- ஜீராவில் ஊறி மண மணக்கும் பால் பன் திண்டுக்கல் மாநகரம் கோபால்பட்டி என்ற ஊரின் சுவை மிகுந்த தயாரிப்பாகும்.
- உணவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு.
- திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் இட்லி, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இப்படி பல வகை உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் பெருமை சேர்க்கின்றன.
- அதுபோலவே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த கோபால்பட்டி என்ற சிற்றூரில் தயாரிக்கப்படும் “பால் பன்” என்ற உணவு மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது.
- கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பிலேயே 45 வருட பாரம்பரியம் கொண்ட “பால் பன்" கடை உள்ளது.
- இந்த உணவானது திண்டுக்கல் பகுதி மட்டுமின்றி மதுரை, தேனி முதலான பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது.
- ஒரு கிலோ மைதாமாவில் நூறு மில்லி தயிர் விட்டு பின்னர் போதிய அளவு தண்ணீர் மற்றும் சோடா உப்பைக் கலந்து நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட வேண்டும்.
- பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை நல்லெண்ணெயில் பொரித்து எடுத்த பின்னர் சர்க்கரைப் பாகில் இட்டு சற்று நேரம் கழித்துப் பரிமாற வேண்டும்.
- சிலர் பாகில் ஏலக்காயும் சுக்கும் வாசனைக்காக சேர்ப்பர்.
- முற்காலத்தில் பாகு தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனைவெல்லத்தை உபயோகித்தார்கள்.
- தற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்து போனதன் காரணமாக வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.
- கோபால்பட்டியில் பலர் இந்த பால் பன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மேலும் திண்டுக்கல்லிலும் பல இடங்களில் பால் பன் கிடைக்கிறது.
- தேனி, கம்பம், கூடலூர், மதுரைப் பகுதிகளில் பலர் பால் பன்னை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
- பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் இதன் சுவை அலாதியானது.
- கோபால்பட்டி திண்டுக்கல்லில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
- 5 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பால் பன்னை கோபால்பட்டி வழியாக செல்லும் அனைவரும் வாங்கி சுவைக்கத் தவறுவதில்லை.
- பார்சலாகவும் சென்று கொண்டே இருக்கும்.
- திண்டுக்கல்லுக்குச் சென்றால் மறக்காமல் பால் பன்னை வாங்கி சுவைத்து மகிழுங்கள்.