இந்த வலைப்பதிவை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். இம்முறை உங்கள் அபியின் பயணங்களில் பதிவில் தோரணமலை நோக்கி இனிதான ஆன்மீகமும், இயற்கையும் கலந்ததோர் பயணத்தினை மேற்கொள்வோமா?
தோரணமலை: அகத்தியரால் வாரணமலை என்று அழைக்கப்பட்ட இம்மலை காலப்போக்கில் தோரணமலையாக மருவிற்று. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் கயிலையில் திருமணம் நடைபெற்ற போது தென் பகுதி தாழ அதனை சமப்படுத்த வந்த அகத்திய பெருமான் இம்மலையில் தங்கினார். இங்கு அவரால் மருத்துவச்சாலை நிறுவப்பட்டது. மலை உச்சியில் பச்சை பசேலென விளைந்திருந்த 4000 மூலிகைச்செடி வகைகளை கண்டறிந்த அகத்தியர் அம்மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என குறிப்புகளாக எழுதினார். அவையே அகத்தியர் மருத்துவ நூல்களாக பரவின. இங்கு அகத்தியரும் அவரது சீடர் தேரையரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவத்துக்கு வித்திட்டு பலரும் பயனடையச் செய்தனர்.
நம்மில் பலரும் தேரையர் கதையை கேள்விப்பட்டிருப்போம். காசிவர்மன் என்ற மன்னனுக்கு தீராத தலைவலி இருக்க, அதைத் தீர்க்க அகத்தியர் அவரது கபாலத்தைத் திறந்தார். மன்னனது மூளையின் ஒரு பகுதியில் தேரைக்குஞ்சு அமர்ந்திருந்தது. அதைத் தொட்டு எடுத்தால் மூளையின் பல பகுதிக்கும் தேரைக்குஞ்சு தாவிச் செல்லும் அபாயம் இருந்ததால் அதை எப்படி அகற்றுவது என அகத்தியர் யோசிக்க அச்சமயம் அவரது சீடர் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து அசைத்துக் காட்ட தேரை அந்நீருக்குள் தாவியது. உடனே அகத்தியர் கபாலத்தை மூடி மூலிகை பூசினார். அம்மன்னன் தலைவலி நீங்கி நெடுங்காலம் வாழ்ந்தான். சீடரின் சமயோசித புத்தியை கண்டு மகிழ்ந்த அகத்தியர் இன்று முதல் நீ தேரையர் என்று அழைக்கப்படுவாய் என பாராட்டினார். அன்று முதல் அவர் தேரையர் என உலகத்தோரால் போற்றப்பட்டார்.
தோரண மலையின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகள் உள்ளன. வட்ட வடிவமாக இருக்கும் அந்தக் குழிகள் எல்லாம் அகத்தியர், தேரையர் கண்காணிப்பில் சித்தர்கள் மூலிகைகளை இடித்து மருந்து தயாரித்த இடங்கள் என சொல்கிறார்கள். இன்றும் பல சித்தர்கள் இங்கே உலாவி வருவதாக நம்பப்படுகிறது. தேரையரின் ஜீவ சமாதி இம்மலையின் ஒரு பகுதியில் உள்ளது.
இங்கு அகத்தியர், தேரையர் மற்றும் பல சித்தர்கள் வாழ்ந்த போது அவர்களது இஷ்ட தெய்வமாக முருகனை வழிபட்டனர். கால மாற்றத்தால் முருகன் சிலை அங்கிருந்த சுனை நீருக்குள் மூழ்கிக் கிடந்தது. பெரியவர் ஒருவரின் கனவில் தோன்றிய முருகன் நான் தோரண மலை உச்சியில் உள்ள சுனை நீருக்குள் இருக்கிறேன் என வலியுறுத்த அவர் அந்த சுனை நீரை அப்புறப்படுத்தி முருகன் சிலையை மீண்டும் தோரணமலையில் நிறுவினார். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக காட்சியளிக்கிறார். இச்செய்தி மக்களுக்கு சென்று சேர சாரை, சாரையாக மக்கள் அங்கு சென்று வழிபட ஆரம்பித்தனர்.
தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் கடையத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில் செக் போஸ்ட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் எழிலை ரசித்துக் கொண்டே மலையேறினால் இரு நதிகளுக்கிடையே அமைந்துள்ள தோரண மலையின் உச்சியில் உள்ள ஒரு குகையில் முருகன் அருள்பாலிக்கிறார்.
வெகு காலம் சித்தர்கள் வழிபட்டு பின்னர் சுனையில் மூழ்கி வெளிப்பட்ட அந்த முருகப்பெருமானை தரிசிக்க எண்ணி நாமும் தோரணமலைக்கு பயணப்பட்டோம். தென் காசிக்கு சென்று பின் தோரணமலை நோக்கிச் சென்றோம். எங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை காணக்கிடைக்கிறது. தோரணமலையின் அடிவாரத்தில் பாலமுருகன் எழுந்தருளியிருக்கிறார். அடிவாரத்திலிருந்து 926 படிகள் ஏறினால் உச்சியில் உள்ள குகையில் முருகனின் தரிசனம் நம் கண்களை நிரப்புகிறது.
தோரணமலையில் 64 சுனைகள் உள்ளன. ஒவ்வொரு சுனை நீரும் ஒவ்வொரு வித சுவையுடன், மருத்துவ குணமும் கொண்டிருக்கிறது. இங்கு நீராடினால் சரும நோய்கள் நீங்குவதுடன் பல வியாதிகளும் குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த சுனைகளில் உள்ள நீர் கடும் கோடை காலத்திலும் வற்றுவதில்லை என்பது இயற்கையன்னையின் ஒரு வித கொடை என்றே சொல்லலாம்.
குகை கோவிலுக்கு படியேறும் வழியெங்கிலும் அபூர்வ மூலிகைகள் நிறைந்த காற்றை சுவாசிக்கலாம். கரடு முரடான பாறைகளை வெட்டி சீராக்கி வழி அமைத்திருக்கிறார்கள்.
மலை மேல் ஏறியதும் உச்சியில் உள்ள ஒரு குகையில், கந்த புராணம் கூறும் முருகக் கடவுளின் 16 வடிவங்களில் முதன்மையான ஞான சக்தி வடிவமாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
தோரணமலையின் அடிவாரத்தில் ஸ்ரீ வல்லப விநாயகர் சன்னிதி, நவக்கிரக சன்னிதி, தனி சந்நிதியில் ஸ்ரீ குரு பகவான், ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், நாகர்களை தரிசிக்கலாம். மேலும் ஸ்ரீ கிருஷ்ணர், சிவபெருமானின் சுதை சிற்பங்களையும் வழிபடலாம்.
தோரணமலையில் இன்றும் ராமர் பாதம் உள்ளது. இது இந்த மலையின் மற்றொரு அதிசயமாகும். இம்மலையில் நின்ற படி ராமர் காணாமல் போன சீதா தேவியை தேடியுள்ளார். அப்போது அவரின் காலடித்தடம் இம்மலையில் பதிந்துள்ளது. இம்மலையில் உள்ள அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமரும், சீதா தேவியும் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்கர்களுக்கு கேட்டதையெல்லாம் அருளும் முருக பெருமானுக்கு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. கார்த்திகை, விசாகம் நட்சத்திரங்களின் போதும் மற்றும் செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் முருகப்பெருமானை வழிபட உகந்ததாகும்.
அடர்ந்த மரங்கள், பாறைகள், சம தளம் என மலையேறி முடித்த நாம் முருகப்பெருமானை தரிசித்து மகிழ்ந்தோம். முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நமக்கு காட்சியருளிகிறார். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
தோரணமலையின் உச்சியில் முருகக் கடவுளை தரிசித்துவிட்டு, இன்னும் சற்று மேலே ஏறினால் ஒரு குகை இருக்கிறது. உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது. இதனை கோரக்கர் குகை என்று சொல்கின்றனர். மூலிகையின் வாசம் குகையை நிரப்புகிறது.
நாங்கள் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து சுற்றிலும் உள்ள இயற்கையை ரசித்தபடி, மூலிகைக் காற்றை சுவாசித்து புத்துணர்வுடன் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.
இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த, சித்தர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தோரணமலைக்கு நீங்களும் ஒரு முறை சென்று சித்தர்களின் ஆசியையும், முருகபெருமானின் தரிசனத்தையும், மூலிகை கலந்த சுத்தமான காற்றையும் சுவாசித்து நலம் பெற்று வாருங்களேன்.
பயணம் தொடரும்....
அருமையான தகவல்கள்
பதிலளிநீக்குநன்றி...
நீக்குஅருமை. தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி...
நீக்கு