புதன், 23 ஜூன், 2021

அரைத்த பரோட்டா


                                இந்தப்  பதிவை வாசிக்கும் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். பெரும்பாலோர் இன்றும் இரவில் பரோட்டா மட்டுமே சாப்பிடும் வழக்கமுடையவராக இருக்கின்றனர். அந்த பரோட்டாவில்தான் எத்தனை வகையான சுவைகள். சாதா பரோட்டா, கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, கல்டா பரோட்டா, கிளி பரோட்டா  மற்றும் பல விதங்கள். அதில் ஒன்றான அரைத்த பரோட்டா பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.


                                                   தினமும் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி வகைகள் சமைக்க சலிப்பை ஏற்படுத்த இன்று கடைக்குச் செல்லும் வழியில் பாய் கடையில் பரோட்டாக்களை கல்லில் போட்டு  பொன்னிறமாக எடுத்து அதை மேலும் மிருதுவாக்க இரண்டு கைகளாலும் நன்கு அடித்துக் கொண்டிருந்தார். கடைக்குள் நிறைய பேர் குழந்தைகளோடு அமர்ந்து வாழை இலையில் அந்த மிருதுவான பரோட்டாவை சால்னாவுடன் சேர்த்து பிசைந்து ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வாசம் நம்மையும்  சுண்டியிழுக்க  பரோட்டாக்கள் பார்சல் வாங்கிக்  கொண்டு சென்றேன்.


                                            வீட்டுக்கு சென்று பரோட்டா பார்சலை பிரித்த போது அதை அப்படியே சாப்பிடுவதை விட வேறு சுவைக்கு மாற்றினால் என்ன என்று யோசித்த போது ஒரு முறை நெட்டில் படித்த அரைத்த பரோட்டா நியாபகத்துக்கு வந்தது. அதையே செய்யலாம் என முடிவு செய்து மடமடவென்று வேலையை ஆரம்பித்தேன்.


அரைத்த பரோட்டா செய்யத்  தேவையானவை: 

பரோட்டா - 4
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
கரம் மசாலா பொடி - 1 சிறிய தேக்கரண்டி  
மிளகாய்த்  தூள் - 1 சிறிய தேக்கரண்டி 
சால்னா - தேவையான அளவு 
உப்பு - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 


                                                    முதலில் பரோட்டாக்களை எடுத்து சிறிய துண்டுகளாக பிய்த்து வைத்து கொண்டு அதை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் .கொள்ளவும். பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொண்டு அதில் கரம் மசால் பொடி, மிளகாய் பொடி, சிறிது உப்பு  சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதனுடன் அரைத்த பரோட்டாவை சேர்த்து  விட்டு  அதில் நமது சுவைக்கு தகுந்தாற் போல் சால்னா ஊற்றி அனைத்தையும் சற்று நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லித்தழை  தூவி இறக்கி விட்டால் அரைத்த பரோட்டா ரெடி.


                                               அரைத்த பரோட்டாவின் மணம் மூக்கைத்  துளைத்து  பசியைத்  தூண்ட அடுத்த நொடி  வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒரு தட்டுடன் வரிசையாக சாப்பிட அமர்ந்தோம். 

\
                                அரைத்த பரோட்டா மணமாகவும்  வெகு சுவையாகவும் இருந்தது. வழக்கமாக சாப்பிடும் பரோட்டா போலின்றி இது கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் சாப்பிட நன்றாக இருந்தது. 


                                    பரோட்டாவை பிய்த்து போடும் போதே சாப்பிட கையும், வாயும் பரபரத்தாலும் பொறுமையாகவே அரைத்த பரோட்டா செய்து முடித்தேன்.


                                            பரோட்டாவை வாழை இலையில் வைத்து பார்க்கும் போதே சற்று பொன்னிறத்துடன், எண்ணெய் மினுமினுப்புடன் வாழை இலையின் வாசனையோடு, பரோட்டாவின் வாசனையும் சேர்ந்து சாப்பிடும் ஆசையை வெகுவாக அனைவருக்குள்ளும் ஏற்படுத்துகிறதல்லவா?


                                    சால்னா சேர்க்காமலே பரோட்டா செம டேஸ்ட்டாக இருக்க, அதனை சால்னாவுடன் சேர்த்து சாப்பிட சுவையோ சுவை. நீங்களும் அரைத்த பரோட்டாவும், சால்னா பரோட்டாவும் சுவைத்துப்  பாருங்களேன்.

பரோட்டா பதிவு தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன