வெள்ளி, 31 டிசம்பர், 2021

வாழை இலை பரோட்டா

                    இந்த வாரம் நமது பரோட்டா பதிவில் வாழை இலை பரோட்டா வாசித்து ருசிக்கலாமா? பரோட்டா என்றாலே அது உடலுக்கு கெடுதி என்பதையும் தாண்டி பலருக்கு  பிடித்தமான உணவு என்றால் அது பரோட்டாதான். சிறு குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பரோட்டாக்கள் சாதா பரோட்டா என்பது மறைந்து இலை தம் பரோட்டா, சிக்கன் பரோட்டா, விருதுநகர் பரோட்டா என விதம் விதமான வகைகளில் தயார் செய்யப்படுகிறது. அதில் ஒரு புது வகைதான் இந்த வாழை இலை பரோட்டா.


                            வாழை இலையில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் ருசியாகவே இருக்கும், ஏனெனில் உணவின் சுவையை கூட்டும் தன்மை வாழை இலைக்கு இயற்கையாகவே உண்டு என்பது பலரும் அறிந்த செய்திதான். அத்தகைய வாழை இலையில் ஏற்கனவே ருசிமிக்க உணவான பரோட்டாவை வைத்து  வாழை இலையின் மணத்துடன் சற்றே வேக வைத்து எடுத்தால் ஆஹா... சுவையை பற்றி சொல்லவும் வேண்டுமோ?


                                பரோட்டாவில்  புது வகையான வாழை இலை பரோட்டாவிற்க்கு ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர். ருசி மிக்க இந்த பரோட்டா மதுரையில் இருந்து திருச்சி, சேலம்,கோவை என பல ஊர்களில் கிளை பரப்பி வருகிறது.


                            வாழை இலை பரோட்டாவானது  வாழை இலை மட்டன் பரோட்டா, வாழை இலை சிக்கன் பரோட்டா என பல வகை சுவைகளில் உங்கள் நாவுகளுக்கு மேலும் சுவை சேர்க்கும் உணவாக உள்ளது.


                            மெலிதான இரண்டு வாழை இலைகளை விரித்து விட்டு இலை முழுவதும் பரவலாக மட்டன் குழம்பை ஊற்றி அதன் மேல் பரோட்டாவை வைத்து பின் அதில் சிக்கன் துண்டுகளை கிரேவியுடன் சேர்த்து பரோட்டா முழுதும் பரவலாக வைத்து  அதன் மேல் இன்னொரு பரோட்டாவை வைத்து பின் அந்த பரோட்டாவின் மேல் சிக்கன் குழம்பை தளும்ப ஊற்றி வாழை இலையை மடக்கி வாழை நாரினால் கட்டி பரோட்டாக்  கல்லில் போட்டு இலை பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு வரும் வரை வேக வைத்து எடுத்து நம் முன்னே வைக்கிறார்கள்


                        வாழை இலையை பிரித்தவுடன் இலையின் மணமும், சிக்கன் மற்றும்  மட்டன் கலவையில் ஊறிய பரோட்டாவின் மணமும் சுகந்தமானதொரு நறுமணத்தை பரப்பி வெகுவாக பசியைத் தூண்டியது. சிக்கன் மற்றும்  மட்டன் குழம்பில் சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து  ஊறிய  பரோட்டாவை பிய்த்து ஒரு வாய் சாப்பிட நாவின் சுவை நரம்புகள் தூண்டப்பட்டு அற்புதமானதொரு சுவையை உணர்த்தின. இலை பரோட்டா நிமிடத்தில் காலியானது. 


                                    பரோட்டா நன்றாக சிக்கன் குழம்பில் ஊறி சாப்பிட மிகவும் நன்றாக இருந்தது. இந்த வகை பரோட்டா சாப்பாட்டு ரசிகர்களுக்கு நல்லதொரு சுவை மிக்க விருந்தாகும்.


                        வாழை இலை பரோட்டா பதிவை வாசிக்கும் போதே உங்களுக்கும் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறதல்லவா? நீங்களும் ஒரு முறை இந்த வகை பரோட்டாவை ருசித்து பாருங்களேன்.

பரோட்டா பதிவு தொடரும்...

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன