சனி, 24 ஜூலை, 2021

நத்தம் பொரிச்ச பரோட்டா(காவண்ணா கடை)


                                        வணக்கம். இந்த வாரம் நமது பரோட்டா பதிவில்  60 வருடத்திற்க்கும் மேலாக இயங்கி வரும் நமது நத்தம் காவண்ணா கடை  பொரிச்ச பரோட்டா சாப்பிடுவோமா? ஒரு வேலையாக நத்தம் வரை சென்றிருந்த போது நமது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் நத்தம் பொரிச்ச பரோட்டாவின் சுவை பற்றி சொல்லியிருந்தது நினைவிற்க்கு வர பொரிச்ச பரோட்டா சாப்பிடும் ஆசை எழுந்தது. நத்தத்தில் பல பரோட்டா கடைகள் இருந்தாலும் காவாண்ணா கடை பற்றி நிறைய கேள்விப்பட்டதால் அங்கு சென்றோம்.


                                    தூரத்தில் இருந்து கடையை நெருங்கும் போதே பொரித்த பரோட்டாவின் வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அந்தக்  கடை நோக்கி வேகமாக  இழுத்துச் சென்றது. வட்ட வட்டமான பரோட்டாக்கள் எண்ணையில் பொன்னிறமாக பொரிக்கப்பட்டு  மிதப்பதை  பார்க்கும் போதே நமக்குள் சுவைக்கும் எண்ணத்தை  தூண்டுகிறதல்லவா ?


                        பரோட்டாவை வாழை இலையில் வைத்து நமக்கு பரிமாறுகிறார்கள். பொரித்த பொன்னிறமான பரோட்டா வாழை இலையில்  வீற்றிருக்கும் அழகே அழகு.


                            பொரித்த பரோட்டா சால்னா ஊற்றாமல் சாப்பிட மொறு மொறுவென்று நன்றாக இருந்தது. மொறுமொறுவென்று இருக்கும் பரோட்டாவில் சால்னாவை ஊற வைத்து சாப்பிட சுவை இன்னும் தூக்கியடித்தது.


                                    மேலே படத்தில் இருப்பதுதான்  காவண்ணா கடை. கடையில் உள்ள கூரையில் இரு பக்கமும் வாழை இலை சொருகி வைத்திருக்கிறார்கள் அல்லவா ? அது பரோட்டா இருக்கிறது என்பதை காட்டுவற்க்காக வைக்கப்பட்டிருக்கிறது. பரோட்டா தீர்ந்தவுடன் வாழை இலையை எடுத்து விடுகிறார்கள். மண் மணம் மாறாத வகையில் பாயை விரித்து விட்டு வாழை இலையில் பந்தி போல் பொரிச்ச பரோட்டாவை பரிமாறுகிறார்கள். காவண்ணா கடை காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.


                            பொரித்த பரோட்டாக்களை எடுத்து ஒரு தட்டில் வைத்து நொறுக்கி அதனுடன் சால்னாவை ஊற்றி ஊற வைத்து பரிமாறப்படுகிறது. சால்னா இல்லாமலும் சாப்பிடலாம்.


                            பரோட்டாவுடன் இந்த கடையில் மட்டன் சுக்காவும் பிரபலமானதாகவும், சுவையாகவும் உள்ளது. சிறிய கிண்ணமளவு மட்டன் சுக்கா 80 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. பரோட்டாவுடன் தொட்டுக்  கொள்ள பெரும்பாலோர் இந்த மட்டன் சுக்காவை வாங்கிக்  கொள்கிறார்கள். பொரித்த பாராட்டவே சுவை நரம்புகளை தூண்ட அதனுடன் இந்த மட்டன் சுக்காவையும் சேர்த்து சாப்பிட அதீதமான சுவையில் இருந்தது. இந்த மட்டன் சுக்கா காலை 9 மணிக்குள் தீர்ந்து விடுகிறது. எனவே இதனை சுவைக்க நாம் காலை சீக்கிரமாகவே சென்று விடுவது நல்லது.


                                                    பரோட்டாக்கள் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்டு இந்த அலுமினிய பாத்திரத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு நம்மை பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்கிறது.


                                    பொரித்த பரோட்டாக்களை வாழை இலையில் உதிர்த்து விட்டு சால்னா ஊற்றும் காட்சி. வாழை இலையின் வாசனையுடன் கலந்த பொரித்த பரோட்டா மற்றும் சால்னாவின் மணம் நமக்குள்   வெகுவாக பசியைத்  தூண்டுகிறது.


                                    சால்னா சுடச்சுட தயார் செய்து குழம்பு பாத்திரத்தில் கொழுப்பு மிதக்க ஊற்றி வைக்கப்பட்டு நமக்கு பரிமாற தோதாக கிண்ணமும் சால்னா மேல் மிதக்கிறது.


                            எண்ணெய் பரோட்டாக்களாக உருமாற காத்திருக்கும் மைதா மாவு உருண்டைகள். இந்த உருண்டைகள் எண்ணையில் ஊறி மெது மெதுவென்ற பதத்தில் உள்ளன.


                                மைதா மாவு உருண்டைகளை எடுத்து பரோட்டாவிற்க்கு ஏற்றதாக தேய்த்து எண்ணையில் இடுவதற்கு தோதாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். நாம் விரும்பி சாப்பிடும் பொரித்த பரோட்டா படி படியாக பரோட்டா மாஸ்டரின் கைப்பக்குவத்தில் உருவாகி நமது இலைக்கு வந்து சேர்கிறது.


                                            பெரிய தோசைக் கல்லில் நடுவே பெருமளவு எண்ணெய் ஊற்றி பரோட்டாக்களை வரிசையாக அடுக்கி வைத்து பின்னர் பொரித்தெடுக்கிறார்கள்.


                                        பரோட்டாக்கள் எண்ணெயில் வேக வைக்கப்பட்டு மொறு மொறுவென்ற பொரித்த பரோட்டா தயாராகிறது. நத்தத்தில் சாதா பரோட்டாக்களை விட பொரித்த பரோட்டாக்களே  பெருமளவு கிடைக்கிறது. மிகவும் பிரபலமான உணவாக பொரித்த பரோட்டா நத்தத்தில் பெயர் பெற்றுள்ளது.


                                சால்னா வாளியில் கொதிக்க கொதிக்க மணத்துடனும், பரோட்டாவுக்கு சரிசமமான  சுவையுடனும்  அனைவரது இலையிலும் இடம் பெற்றிருக்கிறது.


                    பொரித்த பரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ள சால்னாவுடன் கூடவே சட்னியும் பரிமாறுகிறார்கள்.



                                            பொரித்த பரோட்டா பார்சலாக கொண்டு செல்ல இலையில் கட்டி தயாராகிறது. வெளியூரிலிருந்து வருவோர் பலரும், உள்ளூர்க் காரர்களும் என பெரும்பாலோர் வீட்டுக்கு பார்சல் வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து இந்த ஊர் வழியாக செல்வோர் பலரும் இங்கு இறங்கி சாப்பிட்டு விட்டே செல்கின்றனர்.



                                                இங்கு பரோட்டாவுடன் கூடவே குஸ்க்காவும் தயார் செய்யப்படுகிறது .ஒரு குஸ்க்கா 30 ரூபாய்க்கு கிடைக்கிறது.


                                    மட்டன் சுக்கா மசாலாக்களுடன் சேர்ந்து கொதிக்க வைக்கப்பட்டு கிரேவியாக வெகு சுவையுடன் சமைக்கப்படுகிறது. மட்டன் சுக்காவில் மிளகு பொடி சற்று தூக்கலாக இருந்தாலும்  காரம் சரியான அளவே இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டனர். அனைவரும் பரோட்டாவுடன் சேர்ந்து விரும்பி வாங்கி சாப்பிடும் மெனுவாக இந்த மட்டன் சுக்கா உள்ளது.


                                    கடையில் பொரித்த பரோட்டாக்களும், மட்டன் சுக்காவும், குஸ்க்காவும், சால்னாவும் என அனைத்தையும் மணக்க மணக்க சமைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரம் பரோட்டாக்கள் இங்கு தயார் செய்யப்படுகின்றன. அனைத்தும் 11 மணிக்குள்  தீர்ந்து விடுகிறது.


                                    பொன்னிறமான மொறு மொறுவென்ற பொரித்த பரோட்டா சால்னாவுடன் வாழை இலையில் சாப்பிடவும், பார்சலுக்கும் தயாராக உள்ளது.


 

                                    பொரித்த பரோட்டாக்களை அனைவரும் பாயில் அமர்ந்தபடி வாழை இலையில் ருசித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் ஒரு முறை நத்தம் சென்றால் பொரித்த பரோட்டாவை ருசித்துப் பாருங்களேன்.

பரோட்டா பதிவு தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன