வியாழன், 27 மே, 2021

வெள்ளியங்கிரி மலைப்பயணம்

சிவ  சிவ 

இயற்கை எழிழும், ஆன்மீக அதிர்வும் கலந்த வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்கிறேன்....


                                        தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவையில் உள்ள பூண்டி அடிவாரத்தில் உள்ளது. சிவனை திருமணம் செய்ய நினைத்து தவம் மேற்கொண்டார் ஒரு பெண். நின்றபடியே அவரது தவம் தொடர்ந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குள் சிவன் தன்னை திருமணம் செய்யாவிட்டால் அங்கேயே தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அவரது தவத்தை மெச்சிய சிவன் அப்பெண்ணை திருமணம் செய்வதற்க்காக விரைந்தார். ஆனால் இடையில் ஏற்ப்பட்ட தடைகளால் சிவன் அங்கு செல்ல தாமதமானது. தன் தவக்காலத்திற்க்குள் சிவன் வராததால் நின்ற நிலையிலேயே உயிர் துறந்து  சிலையாக மாறினாள்  அப்பெண். அவரே கன்னியாகுமரி அம்மன் என அழைக்கப்படுகிறார். தான் அங்கு செல்வதற்குள் அப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டதால் மனமுடைந்த சிவன் கால் போன போக்கில் சென்று ஒரு மலையில் அமர்ந்தார். அதுவே வெள்ளியங்கிரி மலையாகும்.                                                                                                                                                                                                                                                         வெகுநாட்களாகவே வெள்ளியங்கிரி மலைக்குச்  செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். மார்ச் மாத இறுதியில் நாங்கள் நண்பர்கள் நால்வருமாக சேர்ந்து வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வதென தீர்மானித்து கோவைக்கு பேருந்து  ஏறினோம். பின்பு கோவை காந்திபுரத்திலிருந்து  பூண்டி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பூண்டி அடிவாரத்திலிருந்துதான் வெள்ளியங்கிரி மலையேற்றம் தொடங்குகிறது.  பூண்டிக்கு பேருந்து கிடைக்காத நேரத்தில் ஈஷா யோகா மையம் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்து பூண்டி அடிவாரத்தை அடையலாம். காரில் செல்பவர்கள் ஈஷா யோகா மையத்திலிருந்து பூண்டிக்குச்  செல்லும் போது வன விலங்குகளின் நடமாட்டத்தை கவனித்து செல்ல வேண்டும். சில நேரங்களில் யானைகள் தண்ணீர் குடிக்க கீழே இறங்கி வரும்.                                 பூண்டி அடிவாரத்தை அடைந்தவுடன் அங்கு உள்ள அடிவாரக்  கோவிலுக்குள் சென்றோம். கோவிலின் உள்ளே கிழக்கு நோக்கி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன. சமீபத்தில் நான்கரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாயன்மார்களை வணங்கும் போது சிவபெருமான் மீது அவர்கள் கொண்ட பக்தியும், மற்றும் அவர்கள் சிவபதம் அடைந்த நிலையும் நம் கண் முன்னே தோன்றி மறைகிறது. அடிவாரக் கோவிலில் மலைப்பயணம் நல்லபடியாக அமைய பிரார்த்தித்துக் கொண்டு இரவு நேரத்தில் மலை ஏற ஆரம்பித்தோம். (அடிவாரக் கோவிலுக்கு முன்னால் முருக நாயனார் நந்தவனம் ஒன்றும், கோவிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்களும் உள்ளது.)
                           
       
                         மலை ஏறுவதற்க்கு முன்னால் அடிவாரத்தில் விற்க்கும் மூங்கில் கம்புகளை வாங்கிக்  கொண்டு செல்வது நல்லது. ஒரு மூங்கில் கம்பு 30 ரூபாய்க்கு கிடைக்கும். அதை 10 ரூபாய் வாங்கிக்  கொண்டு அங்கேயே இருக்கும் ஆதிவாசிகள் பயணத்திற்க்கு தகுந்ததாக செதுக்கித் தருகின்றனர். நாங்கள் ஆளுக்கு ஒரு கம்பை வாங்கிக்  கொண்டு சென்றோம். 


                                                        முதல் மலை ஏற ஆரம்பித்த போதே அம்மலையை பற்றி படித்த விவரங்களும், மற்றவர்கள் சென்று வந்த அனுபவமும் மனதில் தோன்ற மலைப்பயணத்தை பற்றிய இனிய எதிர்பார்ப்புடன் பயணத்தைத்  தொடங்கினோம். மலையில் உள்ள கற் படிக்கட்டுகளில் ஏறுவது சற்று கடினமாக இருந்தாலும் மலையேற்ற அனுபவமும், சிவனை மலை உச்சியில் சீக்கிரமாகவே தரிசித்து  விட  வேண்டுமென்ற ஆவலுமாக சற்று விரைவாகவே படியேற ஆரம்பித்தோம். படிகளில் மூச்சு வாங்க ஏறி முடித்ததும் முதல் மலையின் முடிவில் வெள்ளை விநாயகர் காட்சி தருகிறார். அவரை வணங்கி விட்டு அங்கேயே சில நிமிடம் அமர்ந்து சுற்றிலும் உள்ள இயற்கைக்காட்சியையும், மலையின் அமைதியையும் ரசித்தோம். பிறகு சிறிது தண்ணீர் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்.


                                     இரண்டாவது மலையின் படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தோம். படிக்கட்டுகள் செங்குத்தாக அமைந்துள்ளன. ஆங்காங்கே மட்டுமே படிக்கட்டுகளும், பெரும்பாலும் பாறைகளுமாக உள்ளன. இம்மலையின் படிக்கட்டுகள் வழுக்குப்பாறையை செதுக்கி அமைத்திருப்பதால் சற்று அழுத்தமாக காலூன்றிச்  செல்வது நல்லது. அதில் பயணிப்பது சற்று சவாலாகவே இருந்தது.                                    பாம்பாட்டிச்  சுனை, கைதட்டி சுனை, சீதாவனம் வரை மலைப்பாதைகளும் ஆங்காங்கே படிகளும் உள்ளன. இந்த மலை ஏறும்போது ஊன்றுகோல் வாங்கியதே பெரும் உதவியாக இருந்தது. பாம்பாட்டிச்  சுனையில் பாறைகளின் இடையே நீர் கசிந்து வருகிற இடத்தில் மூங்கில் தப்பையை சொருகி வைத்திருந்தனர். இங்கு பாறையிலிருந்து தண்ணீர் வரும் இடத்தில் காதை வைத்துக்  கேட்டால் பாம்பு சீறுவது போன்ற சத்தம் கேட்கும். இந்த தண்ணீர் அருந்த மிகவும் சுவையாக உள்ளது. நீரைக்  குடித்து விட்டு கொண்டு சென்ற வாட்டர் பாட்டில்களில் பிடித்து வைத்துக்  கொண்டு மலையேறினோம். இம்மலையின் முடிவில் வழுக்குப்பாறை ஒன்று உள்ளது.
  

                                                அடுத்ததாக கைதட்டி சுனை நோக்கி பயணம் தொடர்ந்தது. அங்கேயே சிறிது நேரம் தங்கி கையில் வைத்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு அமர்ந்தோம். இங்கும் பாதைகள் சற்று வழுக்கி விட கூடிய அபாயம் நிறைந்ததாகவே உள்ளது. சற்று சரிவான பாறைகளின் மீது நடந்து செல்ல வேண்டும்.  நடக்க நடக்க வியர்த்தாலும் குளிரவும் செய்கிறது.


                                                    நான்காம் மலையில் மணற் பாதைகளும், புல்வெளிகளும் காணப்படுகிறது. இம்மலை விபூதி மலை அல்லது சீதாவனம் என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் உள்ள மண் திருநீறை போல் வெண்மையாக காட்சியளிப்பதால் இது திருநீர்மலை என அழைக்கப்படுகிறது. இந்த மணலை பக்தர்கள் திருநீறாக கருதி வீட்டுக்கு எடுத்துச்  செல்கின்றனர். இதிலிருந்து பீமன் களியுருண்டையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இந்த மலை ஒரு புறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் உள்ளது. இம்மலையில் சீற மஞ்சள் எனும் என்றும் வாடாத மஞ்சள் உள்ளது. மேலும் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகிறது.


                                    ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை என அழைக்கப்படுகிறது. ஐந்தாவது மலை முழுவதும் பாதைகள் சற்று சரிவாக அமைந்து மலையேற்றத்திற்க்கு சற்றுக்  கடினமாகவே உள்ளது. கம்பை அழுத்தமாக ஊன்றிக்  கொண்டு நடக்கத் தொடங்கினோம். இம்மலையில் சீசன் காலத்தில் குறிஞ்சி பூ செடிகளை நிறைய காணலாம். காற்று இங்கு நம்மை நிற்க விடாமல் தள்ளிக்  கொண்டு செல்லும் அளவில் வேகமாக நம் மேல் மோதுகிறது. இங்கு அர்ச்சுனன் தவம் செய்ததாக கருதப்படும் அர்ச்சுனன் தலை பாறையும், ஐந்து, ஆறாம் மலைகளுக்கு இடையே சேத்திழை குகை போன்ற இடங்களும் உள்ளன. இந்த குகை அதிகம் பேர் தங்கும் வகையில் பெரிதாக அமைந்துள்ளது. பாதைகள் இங்கு ஏற்ற இறுக்கமாகவே உள்ளன.


                                                    ஆறாம் மலையின் பாதைகள்  கீழ் நோக்கி இறங்கக்  கூடிய நிலையில் இருந்ததால் பார்த்து மெதுவாகேவே சென்றோம். இதன் நிலப்பரப்பு முழுவதுமே சந்தனம் போன்ற நிறத்தில் காட்சி தருவதால் இம்மலை சந்தன மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலையில் பாயக்கூடிய நீர்ச்சுனை ஆண்டிச்சுனை எனப்படுகிறது. இச்சுனை நீர் நீலி ஆற்றில் சேர்கிறது. இந்த சுனையில் அட்டைப்பூச்சிகள் நிறைய உள்ளதால் பாதுகாப்பாக குளிப்பது நல்லது. ஆண்டிச்சுனையின்  நீரை தொட்டு பார்க்கும் போதே மிகவும் புத்துணர்வாக இருந்தது.


                                            ஏழாவது மலை சுவாமி முடி மலை என அழைக்கப்படுகிறது. இதில் ஏறுவது மிகவும் சவாலாகவும், சிரமமாகவுமே இருந்தாலும் மலை ஏறி முடித்து ஈசனை தரிசிக்கும் போது களைப்பு பறந்து விடுகிறது. மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதையில் சில இடங்களில் கைகளை ஊன்றியும், தவழ்ந்தும் செல்லுமாறு உள்ளது. தோரண வாயில் என அழைக்கப்படும் மூன்று பாறைகள் சேர்ந்து அமைந்த தோற்றம் இம்மலையில் காணப்படுகிறது.


                                                ஒரு வழியாக மலையேறி முடித்து ஏழாவது மலைக்கு வந்து சேர்ந்தோம். உச்சியில் இருந்து பார்த்த போது சுற்றிலும் இருந்த இயற்கையை விட்டு பார்வையை திருப்ப முடியவில்லை. மலையேறி முடிக்கும் போது விடியும் பொழுது ஆகி விட்டதால் அற்புதமாக  சூரியன்  மேகத்தை விலக்கிக் கொண்டு ஜெகஜ்ஜோதியாக உதயமாகும்  காட்சியை கண்ணார கண்டு களிக்க முடிந்தது. ஏழாவது மலையின் உச்சியில் இருந்து பார்த்த போது இயற்கை அன்னையின் மடிக்குள் அமர்ந்திருப்பது போன்ற இனிமையானதொரு நிறைவு தோன்றியது. 


                                    ஏழாவது மலையில் பாறைக்கு அடியில் முதலில் விநாயகரை தரிசித்து, பின்பு  தாயார் மனோன்மணி அம்மாளையும்  வணங்கி  விட்டு இறுதியாக நமது பயணத்தின் இலக்கான ஈசனை தரிசிக்க நடந்தோம். காண கண் கொள்ளாத காட்சியாக  ஈசன் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இடத்தை அடைந்து மெய்சிலிர்த்து நின்றோம். ஓம் நமச்சிவாய என்ற  மந்திரத்தை உச்சரித்துக்  கொண்டே  பெருமானை வணங்கி எழுந்தோம். பின்பு பிரசாதமாக ஈசனின் திருநீறை பெற்று நெற்றியில் இற்று வீட்டுக்கும் கொண்டு சென்றோம்.

வெள்ளியங்கிரி மலை அனுபவம் சில குறிப்புக்கள் .....

வெள்ளியங்கிரி மலை பூமியிலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

ஏழாவது மலையில் முடக்கத்தான் கிழங்கு சூப் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது.  இதை வாங்கி அருந்தினோம். உடல் வலிக்கு இந்த சூப் அருமருந்தாக இருந்தது.

மலையின் அடிவாரத்தில் சாதுக்கள் கூட்டமாக அமர்ந்து தேவாரம், திருவாசகங்களை பாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் முன் ஒரு திருவோடும், கற்பூரத்தட்டும் இருந்தது. எங்களால் இயன்ற காணிக்கையை அதில் வைத்தோம். வெள்ளியங்கிரிக்கு வருபவர்கள் அங்கேயே சமைத்து இவர்களுக்கு அன்னதானம் இடுகிறார்கள். சாதுக்களும் அவர்களுடன் சேர்ந்து பூஜைகள் செய்து ஆசீர்வாதம் செய்வதுடன், மலையில் உள்ள விலங்குகள், குளிர் பற்றியும் மலையேற்றத்திற்க்கு தேவையான தகவல்கள் மற்றும் தங்கும் இடங்கள் பற்றியும்  கூறி அனுப்பி வைக்கின்றனர்.

பல சித்தர்களும், யோகிகளும் சூட்சுமமாக உலாவும் அற்புதமானதொரு கைலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். சிவன் அமர்ந்த இடமெல்லாம் கைலாயமாகவே கருதப்பட்டதால் சிவபெருமான் விசனத்தோடு அமர்ந்த இந்த மலை தட்சிண கைலாயம் என போற்றப்படுகிறது.

அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், காலாத்ரி சாமியார், மிளகாய் சாமியார், பழனி சுவாமிகள், இராமானந்த பரதேசி மற்றும் பல யோகிகள் உலாவி மறைந்த இப்புண்ணிய பூமியில் நாமும் கால் பதித்து விட்டு வர அற்புதமான அனுபவங்கள் பல நமக்கு கிட்டும்.

நான்காவது மலையில் சுக்கு காப்பி, தேன் மிட்டாய் போன்றவை கிடைக்கின்றன. மலையேறி களைப்புடன் வருபவர்களுக்கு இந்த சுக்கு காப்பியும், ஏழாவது மலையில் கிடைத்த முடக்கத்தான் கிழங்கு சூப்பும் புத்துணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது.

மலைப்பயணத்தை மேற்கொள்ளும் போது டார்ச், ஜெர்கின், தண்ணீர் பாட்டில்கள்(பிளாஸ்டிக் அல்லாதது), ஜூஸ் மற்றும் எளிதாக செரிமானம் ஆகக்  கூடிய சில உணவுகளை கொண்டு சென்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

திருச்சிற்றம்பலம்...

பயணம் தொடரும் .....3 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கள் எழுதுவதற்க்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. கருத்துக்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி..

   நீக்கு
 2. மிக சிறப்பாகவும் சுவாரசியமாகவும் எழுதுகிறீர்கள்.
  பயண அணுபவங்களை நூலாகவும் விரைவில் வெளியிடுங்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன