புதன், 17 நவம்பர், 2021

குடல் குழம்பு (ஞாயிறு ஸ்பெஷல்)

                        இந்த வாரம் நமது அபியின் பயணங்களில் பதிவுகளில் குடல் குழம்பு சாப்பிடலாமா? குடல் வாங்கிய அனுபவத்தையும், சமைத்து சாப்பிட்ட தருணங்களையும் உங்களுடன் பகிரவே இப்பதிவு .... 


                                ஞாயிறன்று வாராவாரம் கறிக்  குழம்பே சாப்பிட்டு போரடிப்பதாக வீட்டில் அனைவரும் கூறவே ஆட்டுக் கறி குழம்புக்கு பதில் என்ன சமைக்கலாம் என யோசித்த போது ஆட்டில்தான் எத்தனை இறைச்சி வகைகள்? எனத் தோன்றியது. தலைக்கறி குழம்பு, மூளை பிரட்டல்,  குடல் குழம்பு, நுரைஈரல், ஆட்டுக்கால் பாயா, ஈரல் வறுவல், சுவரொட்டி, நெஞ்செலும்பு சூப், ஆட்டு ரத்த பொரியல்  என வகை வகையான அசைவ உணவுகள்.


                                    இந்த வாரம் குடல் வாங்கி சமைத்து சாப்பிடலாம் என அனைவரும் விரும்பவே குடல் வாங்க சந்தைக்கு  சென்றோம். ஞாயிற்றுக் கிழமையாதலால் அனைத்து அசைவ கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. ஆட்டுக்கறி வாங்குவோரும், சிக்கன் கறி மற்றும் மீன் வாங்குவோரும் என மக்கள் தங்களுக்கு தேவையான அசைவ வகைகளோடு, தக்காளி, வெங்காயம் என வாங்கிக் கொண்டு நகர்ந்தனர். ஆம், அது கொஞ்சம் போக்குவரத்து நிறைந்த சாலையாதலால் பல வகை வண்டிகள் வரிசை கட்டி நிற்க சிறிது சிறிதாகவே நகர முடிந்தது.



                                       நாம் வழக்கமாக வாங்கும் இந்தக் கடையில் குடலை சுத்தம் செய்து வெட்டிக்  கொடுத்து விடுவர். வீட்டுக்கு கொண்டு சென்று மஞ்சள் தூள் கலந்து  நன்றாக இருமுறை கழுவி சுத்தம் செய்து விட்டு வேக வைத்து சூப் எடுத்தோம். சூப்பில்  குடல் துண்டுகள் ஆங்காங்கே மிதக்க சற்று மஞ்சள் நிறத்துடன் சுவையாக இருந்தது.


                                    குடலை வேக வைத்து சூப் எடுத்தவுடன், வெங்காயம் சற்று பொன்னிறத்துடன் வறுத்து  அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வாணலியில் வதக்கி பின் அரைத்து வைத்த  மசாலா கலவையுடன் குடலையும் சேர்த்து குழம்பு கொதிக்க விட ஆஹா வாசனை வீடே மணத்தது. 


                            குடல் குழம்பு சற்று தண்ணியாக வைத்து விட்டு, குடல் கிரேவியாக செய்ததும் இந்த முறை நன்கு சுவையுடன் வந்தது.
,

                                            குடல் குழம்பு, சாதம், முட்டை என வாழை இலையில் பரிமாறி விட்டு பார்க்கும் போதே வயிறு பசித்தது. எங்கள் பாட்டி சொல்வார்கள், அவர்கள் சிறு பிள்ளையாக இருந்த போது அசைவம் என்றாலே எங்கள் வீட்டில் குடல் குழம்புதான், அம்மியில் அரைத்து அந்த மசாலாவை சேர்த்து குடலுடன் கொதிக்க விடும் போது சட்டியிலேயே எடுத்து எடுத்து சாப்பிட்டு பாதி குடல் தீர்ந்து விடும். எங்கள்  வீட்டில் அக்கா, தம்பிகளோடு பிள்ளைகளே பத்து பேர் என்பதால் கறி வாங்குவதை விட குடல்தான் அடிக்கடி வாங்குவோம், அனைவரும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட சுவை இன்னும் கூடுதலாக தெரியும் என்பார்கள்.


                                                குழம்பில் உள்ள குடல் ஒரு வித சுவையுடனும், கிரேவியோடு உள்ள குடல் வேறு வகை சுவையுடனும் மணத்தது.




                                                குடல் குழம்போடு சேர்த்து கறி கிரேவி ஒரு தனி வித சுவையில் சாப்பிட நன்றாக இருந்தது. கறி கிரேவிக்கு சிறிதளவே வெங்காயம், தக்காளி மசாலாக்களுடன் நன்றாக சுண்ட விட குழம்பின் சுவையும், கறியின்  சுவையும் சேர்ந்து வீடே மணம் வீசி இந்த வார ஞாயிறை சுவை மிகுந்ததாக மாற்றியது. 

     தொடரும்....

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன