வியாழன், 28 ஜூலை, 2022

சிக்கன் பிரியாணி வீட்டில்

                          வணக்கம் இந்த வாரம் நமது சுவையான உணவுகள் பதிவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு  ருசிப்போமா? பிரியாணி என்று சொல்லும் போதே நாக்கில் சுவை நீர் அரும்புகிறதல்லவா? அசைவம் பிடிக்காதவர்களும் காளான் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி என பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். நாம் அசைவம் சாப்பிடுவோம் என்பதால் இன்று சிக்கன் பிரியாணி செய்யலாம் என முடிவு செய்தோம். 


                                    வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமையன்று சிக்கன் வாங்க மார்க்கெட்டிற்க்கு சென்றோம். சுற்றிலும் அசைவ விரும்பிகள் அனைவரும் அவரவருக்கு பிடித்த அசைவ வகைகளை (சிக்கன்,மட்டன்,மீன்,நண்டு,இறால்) வாங்கிக் கொண்டிருந்தனர். நாமும் அந்த ஜோதியில் கலந்து சிக்கனை 1 கிலோ வாங்கிக் கொண்டு நகர்ந்தோம். தனியாக லெக் பீஸ்களாகவும் நாலைந்து வாங்கிக்  கொண்டோம்.


                                    அடுத்த கட்டமாக வாங்கி வந்த சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவினேன். சீரக சம்பா அரிசியை சிறிது நேரம் அலசி விட்டு பிரியாணிக்கு தேவையான வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு மற்றும் அனைத்து மசாலா  வகைகளையும்  தயார் செய்து சிக்கனும் நன்றாக மசாலா கலவையில் ஊறி அதனுள் தன் சுவையை பொதித்த பின்,சீரக சம்பா அரிசியுடன் அசத்தலான சிக்கன் பிரியாணியின் வாசனை வீடு முழுவதும் நிரம்பலாயிற்று.


                                   சிக்கன் பிரியாணிக்கு  எப்போதுமே தொட்டுக் கொள்ள சிக்கன் கிரேவி நன்கு காரசாரமாக செய்து, அந்த மசாலாவுடன் வேக வாய்த்த முட்டையை பாதியாக வெட்டி சேர்க்க  பிரியாணியுடன் சாப்பிட சுவை தூக்கலாக வீட்டில் உள்ள அனைவருக்குமே பிடிக்கும். எனவே வாங்கி வந்த லெக் பீஸ்களில் சிலவற்றை வெங்காயம், தக்காளியுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதனுடன் சிக்கனையும் சேர்த்து நன்றாக வதக்கி சிக்கனில் உள்ள சாறு மசாலா கலவையுடன் இணைந்து சிக்கன் பிரியாணியின் வாசனையும், சிக்கன் கிரேவியின் மணமும் அக்கம் பக்கம் உள்ளவர்களை என்ன உங்க வீட்டில் இன்று பிரியாணியா? என கேட்கச் செய்தது.


                           வாசனை வீட்டை நிறைக்க குழந்தைகள் பசிக்குது என்றனர். நமக்கும் நல்ல பசிதான்.


                                  சிக்கன் பிரியாணியை, கிரேவியுடன் வாழை இலையில் பரிமாறி சாப்பிட மணமும், ருசியும்  இன்னும் கூடுதலாக இருக்கும். 



                               சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணிக்கு மட்டுமல்லாது ஆட்டுக் கறி பிரியாணிக்கும் தோதாக இருக்கும். கறி பிரியாணியோடு சிக்கன் கிரேவியை சேர்த்து சாப்பிட தால்சாவை விட சுவையாக எங்களுக்கு தோன்றும்.


                                   சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மற்றும் எந்த வகை பிரியாணியானாலும் அதற்கு தயிர் வெங்காயம் மிகச் சிறந்த காமினேஷன் என்பதால் வீட்டிலேயே உறை ஊற்றி வைக்கப்பட்ட கெட்டித்  தயிரில் பிரியாணிக்கு தோதான தயிர் வெங்காயம் ரெடியாயிற்று.


                 தயிர் வெங்காயம் நல்ல கெட்டியான பசுந்தயிரில் ஊறி அதுவும் ஒரு தனி விதமாக மணத்தது.


                                       சிக்கன் பிரியாணி தயாரானவுடன் வாழை இலையை விரித்து அதில் சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மசாலாவில் நன்கு ஊறிய முட்டை, தயிர் வெங்காயம் என அனைத்தும் பரிமாறி ஒரு வாய் எடுத்து சுவைக்க ஆஹா...  வாழை இலை மணத்துடன் சேர்ந்து பிரியாணியின் சுவை வெகுவாக என்னை ஈர்த்தது. குழந்தைகளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு அவர்கள் விருப்பத்திற்க்கு தட்டிலும் பரிமாறினேன்.


                               வீட்டில் அனைவருக்கும் சிக்கன் பிரியாணியின் சுவை மிகவும் பிடித்து போயிற்று. பிரியாணியுடன் சிக்கன் கிரேவி சேர்த்து ஒரு வாய், பின் முட்டை சேர்த்து, தயிர் வெங்காயம் சேர்த்து என தனித்தனியாக ருசி பார்த்து விட்டு, அனைத்தையும் சேர்த்து பிரியாணியுடன் ருசிக்க இதை எழுத்தாக வடிக்கும் போதும் சுவை நாவில் தித்திப்புடன் எழுகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை சிக்கன் பிரியாணி செய்து சுவைத்து விட்டு எழுதுங்களேன்.


ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு தொடரும்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன