செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

கங்கை கொண்ட சோழன் (மாமன்னர் இராஜேந்திரரின் சரித்திரம் )

 கங்கை கொண்ட சோழன் நாவல் 

         இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுமளவுக்கு ஆழ்ந்த வரலாற்றறிவை நான் பெறவில்லையெனினும் எனது ரசனையை உங்களுடன் பகிர்வதற்காகவே இப்பதிவை எழுதுகிறேன்.

        முதலாம் இராஜேந்திரரின் கடல் கடந்த வெற்றியையும் கங்கை கரையோர நாடுகளை வென்று பகீரதன் தவம் செய்து கொண்டு வந்த கங்கையை தன் தந்திரத்தாலும் போர் திறமையாலுமே வென்று சோழ கங்கம்  என்ற ஏரியை உருவாக்கி வடக்கிலிருந்த கங்கையை தெற்கே கொண்டு வந்து தான் அமைத்த ஏரியில் அந்த நீரை நிரப்பிய அற்புதமான  ஒரு  மாமனிதனின் (தமிழரின் நாகரிகத்தை உலகமே அறிந்து வியக்க வைக்குமளவு சாதனைகள் பல புரிந்த அற்புதமானதொரு தலைவன்) வரலாற்றை தமிழர்கள் அறிந்திட சுவைபட சொல்லப்பட்ட ஒரு காவியம்.




                    நான்கு பாகங்களாக வெளி வந்த இந்த வரலாற்று புதினத்தில் போர் வீரர்களின் வாழ்க்கையும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசாங்கம் சார்பாக செய்யப்படும் உதவிகளும் நன்கு சொல்லப்பட்டுள்ளன.  போர் என்றால் அதில் பங்கு கொள்பவர்கள் போர் வீரர்கள் மட்டுமல்ல. கம்மாளர்களும், தச்சர்களும், மருத்துவர்களும், காடுவெட்டிகள் எனப்படும் பாதை போடுவோரும் பஞ்சமரும் என பலதரப்பட்ட மனிதர்களின் பங்களிப்பும் ஒரு போருக்கு அடிப்படை தேவையானது என விவரிக்கிறது.




                          முதல் பாகத்தில் இராஜேந்திரசோழரின் அறிமுகம் தஞ்சை பெருவுடையார் கோவிலில் மாறுவேடத்தில் சாதாரண மனிதராக அழகுற ஆரம்பிக்கப்பட்டு அவருடைய சுபாவத்தோடு இணைந்து நாமும் அந்த அற்புதமான வரலாற்று காலத்துக்குள் பயணிக்கிறோம். மன்னருடனேயே தொடர்ந்து பயணிக்கும் தளபதி அருண்மொழியின் பாத்திரம் கடல் போரில் ஸ்ரீ விஜயத் தீவினை வென்ற பின் சில காலம் கழித்து இராஜேந்திரர் தன் மகனை அரசனாக்கி விட்டு காஞ்சிக்கு இடம் பெயரும் வரை தொடர்கிறது. அதே போல் வந்தியத்தேவரின் கதாபாத்திரமும் மன்னர் தன் தங்கை குந்தவையின் பிரச்சனையில் இந்த முடிவைத்தான் எடுப்பார் என அவர் அருண்மொழியுடம் விவரிக்கும் நிலையும் அதே முடிவை மன்னர் அறிவிக்கும் போது இராஜேந்திரரை அவர் எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறார் என அருண்மொழி நெகிழும் தருணம் வந்தியத்தேவரது சிறப்பை நன்கு உணர்த்துகிறது.



                      மன்னர் இராஜேந்திரர் பரவையாருக்காக அவரை சந்தித்த இடத்தில் கல்வெட்டு நிறுவியதும் திருவாரூர் கோவிலை கற்றளியாக மாற்றியதும் பரவையார் உயரத்துக்கு விளக்கு செய்து அதை கோவிலுக்கு அளித்ததும் பரவையாரை அவர் மிகவும் நேசித்ததை நமக்கு நன்கு உணர்த்துகிறது.  
                    மன்னரின் மகனாக உலா வரும் மனுக்குல கேசரியின் பாத்திரம் இளமையிலேயே மறைந்து விட்டாலும் சிற்பியார் ரவி வடித்த சேயோன் சிலை வடிவத்தில்  நம் மனதில் என்றும் உயிருடன் உலா வந்து கொண்டே இருக்கிறது. மேலும் அந்த காலத்து மக்களின் சமூக வாழ்க்கையை மருத்துவர், கருமர், வேளாளராக வரும் சீராளன் மற்றும் பிராமணர்கள் பாத்திரங்களின் வாயிலாக நன்கு உணர முடிகிறது.




                         கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் அற்புதமான நகரமும் கோவிலும் படிப்படியாக உருவான வரலாற்றையும் அதனுள் கற்சிலைகளும், உற்சவர் திருமேனியான பஞ்சலோக சிலைகளும் மற்றும் கோவிலின் கருவறைக்குள்ளே வீற்றிருக்கும் சிவபெருமானின் அற்புத திருமேனி எழுப்பப்பட்ட விதமும் நன்கு விளக்கி சொல்லப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து சற்று விலகி அரண்மனையும் அரண்மனையிலிருந்து சற்று தூரம் தள்ளி  துளசி மாடங்களோடு கூடிய பிராமணர் இல்லங்களும்  அதற்கடுத்த சுற்றில் வணிகரின் இல்லங்களும் அதற்கடுத்ததாக அமைக்கப்பட்ட வேளாளரின் இல்லங்களும் பின்பு பஞ்சமர்களுக்கான இல்லங்கள் என கங்கை கொண்ட சோழபுரம்(ஜெயங்கொண்டம்) எனும் தலைநகரம் கட்டமைக்கப்பட்ட விதத்தை நமக்கு அருமையாக விளக்குகிறது. 




                           கங்கை கொண்ட சோழபுரம் உருவான வரலாற்றோடு சேர்ந்து சோழ கங்கம் (இன்றைய பொன்னேரி) எனும் ஏரி  அமைக்கப்பட்ட விதத் தையும் அதன் பெயர் காரணத்தையும் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது.  ஏரியை நினைக்கும் போதே அது உருவாக காரணமான தெய்வ சிலை வடிவங்கள் (இன்று செங்கமேடு எனும் கிராமத்தில் உள்ள காளி சிலைகள் ) நம் மனதுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. 

கடல் போரின் வெற்றியும்(ஸ்ரீவிஜயத் தாக்குதல்) மற்றும் மாமன்னர் இராஜேந்திரரின் மறைவும் அடுத்தப்  பதிவில் தொடரும்  ......

நன்றி ...


2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன