வணக்கம். இந்த வாரம் நமது சுவையான உணவுகளின் பயணத்தில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த மட்டன் பிரியாணி பொன்ராம் கடையில் வாங்கி சுவைப்போமா?
பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாதத்திற்க்கு ஒரு முறையாவது விரும்பி சாப்பிடும் உணவாக மாறிக் கொண்டு வருகிறது. அத்தகைய பிரியாணியில்தான் எத்தனை வகைகள்? மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி, மீன் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, இறால் பிரியாணி இன்னும் பல பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த முறை நாம் சுவைக்க இருப்பது மட்டன் பிரியாணி.
இந்த ஞாயிறு அன்று பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என வீட்டில் அனைவரும் ஒரு மனதாக நினைக்க பொன்ராம் கடையில் பிரியாணி வாங்கினோம். பிரியாணி பிரவுன் நிறத்தில் ஆட்டு கறித் துண்டுகளுடன் மணத்தது.
அனைவருக்கும் சேர்த்து ஐந்து அரை பிளேட் பிரியாணி மற்றும் சிக்கன் வறுவல், தால்சா வெங்காயத்துடன் சேர்த்து பார்சல் செய்து வாங்கிக் கொண்டோம்.
இந்த பொன்ராம் கடை பேகம்பூரில் ஒன்றும் சாலை ரோடு கனரா வங்கி அருகிலும் மற்றும் பல இடங்களிலும் இயங்கி வருகிறது. இங்கு மட்டன் பிரியாணி முதல் அனைத்து வகையான அசைவ உணவுகளும் நமது ரசனைக்கேற்ப கிடைக்கிறது.
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, வறுவல், மட்டன் கோலா என அனைத்து விதமான அசைவ வகைகளும் நொடிக்கொரு பார்சலாக சென்று கொண்டிருக்கிறது.
கனரா வங்கி அருகில் இயங்கி வரும் இந்த கிளை உட்கார்ந்து ரசித்து சாப்பிடும் வகையில் உள்ளதல்லவா? கண்ணாடி மேசை மீது கண்கவர் அட்டையில் என்னென்ன உணவு வகைகள் கிடைக்கின்றன என பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிக்கன் நன்றாக மசாலாவுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டு பிளேட்டில் வெங்காய அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தவுடன் சுவைக்கத் தோன்ற அதையும் பார்சல் செய்து கொண்டோம்.
பிரியாணி கறித் துண்டுகளுடன் வாழை இலையில் பரப்பப்பட்டு சாப்பிடுவதற்கு தயாராக மணத்துடன் வீற்றிருக்கிறது. கறித் துண்டுகள் நன்றாக வெந்து பிரியாணியின் புகழை பரப்புகின்றன.
இந்த கடையில் இந்தியன், சைனீஸ், இத்தாலியன், முகலாய், பஞ்சாபி, பார்பிகியூ, கடல் உணவு, வட இந்திய, தென்னிந்திய மற்றும் பல வகை உணவு வகைகள் கிடைக்கிறது.
இங்கு மட்டன் கறி தோசை, மட்டன் கோலா, நெஞ்சு சாப்ஸ், மூளை 65, மட்டன் தொக்கு, 555 சிக்கன், பிரைட் சிக்கன், சிக்கன் கொத்து பரோட்டா, பிஷ் பிங்கர், இடியப்பம் வித் பாயா, ட்ராகன் சிக்கன் என பல வகையான உணவு வகைகள் கிடைக்கிறது.
நாங்கள் பார்சல் வாங்க சென்ற போது பார்க்கவே கண் கவர் உணவு வகைகள் விதம் விதமாக தயார் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு கொண்டிருந்தது.
மீன் மசாலாக்களுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டு தக்காளி மற்றும் வெங்காயம் போன்றவற்றால் அழகுபடுத்தப்பட்டு சாப்பிடுவதற்க்கு அலங்காரமாக மேசையில் வைக்கப்பட்டுள்ளது.
மசாலாக்களுடன் சேர்த்து வகை வகையான அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு அவை நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது உங்கள் வயிறோடு சேர்த்து கண்களையும் நிரப்புகிறதல்லவா?
விதம் விதமான உணவு வகைகளையும், கடையின் அமைப்பையும் பார்த்து ரசித்தவாறு பிரியாணி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றோம்.
மட்டன் பிரியாணி மசாலாக்களின் சுவையோடும், ஆட்டுக்கறித் துண்டுகள் பஞ்சு போல் வெந்து வாழை இலையின் வாசனையோடு பிரியாணிக்கு மேலும் சுவையை கூட்டி பசி உணர்வை வெகுவாய் தூண்டின. பிரியாணி ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க சுவை மிகு பிரியாணி சிக்கன் வறுவலோடு சேர்ந்து நொடிப் பொழுதில் காலியாகி மறைந்தது.
இங்கு ஐஸ் கிரீம்களும் சாக்லேட் பிளேவர், ஸ்ட்ராபெரி சுவை மற்றும் பல சுவைகளில் கண் கவர் அழகோடும், சுவையோடும் கிடைக்கிறது.
பிரியாணி பலரும் தால்சா மற்றும் வறுவலோடும், மற்றும் சிலர் முட்டையோடும், தால்சா சேர்க்காமல் தயிர் வெங்காயம் மட்டும் தொட்டுக் கொண்டும் அவரவர் ரசனைக்கேற்ப சாப்பிடுவர். அப்படி சாப்பிட்டு முடித்ததும் அதனுடன் ஐஸ் கிரீமும் சேர்த்து சுவைக்க நிறைவாக சாப்பிட்ட உணர்வு தோன்றும். இதனாலேயே பலரது வீட்டு விழாக்களில் சாப்பாட்டோடு சேர்த்து ஐஸ் கிரீம்களும் பரிமாறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி சாப்பிட்ட நிறைவோடு, இந்த பதிவை ரசித்து வாசித்த உங்களிடம் இருந்து நன்றி சொல்லி விடைபெற்று அடுத்து வேறு வகை பிரியாணி பதிவில் சந்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன