ஒரு அந்தி மாலை நேரம், ஆதவன் தன் பயணத்தை முடித்துக் கொண்டு ஆரஞ்சு நிற பந்தாய் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்த வேளையில் தஞ்சை நகருக்குள் பிரவேசித்தேன். தஞ்சை பெரிய கோவிலையும், அதில் உள்ள சிற்பங்களையும், ஓவியங்களையும் காண வேண்டும், சோழர்களின் வரலாற்று காலத்தை நுகர வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே இப்பயணத்தை மேற்கொண்டேன்.
வெகு நாட்களாகவே தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இன்று நிறைவேற தஞ்சை நோக்கி பயணப்பட்டேன். மதிய நேரம் சாப்பிடாமலே கிளம்பியதால் மாலையில் வெகுவாக பசிக்க ஆரம்பித்தது. அருகில் உள்ள உணவகத்தில் ஒரு தோசையும், காப்பியும் அருந்தி விட்டு பயணத்தைத் தொடர்ந்தேன். தோசையுடன் சாம்பார், தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி என அதற்க்குரிய வியங்சனங்களுடன் சாப்பிட நன்றாக இருந்தது.
தஞ்சை மண்ணில் காலை வைத்தவுடனேயே அதனை தலை நகராய் கொண்டு பல காலம் சோழ தேசத்தை ஆண்ட சோழ மன்னர்களின் நினைவு வெகுவாய் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வாழ்ந்த பூமியில் இப்போது நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை தரணியெங்கும் செழித்தோங்க சோழர்கள் ஆட்சி செய்த காலம் எவ்வாறாக இருந்திருக்கும் என்ற எண்ணமே மனமெங்கும் மேலோங்க கோவிலுக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தேன். ஆஹா என்னவொரு அற்புதமான உணர்வு இது. ராஜராஜ சோழர் பாதம் பதிந்த இந்த அற்புதமான கற்கோவிலில் நாமும் நின்று கொண்டிருக்கிறோம் என்பதே ஒரு வித சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது.
நந்தி பகவானை வணங்கி விட்டு, உள்ளே சென்று சிவலிங்கத்தை தரிசித்தேன். தீபம் காட்டப்பட தொட்டு வணங்கி விட்டு வெளியே வந்து கோவிலைச் சுற்றி மெல்ல நடந்தேன்.
ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று வணங்கி விட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கற்களாலே மாயா ஜாலம் நிகழ்த்திய அந்த சிற்பிகளை மனதில் எண்ணிக் கொண்டேன். நான் வாசித்த உடையார் நாவலும், அதில் கோவில் உருவான விதம் விளக்கப்பட்ட வரலாறும் என் எண்ணங்களில் மேலோங்கி நின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன