புதன், 3 ஆகஸ்ட், 2022

சிவகாமியின் சபதம் (மனதைத் தொட்ட காவியம் நமது பார்வையில்) - பார்வை 2


                                 சிவகாமியின் சபதம் எனும் இந்த வரலாற்றுக்  காவியம் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு நினைவு பொக்கிஷம். திரு. கல்கி அவர்களால் எழுதப்பட்டு  நான்கு பாகங்களாக தொகுக்கப்பட்ட இந்தப்  புதினம் தொடர்கதையாக வெளி வந்த காலத்திலேயே பெரியதொரு வரவேற்பை பெற்றது. இந்தப்  புதினத்தை பலமுறை நான் படித்திருக்கிறேன். அதனைப்  பற்றிய எனது நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்தப்  பதிவை எழுதுகிறேன். இதன் முதல் இரண்டு பாகங்களை பற்றிய எனது நினைவு பொக்கிஷங்களை ஏற்கனவே உங்களோடு பகிர்ந்துள்ளதால் இந்த புதினத்தின் மூன்றாம் பாகம் பற்றிய எனது பார்வையினை உங்கள் முன் வைக்கிறேன்.



                                              சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம் பிஷுவின் காதல் எனும் தலைப்போடு தன் பயணத்தை தொடங்குகிறது. மூன்றாம் பாகத்தின் உள்ளே பிரவேசித்ததும் காஞ்சி நகரை பல நாட்கள் முற்றுக்கைக்கு உள்ளாக்கியும் கைப்பற்ற முடியாத காரணத்தால் சக்கரவர்த்தி புலிகேசியின் கடும் கோபத்தோடு தொடங்குகிறது. இந்த பாழாய் போன காஞ்சி நகரத்தில் ஒற்றர்களை தவிர யாருமேயில்லையா ? என குண்டோதரனை பார்த்து புலிகேசி கடுங்கோபத்தோடு வினவுவதும் அதற்கு குண்டோதரன் தான் ஒற்றனில்லை அம்மாவின் கையில் உலக்கை விழுந்து விட்டது அந்தக்  காயத்திற்க்கு மருந்து வாங்க போகிற வழிபோக்கன் என சொல்வதும் புலிகேசி மறுபடியும் கோபத்தோடு உண்மையைச் சொல்? எனும் போது குண்டோதரன் பயத்தோடு ஆம் ஐயா, உலக்கைக்குத்தான் காயம் பட்டது என உளறுவதும் அதற்கு புலிகேசி நகைப்பதும் நல்ல ஹாஸ்ய ரசத்தோடு எழுதப்பட்டு படிக்கின்ற நமக்கும் புன்னகையை ஏற்படுத்தும். 

                                     அதன் பின் புலிகேசி யானைகளின் மீதானதொரு பாலம் அமைத்து காவிரியின் அக்கரையை அடைந்து பாண்டியனைச்  சந்திப்பதும் இருவரும் காஞ்சியைக்  கைப்பற்றிய பின் செய்து கொள்ள வேண்டிய உடன்படிக்கையைப்  பற்றி பேசியானதும் புலிகேசி பாசறைக்கு திரும்புவதும் அதன்பின் சக்கரவர்த்தி மகேந்திர பல்லவருக்கு சமாதானத் தூது அனுப்புவதும், மகேந்திரர் அதை ஏற்று புலிகேசியை காஞ்சி நகருக்குள் விருந்தினராக வரவேற்று செய்யும் விருந்துபசாரங்களும் அது முடிந்து கோட்டையை விட்டு வெளியேறிய புலிகேசி காஞ்சியை கைப்பற்ற முடியாத கோபத்தையெல்லாம் அங்குள்ள மக்களின் மீது காட்ட எண்ணி தன் தளபதி சசாங்கனிடம் பல்லவ தேசத்தில் உள்ள பெண்களை எல்லாம் சிறை பிடித்து எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று விடும்படியும், சிற்பிகளை எல்லாம் ஒரு காலையும், கையையும், வெட்டி விடும்படியும் கட்டளையிட்டு விட்டு பெரும் படையோடு வாதாபி நோக்கி நகருவதும் என விறுவிறுப்பாகச்  செல்லும். நாகநந்தி பிஷுதான் புலிகேசியின் அண்ணன் என்பதும் விறுவிறுப்பைக்  கூட்டுகிறது. புலிகேசியின் விருந்துபசாரத்தில் நடனமாட வந்த சிவகாமி நடனம் முடிந்தவுடன் அங்கு மாமல்லர் இல்லையென்று வருந்தி தன் சிநேகிதி கமலியின் உதவியுடன் தந்தையோடு சுரங்கப்பாதையில் வெளியேறி சாளுக்கியத்தளபதி சசாங்கனிடம் மாட்டிக் கொள்ளும் தருணத்தில் நம் இதயத்திலும் என்னாகுமோ என்ற பரபரப்பும், துயரமும் எழுகின்றது.


                               புலிகேசி வரும் சமயம் நகருக்குள் இருக்க விரும்பாத மாமல்லரை பாண்டியனை புறங்காணும் பொருட்டு மகேந்திரர் போருக்கு அனுப்பி வைக்கிறார். போரில் வென்று திரும்பிய மாமல்லர் பல்லவ நாட்டில் நடைபெற்ற அக்கிரமங்களை காணச் சகியாது, மாமல்லபுரத்து அற்புத சிற்பங்கள் சேதமாகாமல்  தப்பியதா என பார்வையிட்டு விட்டு, ஆயனரின் சிற்பக் கூடத்திற்கு வந்து அங்குள்ள சிலைகள் சில பாழ்பட்டுக் கிடப்பதையும், மண்டபப்பட்டில் பத்திரமாக இருப்பார்கள் என தான் நினைத்த ஆயனர்  அங்கு கால் உடைந்து கிடந்த கோலத்தையும் பார்த்து அதிர்ந்து போய் நிற்பதும், சிவகாமி எங்கே என மாமல்லர் கேட்பதற்குள் ஆயனர் தன் அருமை மகள் சிவகாமி எங்கே? என வினவ மாமல்லர்  தலையில் இடி விழுந்தது போல துடித்துப் போகிறார். சிவகாமி சாளுக்கியர்களால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்ததும் பொங்கியெழும் மாமல்லர் படையெடுத்துப்  போக நினைக்க, போரில் மரண காயம் பட்ட சக்கரவர்த்தி மகேந்திரரின் நிலைமையும், அவரது பேச்சும் மாமல்லரைக்  கட்டுப்படுத்துகிறது. இறுதியாக மாறுவேடத்தில் வாதாபியில் உள்ள ஒரு மாளிகையில் சிவகாமியைச் சந்திக்கிறார்.

                            அதற்குள் சிறைப்பட்ட சிவகாமி சாளுக்கியர்களால் சொல்லணாத்  துயரை அனுபவிக்கிறாள். சாளுக்கிய சக்கரவர்த்தி தன் அரண்மனையில் நடைபெறும் ஒரு விழாவில் சிவகாமியை நடனமாட அழைக்க, சிவகாமி முடியாது என நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுகிறாள். இதனால் கோபமடைந்த புலிகேசி பல்லவ நாட்டில் கைதிகளாக பிடித்து வந்த மக்களுக்கு சாட்டையடி தண்டனை விதிக்கிறார். ஒரு நாள் பல்லக்கில் வீதி வலம் வரும் சிவகாமி கைகள் கட்டப்பட்டு சாட்டையடி காயங்களோடு நிற்கும் மக்களைக்  காக்க எண்ணி அங்குள்ள காவலர்களிடம் அவர்களை துன்புறுத்தாதீர்கள் என வேண்ட, காவலர்கள் அந்த மக்களில் சிலர் அடிமை வேலை செய்ய மறுத்ததும், சிலர் கலகம் செய்ததும் அதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி இந்த சாட்டையடித் தண்டனை விதித்ததாகவும், தாம் இவர்களை காக்க விரும்பினால் இங்கேயே நாற் சந்தியில் சூரியன் மறையும் வரை நடனமாடுமாறும், நாளைக்கும் இவர்களை காக்க விரும்பினால் தினமும் இப்படி நடனமாடுமாறு சொல்கின்றனர். அந்த அப்பாவி மக்களை காக்க எண்ணிய சிவகாமியும் தினமும் ஒரு நாற்சந்தியில் நடனமாடுகிறாள். புலிகேசி தன்னிடம் ஒப்படைத்த வேலையை முடித்து விட்டு வாதாபி திரும்பும் நாக நந்தி பிஷுவால் இந்த நடன வினிகை ஒரு  முடிவுக்கு வருகிறது.
 

சிவகாமி சபதம் ஏற்கும் கட்டம் 

                                    சிவகாமியின் இல்லத்திற்க்கு வருகை தரும் நாகநந்தி பிஷு தான் சிவகாமியை பல்லவ ராஜ்யத்தில் சேர்த்து விடுவதாக கபட நாடகமாடி, மாமல்லரை இகழ்ந்து பேசி சிவகாமியின் ஆத்திரத்தை தூண்டி விட்டு, இந்த வாதாபி நகரை எரித்து விட்டு, புலிகேசியை வென்று, மாமல்லர் தன் கைப்பிடித்து அழைத்துச்  செல்லும் நாள் வரை தான் வாதாபியை விட்டு நகர்வதில்லை என சிவகாமியின் வாயாலேயே சபதமேற்க வைக்கிறார். இப்படியாக இந்த நாவலுக்கு வாய்த்த சரித்திர பிரசித்தியான தலைப்பின் விளக்கத்தை சிவகாமியின் வாய் மொழியாக நாம் அறிகிறோம்.

                                   இந்த சபதத்தின் காரணமாக மாமல்லர் மாறுவேடத்தில் வந்து தன்னை அழைத்த போது, தான் செய்த சபதத்தைக்  கூறி மாமல்லரோடு சிவகாமி வர மறுக்கிறாள். தான் அவசியம் அந்த சபதத்தை நிறைவேற்றுவதாகவும், இப்போது தன்னுடன் வந்து விடும் படி மாமல்லர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிவகாமி மறுத்து விடுகிறாள். இதனால் மனத்தாங்கலோடு மாமல்லர் காஞ்சிக்கு திரும்புகிறார்.



                                            காஞ்சியில் மரண படுக்கையில் இருக்கும் மகேந்திரர், பல்லவ தேசத்துக்கு  சக்கரவர்த்தியாக மாமல்லரை முடிசூட்டிக் கொள்ளும்படியும், வாதாபி மேல் படையெடுக்க பாண்டியர்களோடு நட்பாக இருப்பது அவசியம், அதனால் பாண்டிய ராஜகுமாரியை மணம் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே, வேறு வழி காணாத மாமல்லர் திருமணத்திற்க்கு சம்மதிக்க, மகேந்திர சக்கரவர்த்தி மகிழ்ச்சியோடு, தன் அமைச்சர்களிடம் மாமல்லருக்கு திருமணம் நடைபெறப் போவதையும், அதே சமயத்தில் தளபதி பரஞ்சோதிக்கும் திருமணம் நடக்கும் என அறிவிப்பதோடு மூன்றாம் பாகம் முடிகிறது.




சிவகாமியின் சபதம் நான்காம் பாகம் அடுத்த பார்வையில்...
தொடர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன