்கரிக்கப்பட்ட தேரில் தெய்வங்கள் ஊர்வலமாக நான்கு வீதிகளிலும் வலம் வருவர். பக்தர்கள் அவரவர் கைகளில் இருக்கும் பூ பொட்டலங்களை பூத்தேரில் அமர்ந்திருப்பவரிடம் கொடுத்து விட்டு திருநீறு வாங்கி கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபடுவர்.

பூத்தேரில் வலம் வரும் தெய்வங்கள் 

                                         பூத்தேரில் விநாயகர், முருகர், ஐயப்பன் என அனைத்து தெய்வங்களும் அமர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வரும் அழகை காண  வீதி தோறும் பக்தர்கள் காத்திருப்பர். வீதி உலா முடிந்த பிறகு பூத்தேர் கோவில் வளாகத்துக்குள் திரும்பிச்  செல்லும்.

பூத்தேரை தரிசிக்கும் மக்கள் 

                                                 பூத்தேர் வழக்கமாக மஞ்சள் நிற மலர்களாலும், வாடா மல்லி பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகளோடு வலம் வரும். பூத்தேரோடு பின்னால் மோர் வைக்கப்பட்ட வண்டிகளும் தொடர்ந்து வரும். வீதி முழுவதும் காத்திருக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த  பிறகு  மோரை வாங்கி அருந்தி விட்டு பாட்டில்களிலும் கொண்டு சென்று வீட்டில் இருப்போருக்கும் கொடுத்து மகிழ்வர். சிறு வயதில் நாங்கள் சிறுவர் சிறுமிகளாக சேர்ந்து மோரை வாங்கி குடித்துக் கொண்டே தேரின் பின்னேயே சென்று வருவோம்.

திருவிழாவுக்கு ஏற்றப்படும் கொடி 
 
                                   திருவிழாவுக்கான ஆரம்பமாக  மாசி மாதம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டு 15 நாட்கள் திருவிழா உற்சாகமாக நடைபெறும். கொடியேற்றிய பிறகு கொடி இறங்கும் நாள் வரை யாரும் வெளியூருக்கு செல்லக் கூடாது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் திருவிழாவுக்கு முன்பே விரதமிருந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

 
அம்மனுக்கு பால் குடம் எடுக்கும் பக்தர்கள் 

                                              கொடி ஏற்றப்பட்டப்  பிறகு  புதன் கிழமையிலிருந்து தினந்தோரும்  காலையில் பால் குடம், முளைப்பாரி ஊர்வலமும், மாலையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.

அம்மன் தசாவதாரத்தில்  

                               திருவிழாவில்   தினம் தோறும் நடக்கும் மண்டகப்படிகளும், தேர் வீதி உலாக்களும் முடிந்த பிறகு சனிக்கிழமையன்று அம்மன் தசாவதாரத்தில் காட்சி அருளுவார். இரவு முழுவதும் அம்மன் வித விதமான அவதாரங்களில் காட்சி தருவார். பெரும்பாலான பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி இருந்து அம்மன் தசாவதாரத்தை கண்டு மகிழ்வர்.


அம்மன் ஊஞ்சல் சேவை தரும் காட்சி 

                                                      தசாவதாரம் முடிந்த பிறகு திங்கள் கிழமையன்று அம்மன் அலங்காரமாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஊஞ்சல் சேவையில் காட்சி தரும் அம்மனை காண கூட்டம் கூட்டமாக மக்கள் வரிசையில்  நின்று காத்து கிடந்து இரவு முழுவதும் அம்மனை தரிசித்து கொண்டேயிருப்பர்.

அம்மன் தெப்பத்தில் அருளும் காட்சி 

                                  ஊஞ்சல் சேவைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை அம்மன் தெப்பத்தில் சயனித்தபடி காட்சி தருவார். தெப்பத்தில் சயனித்தபடி இருக்கும் அம்மனை காண கண்கோடி வேண்டும். அந்த அளவுக்கு அம்மன் அலங்காரம் சிறப்பாக இருக்கும். தெப்பத்திருவிழா கடைசி நாள் திருவிழா என்பதால் கூட்டம் முதல் நாளை விட அதிகமாகவே இருக்கும். அனைவரும் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து கோவில் மைதானத்தில் போர்வையை விரித்து குடும்பத்தோடு அமர்ந்து வேடிக்கைகளை கண்டு களித்தவாரே உணவருந்தியும், அம்மனை தரிசித்தும், பலர் அம்மனுக்கு மாவிளக்கும் வைத்து மகிழ்வர். இந்த வருடம் கொரோனா காரணமாக திருவிழா சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

எங்கள் ஊர் பூத்திருவிழாவை பதிவாக காண(வாசிக்க ) வந்தோருக்கு மிக்க நன்றி... 

இப்பதிவை வாசிப்போருக்கும்  திருவிழா சென்று வந்த உணர்வு தோன்றினால் கமெண்ட் பாக்சில் பதிவு செய்யவும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன