புதன், 18 ஆகஸ்ட், 2021

சிற்பம் பேசுமோ?


    
                         பல ஆண்டுகளாய் சோழர்களின் தலை நகராய் தகதகவென மின்னிக் கொண்டிருந்த தஞ்சையை நோக்கிய பயணம் இது. பயணம் தொடங்கிய கணம் முதல் ஒரு இனிய பரபரப்பு மனதில். மாமன்னர் இராஜராஜர் ஆண்ட மண், அவர் காலடி தடம் அழுத்தமாக பதிந்த தஞ்சை பெரிய கோவிலை பார்க்க விரும்பியே இப்பயணத்தை மேற்கொண்டேன்.


                        வெகு காலம் சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட நகரமாய் இருந்து  அதன் பின் பாண்டியர் கைக்கு சென்று, பின் நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் என பல ஆட்சியாளர்களை சந்தித்த தஞ்சையில் சோழர்களின் கால சுவடுகளை நுகர விரும்பி பேருந்தில் இருந்து இறங்கி தஞ்சை பெரிய கோவிலின்(மாமன்னர் இராஜராஜர் ஆண்ட காலத்தில் இக்கோவில் இராஜராஜேச்சுரம் என பெயர் கொண்டு மின்னியது.) முன் நின்றேன். 


                                       பல வரலாற்று அதிசயங்களையும் மற்றும் பல வரலாற்றுப்  புகழ் பெற்ற மனிதர்களையும் சந்தித்திருக்கும் பெரிய கோவிலின் வாசலின் முன் நின்று கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் கோவிலையும் கோபுரங்களையும் வைத்த கண் வாங்காமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இனம் புரியாத மகிழ்ச்சியும், சோகமும் மனதை ஒருங்கே தாக்கின. மெல்ல மனதை திருப்பி கோவிலுக்குள் நுழைந்தேன்.


                        தஞ்சை தரணியையே பெருமைப்படுத்தும் தஞ்சை பெரிய கோவிலுக்குள் நுழைந்த போது மாமன்னர் இராஜராஜர் இந்த பாதையில் நடந்திருப்பாரோ? கங்கை கொண்ட சோழன் என புகழப்பட்ட சக்கரவர்த்தி  இராஜேந்திரர் இங்கு நின்று ஈசனை வணங்கியிருப்பாரோ? என எண்ணங்கள் மனதுக்குள் அலைமோதின. அவர்கள் கால் தடம் படிந்த இந்த இடத்தில நாமும் நடக்கிறோம் என நினைக்கும் போதே மனதுக்குள் ஒரு வித  இதமான உணர்வு பரவியது. கோவிலைச் சுற்றி மெல்ல நடந்தேன். ஆங்காங்கே அமைந்திருந்த பசிய புல் தரைகள் நம்  எண்ணங்கள்  முழுவதிலும்  அமைதியை பரப்புகின்றன. 

                              மேலே உள்ள படத்தில்   படிகளை தாங்கி நிற்கும் யானையும், அதன் பின் உள்ள சக்கரமும், பாயும் குதிரையும் கருங்கல் படிகளும் மற்றும் பலவும் தத்ரூபமாக ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்டு இன்றும் சோழரின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுகிறதல்லவா?


                                            தஞ்சை பெரிய கோவிலில் வெளி நாட்டினர் சிலைகள் இரண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரான்ஸ் மன்னர் சிலையும், சீனர் ஒருவரின் சிலையும் இங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு செதுக்கப்பட்டு இன்றும் நம் கண் முன் தோன்றி  வெளிநாட்டினார்களே நீங்கள் சொல்வீர்களா? இந்த கோவில் உருவான கதையையும், இங்கு சிற்பங்களாய் உங்களின் உருவம் நிலைநிறுத்தப்பட்டது எவ்வாறு என்பதையும்  பற்றி? என கேட்கத் தோன்றுகிறது.


                                             கோவிலில் உள்ள சிற்பங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே நடந்தேன். இந்த சிற்பங்கள் வாய் திறந்து பேசினால் எவ்வளவு தூரம் வரலாற்று உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள முடியும். சிற்பங்களே உங்களின் கதையென்ன ? வரலாற்று புகழ் மிக்க இந்த கோவிலில் உங்களை செதுக்கி செம்மைப்படுத்திய சிற்பி யார்? தொழில்நுட்ப வசதிகளே இல்லாத ஒரு காலத்தில் இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் படி ஒரு கோவிலை எப்படி அமைத்தனர்? இராஜராஜரை நீ அருகினில் பார்த்திருக்கிறாயா? அந்த கால மக்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது?

                                கோவிலில் ஓவியங்கள் எழுதியோரும், சிற்பங்களை செதுக்கியோரும் இக்கோவிலை பற்றி கண்ட கனவுகள் என்ன? ஆண்டாண்டு காலமாய் நிலைத்து நிற்கும் இந்த வரலாற்று அற்புதத்தை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இராஜஇராஜர் மனதில் எவ்விதம் உதயமானது? புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலில் திரு. கல்கி அவர்கள் எழுதியது போல இலங்கையில் உள்ள பெரிய பெரிய புத்தர் சிலைகளையும், புத்த விஹாரையையும்  பார்த்ததால் அவருக்கு ஏற்பட்ட எண்ணங்களின் உந்துதலோ? என மனம் பலவாறாக எண்ணமிட்டது.

 

                                        பல நூறு வரலாற்று அதிசயங்களை உங்களில் தாங்கிக் கொண்டு, உங்களை படைத்தவரின் திறமையை உலகுக்கு பறைசாற்றிக்கொண்டு, நீங்கள் வாய் திறக்காமல் உங்களைப் பற்றி மற்றவர்களை பேச வைக்கும் நீங்கள் வாய் திறந்து பேசினால் ஒரு அற்புதமான வரலாற்று காலத்தைப் பற்றிய  உண்மைகளை இந்த கால மக்கள் அறிந்து கொள்ள முடியுமல்லவா? என என் கற்பனை விரிந்து பரந்தது. என்னை போலவே கடந்து வந்த நூற்றாண்டுகளில் எத்தனை தலைமுறை மனிதர்கள் உங்களை பார்த்து அதிசயித்து சென்றிருப்பர்? அவர்கள் எல்லாம் இன்று இல்லை எனினும் சிரஞ்சீவித்தன்மை பெற்ற நீங்கள் என்றும் இருப்பீர்கள். இன்னும் பல தலைமுறை மனிதர்களை நீங்கள் சந்தீப்பிர்கள். தமிழனின் பெருமையையும், சோழ தேசத்தின் புகழையும் உலகறியச் செய்வீர்கள். 


                            சிற்பங்களே தற்காலிகமாக உங்களிடம் விடைபெற்றுச்  செல்கிறேன் என எண்ணியவாறே கோவிலை விட்டு நீங்கிச்  சென்றேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன