வியாழன், 13 அக்டோபர், 2022

சிவகாமியின் சபதம் (மனதைத் தொட்ட காவியம் நமது பார்வையில்)

                                            சிவகாமியின் சபதம் என்ற இந்த வரலாற்றுக் காவியம் பல்லவ சாம்ராஜ்யத்தின் வரலாற்றையும், பெருமையையும் சொல்லும் அதே நேரத்தில் சிவகாமியின் மனதில் மாமல்லரின் மேல் பொங்கி எழும் காதல் உணர்வுகளையும், நடனக்கலை(பரத நாட்டியம்) மீது அவள் கொண்ட பிரேமையையும், மாமல்லபுரத்தில் உள்ள அற்புத சிற்பங்கள் உருவான கதையையும், நம் கண் முன்னே எழுந்தருளச் செய்யும் அற்புதமானதொரு படைப்பு(காவியம்). இந்தக்  காவியத்தை படித்து முடித்த பின் எந்தவொரு நடனச் சிற்பத்தை பார்த்தாலும் சிவகாமியின் நினைவு மனதில்  அலையாய் எழும்பிக் கொண்டிருக்கிறது.


                                     நீல வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுத கிரணங்களை பொழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடி கொண்டு  விளங்கியது எனும் ஆசிரியரின் கவித்துவமான வரிகளை படிக்கும் போதே நமக்குள் கற்பனை ஊற்று பெருக ஆரம்பிக்கிறது. சிவகாமியின் சபதம் நாவலில் ஆசிரியரின் முன்னுரை இவ்வாறு ஆரம்பித்து இக்கதை எழுத தோன்றிய வரலாற்றையும் எழுதிய அனுபவத்தையும் கல்கி அவர்கள் அழகாக விவரித்திருப்பார். ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லியது. ஒவ்வொரு சிற்பமும் ஒரு இதிகாசத்தை எடுத்துரைத்தது என்ற வரிகளை வாசிக்கும் போதே  நமது உள்ளமும் மாமல்லபுரம்  என அழைக்கப்படும் அந்த அற்புத சிற்பக் கோவிலை பார்க்க எண்ணி ஏங்குகிறது.


                              நான்கு பாகங்களாக எழுதப்பட்ட இந்த நாவலின் முதல் பாகம் பரஞ்சோதி யாத்திரை என்ற பெயருடன் தொடங்குகிறது.  பரஞ்சோதி  வழிப்பயணத்தில் நாகநந்தி பிஷுவை  சந்திப்பதும் அவரது உதவியுடன் காஞ்சி நகருக்குள் பிரவேசிப்பதும் அங்கு மதம் பிடித்த யானையின் பிடியில்  சிக்க இருக்கும் ஆயனரையும், சிவகாமியையும் காப்பாற்றுவதும் என பக்கங்கள் மறைந்து தோற்றங்கள் நம் கண் முன்னே நிழலாட  வரலாற்றுக்  களம் விறுவிறுப்பாக நகர்ந்து செல்லும். 

                                               பின் பரஞ்சோதி நாகநந்தி பிஷுவுடன் சென்று ஆயனரிடம் அறிமுகமாவதும் ஆயனரின்(சிற்பி) விருப்பத்திற்காக அஜந்தா வர்ண ரகசியத்தை அறிய பயணப்படுவதும் அங்கு வழிப்பயணத்தில் வஜ்ர பாகுவாக அறிமுகமாகும் மகேந்திர பல்லவ  சக்கரவர்த்தியின்  சிநேகத்தை சம்பாதிப்பதும் அவர் வாய்மொழி சொல்லும் கதையின் மூலமாக மயூரசன்மனின் வரலாற்றை அறிவதும், தான் கொண்டு சென்ற ஓலையுடன் புலிகேசியை சந்திப்பதும் அந்த ஓலை சித்திரம் சம்பந்தப்பட்டதல்ல, தான் ஏமாற்றப்பட்டோம் என அறிவதும் பின் சாளுக்கிய வீரர்களின் பிடியிலிருந்து மகேந்திர பல்லவரின் உதவியுடன் தப்பித்து இறுதியாக பரஞ்சோதி பல்லவ  சேனையில் சேர விரும்பி பல்லவ சைனிய பாசறையை சென்றடைவதோடு முதல் பாகம் முடிவடைகிறது.


                      இரண்டாம் பாகம் பரஞ்சோதி பல்லவ சேனையில் சேர்ந்து படைத்  தளபதியாக உயர்ந்து காஞ்சி நகரை முற்றுகைக்கு ஆயத்தப்படுத்த காஞ்சிக்கு வருவதும் அங்கு மாமல்லரோடு சிநேகமாவதும் பின் அங்கு நிகழும் நிகழ்வுகள் பல பல.
         சிவகாமி மாமல்லர் மீது கொண்ட மனத்தாங்கலால் நாகநந்தி பிஷுவின் சொல்லுக்கு செவி சாய்த்து தன் தந்தை ஆயனரோடு வெளியூருக்கு பயணப்படுவதும், வழியில் அசோகபுரத்தில் தங்கியிருக்கும் போது புள்ளலூர் போரில் மாமல்லரின் வெற்றிச்  செய்தியை அறிவதும், அங்கு வெள்ளத்தில் மாட்டிக் கொள்வதும், பின்னர்  மாமல்லர் மற்றும் குண்டோதரன் உதவியுடன் வெள்ளத்திலிருந்து தப்பி மண்டபப்பட்டில் கரை சேர்வதும் அங்குள்ள கோவிலில் அரங்கேறும் சிவகாமியின் நடன வினிகையும், முடிவாக மாமல்லர் புறப்படும் சமயத்தில் என்றும் உன்னை மறக்க மாட்டேன் என சிவகாமிக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டு தளபதி பரஞ்சோதியோடு காஞ்சி நகர் சேர்வதும் என புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் படிக்கத் தோன்றும்.


                           மாமல்லர் மண்டபப்பட்டு கிராமத்திலிருந்து புறப்பட்ட பின் சிவகாமி சக்கரவர்த்தியை அங்கு சந்திப்பதும் அவர் சிவகாமியிடம் பல்லவ தேசத்தின் நன்மைக்காக மாமல்லரை மறந்து விடுமாறு எடுத்துச்  சொல்வதும் அதற்கு சிவகாமி தன்னால் மாமல்லரை மறக்க முடியாது பதிலாக இந்த நிமிடமே தன்னை கொன்று விடுமாறு வற்புறுத்துவதும், பின் மகேந்திரர் அவ்விடம் விட்டு நீங்கி காஞ்சிக்கு செல்வதும் அங்கு மகேந்திரர் சிறைப்பட்டார் என மாமல்லரிடமும், மந்திரி சபையில் உள்ளோரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும் நாகநந்தியை மகேந்திர பல்லவரே  அந்த கணத்தில் சரியாக காஞ்சி நகர் வந்து சேர்ந்து  அந்த நாகநந்தி பிஷுவை சிறைப்படுத்துவதும், பின் காஞ்சி நகர் கோட்டை  மதில்கள் அடைக்கப்படுவதோடு இரண்டாம் பாகம் முடிவடைகிறது.


                         சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம் பற்றிய நமது பார்வையை அடுத்த பதிவில் காணலாம்... இதுவரை இப்பதிவை தொடர்ந்து படித்த வாசிப்பை நேசிக்கும் உள்ளங்களுக்கு  எனது நன்றிகள் பல பல ...

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன