வேணு பிரியாணி - இந்த உணவகம் பலருக்கும் பரிச்சயமான ஒன்று. திண்டுக்கல்லில் மிகவும் பிரபலமான உணவகம். இந்த ஊருக்கு வரும் பலரும் இந்தக் கடை பிரியாணியை ருசிக்காமலும், பார்சல் வாங்காமலும் சென்றதில்லை. இத்தகைய வேணு பிரியாணியின் ருசியை நம் நாவிலும் நிரப்புவோம், வாருங்கள் ...
பிரியாணி என்றாலே அதன் மணமும் ருசியும் ஒரு நிமிடமாவது நமது நினைவில் எழுந்து பசி உணர்வை கிளப்பும். அதிலும் பசி மிகுந்த மதிய நேரத்தில் பிரியாணியை நம் முன்னே வைத்தால் ஆஹா அந்த உணவின் சுவையை சொல்லவும் வேண்டுமோ?
பிரியாணியில்தான் எத்தனை வகைகள். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, பிஷ் பிரியாணி, முட்டை பிரியாணி என பிரியாணியின் வரிசை நீண்டு கொண்டே செல்லும். சுவை மிக்க இந்த பிரியாணியை ருசிக்க வேணு பிரியாணி உணவகத்திற்க்கு சென்றோம். மதிய நேரமாதலால் வழக்கம் போல கார்கள் வரிசை கட்டி நின்றன. ஒரு வழியாக நாம் ஒரு டேபிளை பிடித்து அமர்ந்தோம்.
ஆஹா, கடைக்குள் நுழைகையிலேயே பிரியாணியின் மணம் நம்மை சுண்டி இழுக்க உள்ளே அமர்ந்தவுடனே எங்கே பிரியாணி? எங்கே பிரியாணி? என மனம் வெகுவாகத் தேட நாம் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணி இலைக்கு வந்து சேர்ந்தது. ஒரு வாய் எடுத்து ருசிக்க சுவை அந்த பசி நேரத்தில் அற்புதமாக நாவில் எழுந்தது.
அதனுடன் நண்டு கிரேவி ஆர்டர் செய்ய இலையில் அமர்ந்த நண்டு மசாலா மணத்துடனும், வாசனையுடனும் பார்க்கும் போதே கண்கள் வழியே வாய்க்குள் சென்றது.
இதுதான் வேணு பிரியாணி உணவகத்தின் முக்கியக் கிளை(main branch). தீயணைப்பு நிலைய சாலையில் இருந்து நேராக வந்தால் வேணு பிரியாணி உணவகத்தை அடையலாம்.
வாழை இலை நிறைய மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, தயிர் வெங்காயம், மட்டன் கோலா உருண்டை, சில்லி சிக்கன் என நிரப்பி அதனை ரசித்துக் கொண்டே ஒவ்வென்றாக பிரியாணியுடன் சேர்த்து சுவைக்க ருசியும்,மணமும் நம்மை சுண்டி இழுத்தது .
பிரியாணியை வாழை இலையில், தயிர் வெங்காயத்துடன் அமர்ந்திருப்பதை பார்க்கும் போதே ருசிக்கத் தோன்றுகிறதல்லவா?
மட்டன் பிரியாணி அதற்கே உரிய மணத்துடனும், நிறத்துடனும், ஆங்காங்கே ஆட்டுக்கறி துண்டுகளுடன் பிரியாணி பிரியர்களின் வருகைக்காக தயாராக வீற்றிருக்கிறது.
வஞ்சிரம் மீன் துண்டு பிரியாணியுடன் சேர்த்து சுவைக்க ஆசைப்பட்டு ஆர்டர் செய்ய மசாலாவுடன், எண்ணையில் பொரித்த மீன் துண்டு வாழை இலையில் அதற்கே உரிய மணத்துடன் வந்து சேர்ந்தது. ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க மீன் துண்டு வேகமாக வாய் வழியாக வயிற்றுக்குள் சென்று மறைந்தது. அதன் சுவை மட்டும் நம் நாவிலேயே நின்றது.
பிரவுன் நிறத்தில் பொரிக்கப்பட்டு இலையில் காட்சியளிக்கும் மட்டன் கோலா உருண்டை பிரியாணியின் சுவைக்கு, இன்னும் சுவை கூட்டியது.
பிரியாணி அண்டா, அண்டாவாக நிரப்பி வைக்கப்பட்டு பார்சல்களாகவும், சாப்பிட அமர்ந்திருந்தவர்களின் இலைக்கும் சென்று நிமிடத்தில் காலியாகிக் கொண்டிருந்தது.
சிக்கன் கிரேவி மசாலா மணத்துடனும், அளவான காரத்துடனும் வெகுவாக நம்மை ஈர்த்தது. சாப்பிட்டு வந்து இந்த பதிவு எழுதும் போதும் நினைவில் எழுந்த சுவை நம்மை வெகுவாக சுண்டியிழுக்கிறது.
பிரியாணி சாப்பிட்டவுடன், கூடவே கறி தோசையும் ருசிக்க அதற்கே உரிய வியங்சனங்களுடன் சேர்ந்து சுவையுடன் இருந்தது.
முட்டை கலக்கி, முட்டை ஆம்லெட், வேக வைத்த முட்டை என அனைத்தும் வெகு சுவையாக தயாரிக்கப்பட்டு நமக்கு பரிமாறப்படுகிறது.
பிரியாணி சுவையாக இருக்க, சிக்கன் கிரேவி, கலக்கி, வஞ்சிரம் மீன் ப்ரை, கறி தோசை, மட்டன் சுக்கா என அனைத்தும் வாழை இலையில் வரிசை கட்டி வர திருப்தியாக சாப்பிட்டு முடித்து எழுந்தோம்.
வேணு பிரியாணி உணவகத்தில் பிரியாணியுடன் இணைந்து சுவைக்கு சுவை சேர்க்க சிக்கன் கிரேவி , மட்டன் சுக்கா, மூளை ப்ரை, ஈரல் ப்ரை, கறி தோசை, முட்டை கலக்கி, மட்டன் சாப்ஸ், காடை கிரேவி இன்னும் பல மெனுக்கள் நமக்கு வழங்கப்படுகிறது.
இன்றைய உணவக அனுபவம் உங்களுக்கும் வாசிக்க சுவையாக இருந்ததல்லவா? மற்றொரு பதிவில் சந்திப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன